• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆண்டவரே, வாரும்! இன்றைய இறைமொழி. புதன், 18 டிசம்பர் ’24.

Wednesday, December 18, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Advent

இன்றைய இறைமொழி
புதன், 18 டிசம்பர் ’24
திருவருகைக்கால வார நாள்
எரேமியா 23:5-8. மத்தேயு 1:18-24

 

ஆண்டவரே, வாரும்!

 

டிசம்பர் 17 முதல் 24 வரை உள்ள நாள்களில் திருவழிபாட்டில், ‘ஓ அழைப்புகள்’ சொல்லி இறைவேண்டல் செய்கிறோம். ஏறக்குறைய நான்காவது நூற்றாண்டில் தொடங்கிய இந்த வழக்கத்தின்படி, ஒவ்வொரு நாளும் மெசியாவின் தலைப்புகளைச் சொல்லி அவரை நோக்கி, ‘வாரும்!’ என அழைக்கிறோம் நாம். பழைய ஏற்பாட்டில் மெசியா முன்னுரைப்புகளில் அவருக்கு வழங்கப்படும் ஏழு தலைப்புகளை வலமிருந்து இடம் என வாசித்தால், இலத்தீனில் ‘ஏரோ க்ராஸ்’ (‘நான் வருகிறேன்’) என்று பொருள்படுகிறது. முதல் நாளில் (டிசம்பர் 17) கிறிஸ்துவுக்கு வழங்கப்படும் தலைப்பு ‘ஞானம்.’ இன்று இரண்டாம் நாளில் அவருக்கு வழங்கப்படும் தலைப்பு ‘ஆண்டவர்’ (எபிரேயத்தில், ‘அதோனாய்’).

 

இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்குப் பல தலைப்புகள் கொடுத்தாலும் – எல்-ரெகோய், யாவே யீரே, யாவே நிஸ்ஸி, எல்-ஷடாய் – ‘எலோஹிம்’ மற்றும் ‘யாவே’ என்னும் இரு பெயர்களால் தங்கள் கடவுளை அழைத்தனர். இவ்விரண்டு பெயர்களில், ‘எலோஹிம்’ (‘கடவுளர்கள்’) என்பது பொதுப்பெயர். ‘யாவே’ (‘ஆண்டவர்’) என்பது இயற்பெயர். ‘யாவே’ என்ற சொல் ஆண்டவருடைய பெயர் என்பதால், இஸ்ரயேல் மக்கள், அந்தச் சொல்லிற்குப் பதிலாக, ‘நான்கெழுத்துச் சொல்’ அல்லது ‘அதோனாய்’ என்னும் சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றனர்.

 

புனித தோமையார் எழுதிய நற்செய்தி நூலில் (ஏற்றுக்கொள்ளப்படாத நூல்), ‘நானே ஆண்டவர்’ என்று இயேசு தம்மை தோமாவுக்கு வெளிப்படுத்தியதாக ஒரு பகுதி உண்டு. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் என்று வழங்கும் பெயரை, நாம் இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்தி அழைக்கின்றோம். மேலும், ‘கிரியோஸ்’ என்னும் கிரேக்கச் சொல்லை, ‘ஆண்டவர்,’ ‘தலைவர்,’ ‘ஐயா’ என்றும் மொழிபெயர்க்கலாம். ‘ஆண்டவர்’ என்பது தொடக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை அறிக்கையில் முதன்மையான சொல்லாக இருந்தது. அதனால்தான் புனித பவுல், ‘தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்’ (காண். பிலி 2:11) என்று எழுதுகின்றார்.

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 23:5-8) வரப்போகும் நாள்கள் பற்றி எரேமியா முன்னறவிக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருக்கின்றனர். அவர்கள் நாடுகடத்தப்பட்டபோது அவரை ஆட்சி செய்த யூதாவின் அரசரின் பெயர் ‘செதேக்கியா.’ ‘செதேக்கியா’ என்றால் ‘ஆண்டவரின் நீதி’ என்பது பொருள். ‘ஆண்டவரின் நீதி’ என்னும் பெயரைத் தாங்கிய அரசர் மக்களை நீதியுடன் ஆட்சி செய்யாமல் தன் தந்தையரைப் போல சிலைவழிபாட்டில் ஈடுபட்டார். ஆகவே அடிமைத்தனம் வருகின்றது. மக்களை மீண்டும் மீட்டுத் தங்கள் தாய்நாடு சேர்க்கும் ஆண்டவரின் பெயர், ‘யாவே சித்கேனூ’ (‘ஆண்டவரே நமது நீதி’) என்று கொடுக்கப்பட்டுள்ளது. நமது நீதியாக ஆண்டவர் இருப்பார் என்னும் வாக்குறுதி இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் தருகின்றது.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பை யோசேப்பு பெறுகின்றார். ‘ஆண்டவரின் தூதர் கனவில் தோன்றுகின்றார்,’ ‘ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை நிகழ்ந்தன,’ ‘ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்’ என்று மூன்று முறை ‘ஆண்டவர்’ என்னும் சொல் இந்நிகழ்வில் வருகின்றது. யோசேப்பு தன் மனத்தில் ஒன்றை நினைக்கிறார். ஆனால், ஆண்டவர் வேறொன்றை உரைக்கின்றார். தன் திட்டம் ஒதுக்கி இறைத்திட்டம் ஏற்கின்றார் யோசேப்பு.

 

இந்நிகழ்வைப் பற்றி தன் திருத்தூது மடலில் – ‘தந்தையின் இதயத்தோடு’ (2020) – எழுதுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், ‘யோசேப்பின் வாழ்வில் எதுவுமே தான் நினைத்தது போல அவருக்கு நடக்கவில்லை, இருந்தாலும் அனைத்தையும் அவர் முணுமுணுப்பின்றி ஏற்றுக்கொண்டார்’ என எழுதுகின்றார். வாழ்வின் எதார்த்தங்கள் நாம் விரும்புவதுபோல இருப்பதில்லை என ஏற்றுக்கொள்கின்றார் யோசேப்பு. மௌனம் ஒன்றே அவருடைய பதிலிறுப்பாக இருக்கின்றது. தன் திட்டம் வைத்திருந்தவரை இறைத்திட்டம் ஏற்குமாறு தடுத்தாட்கொள்கின்றார் ஆண்டவர். இயேசுவின் பிறப்பு வழியாக, ‘கடவுள் நம்மோடு’ என இறங்கி வருகின்றார். ஆக, ஆண்டவர் மனுக்குலத்தோடு உடனிருக்கும் மனிதராக மாறுகின்றார்.

 

இன்றைய நாளில் நாம் கற்கும் பாடங்கள் எவை?

 

(அ) மானிடர் (செதேக்கியா) நினைக்கிற நீதி மக்கள் அனைவரையும் அடிமைத்தனத்தில் தள்ளுகிறது. ஆண்டவரின் நீதி மக்களுக்கு விடுதலை தருகிறது. ‘ஆண்டவரின் நீதி’ எது என உணர்ந்து கற்றுக்கொள்தல் நலம். யோசேப்பு மரியாவைப் பொருத்தமட்டில் தனக்கு நீதியானது எது என்பதைக் கருதி செயல்படுகிறார். ஆனால், ஆண்டவரின் திட்டம் வெளிப்படுத்தப்பட்டவுடன் அவருடைய நீதியைப் பற்றிக்கொள்கிறார். என் பார்வையில் அல்ல, மாறாக, இறைவனின் பார்வையில் நீதிமானாக (நேர்மையாளர்) இருத்தல் சிறப்பு.

 

(ஆ) இயேசுவை ஆண்டவர் என நான் அறிக்கையிடுகிறேன் என்றால், அவர் என் தலைவர் என்றால், அவரே என்னை முழுமையாக ஆட்கொள்ள நான் அனுமதிக்க வேண்டும். அவர் என்னை ஆண்டு நடத்துமாறு நான் என்னைக் கையளிக்கும்போது அவரை ‘என் ஆள்பவர்-ஆண்டவர்’ என நான் அறிக்கையிட முடியும். இல்லையெனில் என் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பிளவு இருக்கும்.

 

‘ஆண்டவரே (விப 3:14), இஸ்ரயேலுடைய இல்லத்தை ஆள்பவரே (மத் 2:6, மீக் 5:1, 2 சாமு 5:2),
எரியும் முட்புதரில் நீர் மோசேவுக்குத் தோன்றினீர் (விப 3:2)
சீனாய் மலையில் அவருக்கு உம் திருச்சட்டம் தந்தீர் (விப 20).
வாரும்! உம் வலிமைமிகு கரத்தால் எம்மை மீட்டருளும் (எரே 32:21).’

 

இதுவே இன்றைய இறைவேண்டல்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: