இன்றைய இறைமொழி
வியாழன், 5 டிசம்பர் 2024
திருவருகைக்காலம் முதல் வாரம் – வியாழன்
எசாயா 26:1-6. திருப்பாடல் 118. மத்தேயு 7:21, 24-27
ஆண்டவரது வாயில் இதுவே!
நம் வீடுகளில் வாயில்கள் (அல்லது கதவுகள்) இருக்கின்றன. ஒவ்வொரு வாயிலும் சுவற்றில் இருக்கும் ஒரு துவாரம் அல்லது ஓட்டை அல்ல, மாறாக, வீட்டுக்கு உள்ளே செல்வதற்கான, வீட்டை விட்டு வெளியே வருவதற்கான வாய்ப்பு. நாம் தினமும் நிறைய வாயில்களுக்குள் நுழைந்து வெளியே வருகிறோம். நம் வீட்டின் வாயில், பயணம் செய்யும் நம் காரின் கதவு அல்லது பேருந்தின் வாயில், பணி செய்யும் இடத்தின் வாயில், ஆலயத்தின் வாயில், வணிக வளாகத்தின் வாயில், கடையின் வாயில், மருத்துவமனையின் வாயில் என நாம் பல வாயில்களுக்குள் நுழைந்து வெளியே வருகிறோம். ஒவ்வொரு முறையும் நாம் இப்படிச் செய்யும்போது ஏதோ ஒரு மாற்றம் நம்மில் நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, மருத்துவமனையின் வாயிலுக்குள் நோயுற்றவராய் நுழைந்து, நோயற்றவராய் வெளியே வருகிறோம். ஆக, வாயில் என்பது மாற்றத்தின், வளர்ச்சியின், பாதுகாப்பின் அடையாளமாகவும் இருக்கிறது.
மேற்காணும் எல்லா வாயில்களும் இட்டுச் செல்லக்கூடிய ஒரே வாயில் ஆண்டவரது வாயில். இறப்புக்குப் பின்னர் நாம் செல்லும் விண்ணக வாயில் அல்ல அது, மாறாக, இன்றே இங்கே நாம் அவருக்குள் நுழைகிற வாயில்.
அது என்ன?
இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய தலைநகரான எருசலேமை வலிமைமிகு நகர் என்று கருதினார்கள். கொத்தளங்களும் கோட்டைச் சுவர்களும் என நின்ற எருசலேம் எதிரிகளின் கைகளில் அழிகிறது. ஆக, மனிதர்கள் கட்டுகிற நகர் மனிதர்களாலேயே இடிபடும் என உணர்ந்துகொள்கிறார்கள். இடிபடாத நகர் எது என்று அவர்கள் நினைக்கும்போது, ‘ஆண்டவரின் நகர்’ ஒன்றை முன்மொழிகிறார் எசாயா. இது வெறும் கற்களால் கட்டப்பட்ட நகர் அல்ல, மாறாக, நம்பிக்கையால் கட்டப்பட்டது. இதற்கு உள்ளே செல்வதற்கான ஒரே அனுமதிச் சீட்டு நேர்மை.
‘நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்’ என உரைக்கிறார் எசாயா (முதல் வாசகம்). ஆண்டவரின் வாயில் அல்லது கதவுக்குள் நுழைய வேண்டியவர்கள் கொண்டிருக்க வேண்டிய மூன்று பண்புகள்: ‘நம்பிக்கை,’ ‘நேர்மை,’ ‘மனஉறுதி.’
ஆண்டவர் நம்மைக் காக்கின்றார் என்னும் நம்பிக்கை, பிறழ்வுபடாத வாழ்க்கையால் வரும் நேர்மை, சிலைகளை நோக்கி உள்ளத்தைத் திருப்பாத மனஉறுதி ஆகியவற்றைக் கொண்டிருப்பவர் ஆண்டவரின் வாயிலைக் கண்டுகொள்கிறார்.
மலைப்பொழிவை நிறைவு செய்கிற இயேசு, ‘வீடு’ என்னும் சொல்லோவியத்துடன் நிறைவு செய்கிறார். சீடர்கள் இரண்டு நிலைகளில் தங்கள் வாழ்க்கையை வாழ முடியும். ஒன்று, சொற்களால். இரண்டு, செயல்களால். சொற்களால் வாழ்பவர்கள் இயேசுவை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று அழைக்கிறார்கள். செயல்களால் வாழ்பவர்கள் தந்தையின் திருவுளப்படி நடக்கிறார்கள். செயல்களால் வாழ்பவர்களுடைய வாழ்க்கை பாறைமீது கட்டப்பட்ட வீடு போன்றதாக இருக்கிறது. வெறும் சொற்களால் வாழ்பவர்களுடைய வாழ்கை மணல்மீது கட்டப்பட்ட வீடு போன்றதாக இருக்கிறது.
விண்ணகம் என்னும் வீட்டின் கதவு நம் சொற்கள் அல்ல, மாறாக நம் செயல்கள். நம் செயல்கள் வழியாகவே நாம் இறைஇல்லம் நுழைகிறோம்.
தந்தையின் திருவுளம் அறிதல் என்றால் என்ன?
(அ) கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது. பத்துக்கட்டளைகள் அல்லது இயேசு சுருக்கமாக மொழிந்த இறையன்பு, பிறரன்பு என்னும் இரண்டு கட்டளைகள்.
(ஆ) உண்மையான சீடத்துவம். அன்பு, இரக்கம், நீதி, தியாகம், தாழ்ச்சியில் மிளிரும் சீடத்துவம்.
(இ) பேறுபெற்ற நிலைகளை வாழ்தல். இயேசு மலைப்பொழிவில் (மத் 5:1-12) முன்மொழிந்த மதிப்பீடுகளை வாழ்வாக்குதல்.
(ஈ) வெளிவேடம் அகற்றுதல். நோன்பில், இறைவேண்டலில், தர்மம் செய்தலில் உள்ள வெளிவேடம் களைதல்.
(உ) கடவுளின் திட்டம் பற்றிக்கொள்தல். ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!’ என்று மரியா சொல்வதுபோல.
வார்த்தையிலிருந்து வாழ்வுக்கு:
(அ) நாம் நுழையும் அனைத்து வாயில்களும் நாம் இறுதியில் நுழைய வேண்டிய விண்ணக வாயிலை நமக்கு நினைவுபடுத்தட்டும். அங்கே ஆண்டவர் நுழைகிறார், நாமும் நுழைகிறோம் (திபா 118).
(ஆ) நாம் இங்கே பல்வேறு வகைகளான வாயில்களில் நுழையும்போது நம்பிக்கையும், நேர்மையும், மனஉறுதியும் நம் உள்ளங்களில் குடிகொள்வனவாக. எல்லா வாயில்களும் நமக்கு அமைதி தருவனவாக!
(இ) வாழ்வின் வாயில் அடைபட்டு விட்டது என்று நாம் எண்ணி மனம் சோர்ந்து போக வேண்டாம். கதவுகள் அடைக்கப்பட்டது என நாம் நினைக்கும்போது, சுவர்களையே உடைத்து நமக்குப் பாதை ஏற்படுத்தித் தருபவர் நம் கடவுள். வாயில் அடைக்கப்பட்டு நிற்பவர்களுக்கும் நாம் வாயிலைத் திறந்து வழி காட்டுவோம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்வின் இறுதி வாயிலை மனத்தில் வைத்து வாழ்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 265).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: