• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

என் நினைவாகச் செய்யுங்கள்! இன்றைய இறைமொழி. வியாழன், 17 ஏப்ரல் 2025.

Thursday, April 17, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
வியாழன், 17 ஏப்ரல் 2025
ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
விடுதலைப் பயணம் 12:1-8, 11-14. 1 கொரிந்தியர் 11:23-26. யோவான் 13:1-15

 

என் நினைவாகச் செய்யுங்கள்!

 

பழமையான துறவிகள் மடம் ஒன்றின் செப அறையில் அழகான வெள்ளிப் பாத்திரமும் தண்ணீர்க் குடுவையும் இருந்தது. பெரிய வியாழன் அன்று பாதம் கழுவும் சடங்குக்காக அவை பயன்படுத்தப்பட்டன. பல ஆண்டுகளாக அந்தப் பாத்திரமும் குடுவையும் ஆண்டின் ஒருநாள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

 

துறவுமடத் தலைவர் ஒருநாள், இயேசு சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வால் தொடப்பட்டு, ‘இந்தப் பாத்திரமும் குடுவையும் சடங்குக்கானவை அல்ல. மாறாக, நினைவுக்கு உரியவை. நினைவுகூர்தல் நம்மைச் செயல்பாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று அறிவித்தார்.

 

ஆக, வழிபாட்டையும் தாண்டி அந்தப் பாத்திரங்கள் வீதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. நோயுற்றவர்கள், வறியவர்கள், பகைமை பாராட்டுவோர் என அனைவரின் காலடிகளும் கழுவப்பட்டன. துறவியர்களின் பணியாக அது மாறிவிட்டது.

 

காலப் போக்கில் வெள்ளிப் பாத்திரங்கள் வலுவிழந்து போயின. கறை ஏறத் தொடங்கியது. பாத்திரங்கள் உடைந்து போக நேரிடலாம் என நினைத்த துறவியர்கள் அவற்றை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து மூடி வைத்தனர்.

 

‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்!’ என்னும் சொற்களை பெட்டியின்மேல் எழுதி வைத்தார்கள்.

 

அன்று முதல் அது மதிப்பும் அழகும் வரலாற்றுத்தன்மையும் பெற்ற பெட்டியாக ஆலயத்திற்குள் இருந்தது. அதில் உள்ள பாத்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை.

 

ஆலயத்திற்கு வந்தவர்கள் அவற்றைப் பார்த்து வியந்தார்கள். அழைத்து வந்த வழிகாட்டிகள் அவற்றின் வரலாற்றைச் சொன்னார்கள். ஆனால், யாருடைய காலடிகளும் கழுவப்படவில்லை. வறியவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. எந்தத் துண்டும் அழுக்காகவில்லை. நினைவு நிலைத்தது. ஆனால், செயல் மறைந்தது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, ‘உங்களுக்கு ஒரு முன்மாதிரி காட்டினேன்!’ என்கிறார்.

 

பாத்திரங்கள் பலகனியில் வைப்பதற்கு அல்ல.

 

நினைவு கதைகளுக்கானது அல்ல.

 

நற்கருணை ஆலயத்தோடு முடிந்துவிடுவதல்ல.

 

இவை விளிம்புகள் நோக்கி, காயங்களை நோக்கி, மற்றவர்களை நோக்கி நகர வேண்டும்.

 

நாம் கொண்டாடுகிற நினைவு நம் பணியாக மாற வேண்டும்.

 

‘கட்டளை வியாழன்,’ ‘பெரிய வியாழன்’ என்று அழைக்கப்படுகின்ற இந்த நாளில் நாம் நான்கு விடயங்களை நினைவுகூர்கிறோம்: (அ) இயேசு நற்கருணையை ஏற்படுத்துதல், (ஆ) புதிய கட்டளை வழங்குதல், (இ) பணிக்குருத்துவத்தை ஏற்படுத்துதல், மற்றும் (ஈ) சீடர்களின் பாதங்களைக் கழுவி தம் சீடர்களுக்குப் பாடம் வழங்குதல்.

 

இந்தப் புனிதமான மாலையில் நாம் மேற்காணும் நிகழ்வுகளை மட்டுமல்ல, இவற்றைச் செய்த இயேசுவையும் நினைவுகூர்கிறோம். மௌனமாக ஓய்ந்து அமர்ந்து எண்ண ஓட்டங்களை அலசிப் பார்ப்பது அல்ல நினைவு. மாறாக, செயல்பாட்டுக்கும் பணிக்கும் நகர்ந்து செல்வது.

 

(அ) நினைவு என்றால் சந்திப்பு

 

பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களைச் சந்திக்க வந்த ஆண்டவராகிய கடவுள் (முதல் வாசகம்): ‘இந்த நாள் உங்களுக்கு நினைவின் நாளாக அமைய வேண்டும்’ என்கிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உறவு ஏற்படுத்தி அவர்களுக்கு விடுதலை தருகிறார்.

 

(ஆ) நினைவு என்றால் அடையாளம்

 

கொரிந்து நகர மக்களுக்கு நற்கருணையின் இயல்பையும் மேன்மையையும் பற்றி எழுதுகிற பவுல், நற்கருணை வழியாக நாம் கிறிஸ்துவின் அடையாளத்தை, கிறிஸ்தவ அடையாளத்தை நினைவுகூர்கிறோம் என்கிறார் பவுல்.

 

(இ) நினைவு என்றால் பணி

 

இயேசு போதனைகளால் மட்டுமல்லாமல் செயல்களும் செய்கிறார். ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவுதல் என்னும் பணி சீடர்களுடைய அன்றாட வாழ்க்கைச் செயலாக மாற வேண்டும்.

 

இறுதியாக,

 

‘நினைவுகூர்தல்’ என்பதன் பொருள் என்ன?

 

இயேசுவின் இறுதி இராவுணவுத் திருப்பலியை நாம் நினைவுகூர்வதன் பொருள் என்ன?

 

இயேசுவின் இறுதி இராவுணவில் நாமும் அவரோடு இருந்தோம். அந்த இருத்தலை நினைவுகூர்கிறோம். நாம் உண்மையாகவே அவரோடு இருந்தோம் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: