இன்றைய இறைமொழி
வெள்ளி, 24 ஜனவரி ’25
பொதுக்காலம் இரண்டாம் வாரம் – வெள்ளி
எபிரேயர் 8:6-13. திருப்பாடல் 85. மாற்கு 3:13-19
அவரோடு இருக்க!
‘தனியாய் எவரும் சாதிப்பதில்லை’ என்பதை அறிந்தவராக இருக்கிற இயேசு, தம் பணிக்கென பன்னிரு திருத்தூதர்களைத் தெரிந்துகொள்கிறார்.
இந்நிகழ்வை, ‘மலைமேல் ஏறினார்,’ ‘தம்மிடம் வரவழைத்தார்,’ ‘பெயரிட்டார்’ என்னும் மூன்று முதன்மையான சொற்களால் வரையறுக்கிறார் மாற்கு.
‘மலைமேல் ஏறுதல்’ என்பது இயேசுவின் இறைவேண்டல் நிகழ்வைக் குறிக்கிறது. இலக்கியக் கூற்றாகக் காணும்போது, ‘மலைமேல் ஏறுகிற ஒருவர்’ அகன்ற பார்வை பெறுகிறார். அனைவரையும் அவரால் எளிதாகப் பார்க்க முடிகிறது.
தாம் விரும்பியவர்களை இயேசு தம்மிடம் வரவழைத்தார். ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் அல்லது தகுதி அல்ல, மாறாக இறைவிருப்பமே ஒருவரைத் தெரிந்துகொள்கிறது.
‘திருத்தூதர்கள்’ என்று இயேசு அவர்களுக்குப் பெயரிடுதல், அவர்கள்மேல் இயேசு கொண்டுள்ள உரிமையையும், அவர்களுடைய பணியின் பொருளையும் விளக்குகிறது.
‘அவரோடு இருத்தலும்’ ‘அனுப்பப்படுதலும்’ ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல திருத்தூதுப் பணியின் இரண்டு பரிமாணங்களாக உள்ளன.
திருத்தூதர் தெரிவு இயேசுவின் முன்னெடுப்பாக அமைந்துள்ளது.
‘அவரோடு இருத்தல்’ என்றால் என்ன? நம்மை மறுத்து அவரைப் பற்றிக்கொள்தல்.
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களைக் கைப்பிடித்து கடவுள் நடத்திவந்ததாக எழுதுகிறார் ஆசிரியர். கடவுளின் உடனிருத்தல் நமக்கு உள்ளதால், நம்மால் கடவுளிடம் எளிதாக உடனிருக்க முடிகிறது.
புனித பிரான்சிஸ்கு சலேசியார்
பொதுநிலைவாழ்வுக்கான ஆன்மிக வழிகாட்டியை வரையறுத்துள்ள இவர், ‘புனிதம்’ என்பதே கடவுள் நம்மிடம் விரும்புவது என்கிறார். புனிதம் என்பது நாம் உரைக்கிற கடவுளில் வேரூன்றி நமக்கு அருகில் இருப்பவர்களுக்கு நம்மையே திறந்து கொடுப்பதாகும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்.
இரக்கத்தின் தூதுவர்
Share: