• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆண்டவரின் ஆட்சி! இன்றைய இறைமொழி. ஞாயிறு, 24 நவம்பர் ’24.

Sunday, November 24, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 24 நவம்பர் 2024
கிறிஸ்து அரசர் பெருவிழா
தானியேல் 7:13-14. திருவெளிப்பாடு 1:5-8. யோவான் 18:33-37

 

ஆண்டவரின் ஆட்சி!

 

(இன்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை தன் மேய்ப்புப் பணித் திட்டம் 2033-ஐ அனைத்துப் பங்குத்தளங்களிலும் அறிமுகம் செய்கிறது. நாம் இதை வாசிப்போம், புரிந்துகொள்வோம், செயல்படுத்துவோம். நம் தனிப்பட்ட வாழ்விலும் குழும வாழ்விலும் இறைவன் நம்மிடம் என்ன விரும்புகிறார் என்பதைத் தேர்ந்து தெளிவோம்.)

 

‘கிறிஸ்து அரசர் பெருவிழா’ திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்கிறது. ‘அரசர்’ என்ற சொல் ‘செங்கோல், கிரீடம், அரியணை, போர், அரண்மனை, கோட்டை, அதிகாரம், படைவீரர்கள், பணியாளர்கள், பணம், தங்கம்’ ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகிறது. அரசாட்சி எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் – குடியரசு, சமய அரசு, வாரிசு அரசு – தீயதாகவே இருக்கிறது என்பது நம் வாழ்வியல் அனுபவமாக இருக்கிறது. ‘தீமை இல்லாத அதிகாரம்’ என்பது இல்லை என்பது அக்வினா நகர் புனித தோமாவின் கருத்து. நீதித் தலைவர்கள் நூலில், யோத்தாம் கூறும் உருவகத்தில் வருகின்ற ஒலிவ மரங்களும், அத்தி மரங்களும், திராட்சைக் கொடியும் அரசாட்சி ஏற்க மறுத்ததால், முட்புதர் அரசாட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. முட்புதரிடம் அரசாட்சியைக் கொடுத்துவிட்ட ஒலிவ மரங்களும், அத்தி மரங்களும், திராட்சைக் கொடியும் காய்க்க முடியுமா? கனிதர இயலுமா? இன்னொரு பக்கம், அரசாட்சி என்பதை, ‘தலைமைத்துவம்’ என்று புரிந்துகொண்டால், இன்று நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் – குடும்பத்தில், பணியிடத்தில், பங்கில், மறைமாவட்டத்தில், சமூக அமைப்பில் – தலைவராக இருக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு நாமே (அதாவது, எனக்கு நானே) தலைவராக இருப்பதும் அரசாட்சி சார்ந்ததே.

 

ஆக, நாம் விட்டு விலக முடியாத அரசாட்சிக்கும், நம் தனிப்பட்ட மற்றும் வாழ்வியல் தலைமைத்துவத்துக்கும் இன்று நாம் கொண்டாடுகிறது கிறிஸ்து அரசர் பெருவிழா முன்வைப்பது என்ன?

 

முதல் வாசகத்தில் (தானி 7:13-14) தானியேல் இறைவாக்கினர் காட்சி ஒன்றைக் காண்கின்றார். ‘மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்’ எனக் கூறுகிறார் தானியேல். ‘தொன்மை வாய்ந்தவர்’ என்னும் சொல்லாடல் கடவுளைக் குறிக்கிறது. மானிட மகனுக்கு ஆட்சியுரிமையும் மாட்சியும் கொடுக்கப்படுகின்றது. அவர் அனைவரும் வழிபடக் கூடிய கடவுளாக இருக்கின்றார். அவருடைய ஆட்சி நீடித்த, முடிவுறாத ஆட்சியாக இருக்கிறது. இக்காட்சியின் பின்புலத்தில் இருப்பது செலூக்கிய ஆட்சி. கிரேக்கர்களுக்குப் பின்னர் பாலஸ்தீனத்தை செலூக்கியர்கள் ஆட்சி செய்கின்றனர். செலூக்கிய அரசன் நான்காம் அந்தியோக்கஸ் எபிஃபானஸ் (கிமு 167 – 164) யூதர்கள் அனைவர்மேலும் கிரேக்கக் கலாச்சாரத்தையும், மொழியையும், வழிபாட்டையும் திணிக்கின்றான். தன்னையும் தான் நிறுவுகின்ற கடவுளையும் மக்கள் வழிபட வேண்டும் என்றும், ஆலயத்தில் படைக்கப்படும் பன்றிக்கறி உணவை அனைவரும் உண்ண வேண்டும் என்றும் இஸ்ரயேல் மக்களைக் கட்டாயப்படுத்துகின்றான். அரசக் கட்டளையை மீறுகின்ற பலர் கொல்லப்படுகின்றனர் (காண். 1 மக் 1:41-63). இதற்கு எதிராக எழுகின்ற மக்கபேயர்கள், மத்தத்தியா, யூதா போன்றவர்களால் நீடித்த ஆட்சியைத் தர முடியவில்லை. ஆக, தங்களை ஆட்சி செய்கின்ற கொடுங்கோல் அரசன், தங்களைக் காப்பாற்ற இயலாத தங்கள் தலைமை என வாடியிருந்த மக்கள் விரைவில் தங்களுடைய ஆட்சியுரிமையைப் பெறுவார்கள் எனக் காட்சி காண்கின்றார் தானியேல்.

 

‘மானிட மகன்’ என்னும் சொல்லாடல், ‘மெசியா’ அல்லது ‘இஸ்ரயேல் மக்கள்’ ஆகியோரைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். இஸ்ரயேல் மக்களின் கையில் ஆட்சியுரிமை கொடுக்கப்படுகிறது. கடவுள் ஏற்படுத்துகின்ற நீதி மற்றும் நேர்மையின் அரசை அவர்கள் மக்கள் நடுவில் மலரச் செய்வார்கள். துன்புறும் மக்களுக்கு தானியேல் நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார். அவர்களுடைய துன்பம் நீடித்தது அல்ல என்றும், கடவுள் விரைவில் குறுக்கிட்டு, அவர்களின் துன்பத்தை அகற்றுவார் என்றும், கடவுளே வரலாற்றைத் தன் கைகளில் கொண்டுள்ளார் என்றும், தீமையின்மேல் அவரே வெற்றிகொள்வார் என்றும் மொழிகின்றார். வானத்தில் தோன்றுகின்ற மனித உருவம் வெற்றியைக் கொண்டு வரும்.

 

ஆக, மனித வரலாறு கடவுளின் கண்முன் விரிந்து நிற்கிறது. நம்பிக்கையாளர்களைத் துன்பத்திலிருந்து அவரே விடுவிக்கின்றார். தீமையின் ஆதிக்கத்தை வேரறுக்கின்ற கடவுள் தான் படைத்த இந்த உலகை நம்பிக்கையாளர்களிடம் மீண்டும் அளிப்பார். ஆண்டவரின் ஆட்சி தானியேலின் காட்சியாகவும், ஏக்கமாகவும் இருக்கிறது.

 

இரண்டாம் வாசகம் (திவெ 1:5-8), இயேசுவை, ‘அரசர்க்கெல்லாம் அரசர்’ என்று முன்மொழிகின்றது. தானியேல் நூலுக்கும் திருவெளிப்பாட்டு நூலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் திருவெளிப்பாட்டு நடையில், உருவங்கள், எண்கள், அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இரண்டு நூல்களும் எழுதப்பட்ட சூழல் நம்பிக்கையாளரின் துன்பமே. நம்பிக்கையாளர்களின் துன்பம் கடவுளின் குறுக்கீட்டால் நிறைவுக்கு வரும் என்பது இந்நூல்கள் தரும் நம்பிக்கை.

 

கிறிஸ்துவை மூன்று தலைப்புகளால் குறிக்கிறார் ஆசிரியர்: (அ) ‘நம்பிக்கைக்குரிய சாட்சி’ – ஏனெனில், தன் மண்ணகப் பணியில் இறுதிவரை நிலைத்து நின்று சான்று பகர்ந்தார், (ஆ) ‘முதலில் உயிர்பெற்று எழுந்தவர்’ – கடவுளின் வல்லமையால், (இ) ‘மண்ணுலக அரசர்க்கெல்லாம் தலைவர்’ – அவருடைய விண்ணேற்றத்துக்குப் பின்னர் கடவுள் அவருக்கு எல்லா ஆற்றல்களையும் வழங்குகின்றார். இந்த மூன்று தலைப்புகளும், இயேசு கடவுளுக்குக் காட்டிய அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கம், அந்த அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கத்திற்கு கடவுள் தந்த பரிசு அவருடைய அதிகாரமும் ஆட்சியுரிமையும் என்று அடையாளத்தப்படுத்துகின்றன.

 

இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஆட்சி உரிமை பெற்ற குருக்களாக மாறுகின்றனர். அவர் விரைவில் வரவிருக்கின்றார். அவரே தொடக்கமும் முடிவுமான இறைவன்.

 

ஆக, உரோமையர்களின்கீழ் துன்புற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு – தானியேல் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை தந்தது போல – ஆசிரியர் நம்பிக்கை தருகின்றார். மண்ணுலகில் நிலவும் தீமையின் ஆட்சி மறைந்து ஆண்டவரின் ஆட்சி மலரும் என்பது அவருடைய எதிர்நோக்காக இருக்கின்றது.

 

நற்செய்தி வாசகம் (யோவா 18:33-37), உரோமை ஆளுநர் பிலாத்துவுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கின்ற உரையாடலின் ஒரு பகுதியாக உள்ளது. மற்ற நற்செய்தியாளர்களை விட யோவான் நற்செய்தியாளர், பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வை நீண்டதாகப் பதிவு செய்கின்றார். யோவான் நற்செய்தி, ‘அரசர்’ என்னும் தலைப்பில் தொடங்கி, அதே தலைப்போடு நிறைவு செய்கிறது. இயேசுவைக் காண்கின்ற நத்தனியேல், ‘நீர் இறைமகன், நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்’ (யோவா 1:49) என அறிக்கையிடுகின்றார். நற்செய்தியின் இறுதியில், ‘யூதர்களின் அரசர்’ என்று பிலாத்து இயேசுவுக்கு குற்றஅறிக்கை எழுதுகின்றார் (யோவா 19:19). பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வில், இயேசுவே அரசன்போல அரியணையில் அமர்ந்திருப்பவராகவும், உறுதியாகப் பேசுவதாகவும், தன்னைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். இதற்கு மாறாக, பிலாத்து உள்ளேயும் வெளியேயும் நடப்பவராகவும், முடிவெடுக்க இயலாதவராகவும், மக்களுக்கும் இயேசுவுக்கும் அஞ்சுபவராகவும் காட்டப்படுகின்றார்.

 

பிலாத்துவோடு கொண்ட உரையாடலில் இயேசு தன் அரசாட்சி பற்றிய தெளிவை அவருக்கு அளிக்கின்றார்: ஒன்று, ‘என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல.’ இவ்வுலகில் உள்ள ஆட்சிக்கு அதிகாரத்தை இன்னொருவர் தர வேண்டும். மேலிருக்கிற இன்னொரு அரசர் தர வேண்டும். அல்லது மக்கள் தர வேண்டும். ஆனால், இயேசு அதிகாரத்தை தன்னுள்ளேயே கொண்டிருக்கின்றார். அது அவருக்கு மேலிருந்து அருளப்படுகின்றது. இரண்டு, இவ்வுலக ஆட்சி போட்டி, பொறாமை, இரத்தம், பிறழ்வு நிறைந்த ஆட்சி. ஆனால், இயேசுவின் ஆட்சி அமைதியின், நீதியின், சமத்துவத்தின், சகோதரத்துவத்தின் இறையாட்சி. மூன்று, அரசாட்சி என்பது உண்மையை அறிவிக்கும் பணி. பணி செய்வதே அரசாட்சியின் முதன்மையான இலக்கு.

 

இயேசுவுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் அவருடைய ஆட்சியில் உறுப்பினராக மாற முடியும். ‘உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்’ என்று சொல்வதன் வழியாக, ‘நீ உண்மையைச் சார்ந்தவரா?’ என்று பிலாத்துவிடம் கேள்வி கேட்கின்றார் இயேசு. பிலாத்து தன் போலியான அதிகாரத்திலிருந்தும், முழமையற்ற ஆற்றலிலிருந்தும் வெளியே வர வேண்டும் என்பது இயேசுவின் அழைப்பாக இருக்கிறது.

 

ஆக, தன் சமகாலத்து உரோமையர் கொண்டிருந்த புரிதலைவிட ஒரு மாற்றுப் புரிதலை முன்வைக்கின்றார் இயேசு.

 

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையக்கருத்துகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்:

 

(அ) ஆண்டவராகிய கடவுளின் கையில் ஆட்சி உள்ளது. அவர் நினைக்கும் நேரத்தில் அனைத்தும் மாறி விடும்.

 

(ஆ) ஆண்டவருடைய ஆட்சி நீடித்த ஆட்சியாக இருக்கும். அங்கே நீதிமான்கள் துன்பமுற மாட்டார்கள். தீமையின் ஆதிக்கம் முழுமையாக அழிக்கப்படும்.

 

(இ) ஆண்டவருடைய ஆட்சி உண்மைக்குச் சான்று பகரும் பணியாக மிளிர்கிறது. இந்த ஆட்சியில் பங்குபெற அனைவரும் அழைப்பு பெறுகின்றனர்.

 

கிறிஸ்து அரசர் இன்று நம் தனிப்பட்ட வாழ்வியல் தலைமைத்துவத்துக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) அரசர்கள் சமரசம் செய்துகொள்வதில்லை (Kings don’t compromise)

 

இயேசு தன் வாழ்வில் இறுதிவரை தன் மதிப்பீடுகளோடு சமரசம் செய்துகொள்ளவே இல்லை. பாலைநிலத்தில் சாத்தான் அவரைச் சோதித்தபோதும் சரி, பணியில் மக்கள் அவரைச் சோதித்தபோதும் சரி, இறுதியில், ‘இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா!’ என்று மக்கள் சொன்னபோதும் சரி, அவர் அவர்களுடைய சோதனைகளுக்குள் விழவே இல்லை. இவை அனைத்திலும் தன் சுதந்திரத்தையும் கட்டின்மையையும் காத்துக்கொள்கின்றார். கட்டின்மை (சுதந்திரம்) மிகப்பெரிய மதிப்பீடு. இதை இழந்த எவரும் சமரசம் செய்துகொள்கின்றார். இதை இழக்கிறவரை நாம் அடிமை என்கிறோம். அடிமைகள் அனைத்திலும் அனைவரோடும் சமரசம் செய்துகொள்கின்றனர். அரசர்கள் சமரசம் செய்துகொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிறார்கள்.

 

(ஆ) அரசர்கள் தங்கள் மையத்தை இழப்பதில்லை (Kings are centred)

 

சதுரங்க ஆட்டம் அரசர் என்றை மையத்தைச் சுற்றியதாகவே உள்ளது. தன்னைச் சுற்றியிருப்பவர்கள் வீழ்ந்தாலும் அரசர் உறுதியாகவே இருக்கின்றார். தன் நம்பிக்கையிணைவையும், நோக்கத்தையும், நலத்தையும் அரசர் இழப்பதில்லை. தன்னைச் சுற்றி நடந்த அனைத்து பரபரப்புகளுக்கு நடுவிலும் இயேசு தன் அமைதியைக் காத்துக்கொள்கின்றார்.

 

(இ) அரசர்கள் மற்றவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் (Kings leave a legacy)

 

அரசர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் நேர்முகமாக தாக்கத்தை ஏற்படுத்தி, அங்கே மாற்றத்தைக் கொண்டுவருகிறார்கள். தங்கள் இலக்கு சரியாக இருக்க வேண்டும் என்றும், அந்த இலக்கை தாங்கள் எட்டியே தீர வேண்டும் என்றும் உறுதிகொண்டவர்களாக இருக்கிறார்கள் அரசர்கள்.

 

இறுதியாக,

 

நாம் அனைத்துத் தலைவர்களுக்காகவும் இன்று மன்றாடுவோம். இவ்வுலக ஆட்சி நமக்குத் துன்பமாக மாறும்போது அவ்வுலக ஆட்சியைக் காட்சியில் கண்டு மனநிறைவு கொள்வோம் என்றோ, நாம் இறந்த பின்னர் நமக்கு மாட்சி காத்திருக்கிறது என்றோ ஓய்ந்துவிட வேண்டாம். சிறிய சிறிய தளங்களில் நாமும் அரசர்கள் என்பதை உணர்ந்து அதன்படி நடப்போம். ஆட்சியாளர்களை அதிகாரத்தில் அமர்த்திய நாம்தான் அரசர்கள். அனைத்துத் தளங்களிலும் நம் தலைமைத்துவத்தை நம் கட்டின்மையை வைத்து நிர்ணயம் செய்வோம்.

 

எந்த நபரும், எந்தக் கருத்தியலும், எந்தச் சூழலும் நம் கட்டின்மையை (சுதந்திரத்தை) எடுத்துவிட அனுமதிக்க வேண்டாம். இப்படியாக, கட்டின்மையில் நாம் உறுதியாக இருக்கும்போது, மற்றவர் நம்மைப் பார்த்து, ‘நீ அரசரா?’ எனக் கேட்பார். ‘அரசர் என்று நீர் சொல்கிறீர்!’ என நாம் புன்னகைத்துக்கொண்டே அவரைக் கடக்க முடியும்.

 

‘ஆண்டவர் ஆட்சி செய்கின்றார். மாட்சியாய் ஆடையாய் அணிந்துள்ளார்’ (திபா 93) என்னும் பதிலுரைப் பாடல் வரி நம் வாழ்வியல் அனுபவமாக மாறும் வரை, நாம் அதை உணரும் வரை, நாம் அரசர்களாக வாழ்வோம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: