இன்றைய இறைமொழி
திங்கள், 17 மார்ச் ’25
தவக்காலம் இரண்டாம் வாரம் – திங்கள்
தானியேல் 9:4-11அ. திருப்பாடல் 79. லூக்கா 6:36-38
அளவை!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் ஒரு சொல்லோவியம் ‘அளவை’ (கிரேக்கத்தில் ‘மெட்ரோன்‘ – இச்சொல்லே ‘மீட்டர்’ என்னும் ஆங்கிலச் சொல்லின் ஊற்றாக அமைகிறது). இயேசு தம் சமகாலத்து நிகழ்வு ஒன்றைப் பயன்படுத்தி வாழ்க்கை பாடம் தருகிறார். அன்றைய நாள்களில் வேலைக்கான கூலி சில இடங்களில் ‘தெனாரியம்’ என்னும் நாணயமாகக் கொடுக்கப்பட்டாலும், பல இடங்களில் ‘உப்பு, கோதுமை, பார்லி’ என்று உணவுப் பொருள்களாகவே கொடுக்கப்பட்டன. வேலை செய்கிறவர் உரிமையாளருக்குத் திருப்தியாக வேலை செய்தால், உரிமையாளர் கோதுமை அளவையை எடுத்து, கோதுமையை அள்ளி நிறைத்து, ‘அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி’ கூலிக்காரரின் ‘மடியில்’ போடுகிறார். ஏனெனில், கைகள் போதாது! எந்தவொரு குறையுமின்றி ஈடு செய்யப்படுகிறது என்பதே இங்கே சொல்லப்படுகிறது.
‘அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி’ போடுவதற்கு உண்மையிலேயே தாராள உள்ளம் வேண்டும். தாராள உள்ளத்தோடு கொடுப்பவர் மற்றவரின் தாராள உள்ளத்தை ஈர்க்கிறார் என்று பாடம் தருகிறார் இயேசு. மேலும், இயேசு, ‘நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்!’ என்கிறார். இயேசு சொல்லும் இந்தக் கூற்று அவருக்கே பொருந்தவில்லை என்பதை அவருடைய சிலுவைச் சாவு நமக்குச் சொல்கிறது. அவர் மன்னிப்பையும் இரக்கத்தையும் அன்பையும் அளந்தார். ஆனால், அவருக்கு அளக்கப்பட்டதோ வெறுப்பும் நிராகரிப்பும் பகைமையும்தான். இயேசுவுக்கு மட்டுமல்ல, ஆபேல், மோசே, யோபு என எல்லாருக்கும் வாழ்க்கை அப்படித்தான் அளந்தது. கடவுளுக்கு ஏற்புடைய பலி செலுத்திய ஆபேல் அவருடைய சகோதரர் காயினால் கொல்லப்படுகிறார். காயின் பற்றி ஆபேலிடம் கடவுள் ஏதாவது ஓர் எச்சரிக்கையாவது கொடுத்திருக்கலாம். இஸ்ரயேல் மக்களை நாற்பது ஆண்டுகளாகத் தூக்கிச் சுமந்த மோசேக்கு ஆண்டவராகிய கடவுள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் அனுமதி மறுக்கிறார். பலியும் புகழும் மதிப்பும் கடவுளுக்குச் செலுத்திய யோபு புண்களால் வதைபடுகிறார்.
நம் வாழ்வியல் அனுபவங்களும்கூட இப்படி இருக்கலாம்!
‘நாம் அளக்கும் அளவையைக் கொண்டு யாரும் நமக்கு அளப்பதில்லை!’
நாம் காட்டும் அன்பை, இரக்கத்தை, பிரமாணிக்கத்தை நமக்கு யாரும் காட்டுவதில்லை.
இயேசுவின் சொற்களை எப்படிப் புரிந்துகொள்வது?
நாம் காட்டும் அன்பையும் இரக்கத்தையும் நாம் திரும்பப் பெற்றுவிட்டால், அது வியாபாரம் ஆகிவிடுகிறது. ‘நான் கொடுத்தேன். நீயும் கொடுத்தாய். வியாபாரம் முடிந்துவிட்டது.’
ஆனால், நாம் அவற்றைத் திரும்பப் பெறாதபோது கடவுள் ஆகிறோம். கடவுளுக்கு யாரும் கைம்மாறு அளிக்க முடியாது.
‘தந்தையின் இரக்கம்போல் நம் இரக்கம் இருத்தல் வேண்டும்’ என்பதே இயேசுவின் பாடம். சிலுவையின் இறுதிப் பொழுது வரை இயேசு மன்னிப்பையும் இரக்கத்தையும் வழங்கினார். அவருடைய அளவை பெரியதாக இருந்தது. ‘அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி’ இரக்கத்தை அளந்து போட்டார்.
முதல் வாசத்தில், இறைவாக்கினர் தானியேல் ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்தை அறிக்கையிடுகிறார்: ‘நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு!’
கடவுள்போல இரக்கமும் மன்னிப்பும் அன்பும் தர நம்மால் இயலாது எனினும், கொஞ்சம் முயற்சி செய்வோம். ‘அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி’ அளந்து மற்றவர்களின் மடியில் கொட்டுவோம்! அதே வேளையில், நம் தாராள உள்ளம் பற்றிக் கவனமாகவும் இருப்போம். ‘அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி’ தலைவர் போட்டாலும், அவர் அளவையைப் பயன்படுத்துகிறாரே அன்றி, அப்படியே சாக்கைத் தூக்கிக் கொட்டவில்லை!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: