• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆபிரகாமும் இயேசுவும். இன்றைய இறைமொழி. வியாழன், 10 ஏப்ரல் ’25.

Thursday, April 10, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
வியாழன், 10 ஏப்ரல் ’25
தவக்காலம் ஐந்தாம் வாரம் – வியாழன்
தொடக்கநூல் 17:3-9. யோவான் 8:51-59

 

ஆபிரகாமும் இயேசுவும்

 

இயேசுவுக்கும் அவரை எதிர்த்தவர்களுக்கும் இடையேயான உரசல்கள் பெரும்பாலும் சமயம் மற்றும் சமய நம்பிக்கை சார்ந்ததாகவே இருக்கின்றன. ‘இருக்கிறவர் நானே’ என்று தம்மை பழைய ஏற்பாட்டின் ‘யாவே’ கடவுளுக்கு இயேசு தம்மையே நிகராக்குகிறார் என்று அவரைக் குறித்து இடறல்பட்டார்கள் அவருடைய சமகாலத்தவர். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ‘ஆபிராமுக்கும் தமக்கும்’ உள்ள உறவை எடுத்துரைக்கிறார் இயேசு.

 

‘தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை’ என்று மத்தேயு (1:1) நற்செய்தியாளர் தன் நற்செய்தியைத் தொடங்குகிறார். ‘ஆபிரகாமின் மகன் இயேசு’ என்பது மத்தேயு நற்செய்தியாளரின் புரிதல். இங்கே ‘மகன்’ என்பதை ‘வழி மரபு’ அல்லது ‘வழியில் வந்தவர்’ என எடுத்துக்கொள்ளலாம். இயேசுவின் மனிதத் தன்மையில் பார்க்கும்போது, அவர் ஆபிரகாமின் வழியில் அவருக்குப் பின்னர் வந்தவர் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவருடைய இறைத்தன்மையில் அவர் ஆபிரகாமுக்கும் முந்தையவராக, என்றும் நீடித்திருப்பவராக இருக்கிறார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் இறைத்தன்மையை முன்நிறுத்தி தம் சமகாலத்தவரோடு உரையாடுகிறார். ஆனால், அவர்களோ அவருடைய மனிதத்தன்மையை முன்நிலைப்படுத்தி அவரை எதிர்க்கிறார்கள். ‘பேய் பிடித்தவன்’ என்று இயேசுவைச் சாடுவதுடன் அவர்மேல் எறிவதற்குக் கற்களை எடுக்கிறார்கள். இயேசு மறைவாக நழுவிச் செல்கிறார்.

 

இன்னொரு பக்கம், விவிலியத்தின்படி பார்க்கும்போது, ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கிற்கும் இயேசுவுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. ஈசாக்கு விறகுக்கட்டைகளை எடுத்துக்கொண்டு மோரியா மலைமேல் ஏறிச் செல்கிறார். இயேசு சிலுவைமரத்தை எடுத்துக்கொண்டு கல்வாரி மலைமேல் ஏறிச் செல்கிறார். ஈசாக்கு அவருடைய தந்தை ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிகிறார். இயேசு விண்ணகத் தந்தைக்குக் கீழ்ப்படிகிறார். ஈசாக்கு மலையிலிருந்து வீடு திரும்பவில்லை – பாடத்தின்படி, ஆபிரகாம் மட்டுமே திரும்புகிறார் (காண். தொநூ 22:19). இயேசுவும் கல்வாரியிலிருந்து கீழே திரும்பவில்லை. இருவருமே பலியாகத் தங்களையே ஒப்புக்கொடுக்கிறார்கள் – ரபிக்களின் புரிதல்படி ஈசாக்கு மலைமேல் பலியாகிறார்.

 

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு போல தாம் வந்துள்ளதாக இறைவாக்காக உரைக்கிறார் இயேசு என்பதை அவர்கள் பின்னரே உணர்வார்கள்.

 

முதல் வாசகத்தில், ஆபிராம் என்னும் கதைமாந்தர் ஆபிரகாம் என்று பெயர் மாற்றம் பெறுவதையும் ஆண்டவராகிய கடவுள் அவரோடு உடன்படிக்கை செய்வதையும் வாசிக்கிறோம். இந்த உடன்படிக்கை நிபந்தனையற்ற உடன்படிக்கையாக, கடவுளே முதல் அடியை எடுத்து வைக்கிற உடன்படிக்கையாக, என்றும் நீடிக்கிற உடன்படிக்கையாக இருக்கிறது. ஆபிரகாம் அவருடைய நம்பிக்கையால் கடவுளுக்கு ஏற்புடையவராக மாறுகிறார்.

 

தங்களை ‘ஆபிரகாமின் மக்கள்’ என்று அழைத்துக் கொண்ட இயேசுவின் சமகாலத்து மக்கள் – குறிப்பாக, பரிசேயர்கள் – ‘ஆபிரகாமின் மகனாகிய இயேசுவை’ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதுவே இந்த நிகழ்வின் முரண்.

 

உலகம் தோன்றுவதற்கு முன்பாக இருந்தவரைப் பார்த்து, ‘உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை’ எனச் சொல்கின்றனர். தங்கள் வசதிக்கேற்ப இயேசுவை வளைத்துப் பார்த்தனர். இன்னொரு பக்கம், இயேசுவும் தங்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தனர். அவரின் மேன்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.கடின உள்ளம் இறைவனை நம்மிடமிருந்து அகற்றிவிடுகிறது.

 

மேலும், ‘ஆபிரகாமின் மக்கள்’ என்னும் அடையாளம் மட்டுமே தங்களுக்கு மீ;ட்பைக் கொண்டுவரும் என நினைக்கிறார்கள். ஆனால், வெறும் அடையாளங்கள் அல்ல, மாறாக, இயேசுவை ஏற்றுக்கொள்தலே நமக்கு மீட்பு தரும்.

 

இயேசு தம் சமகாலத்தவரின் கடின உள்ளம் கண்டு வியக்கிறார். கடின உள்ளம் கொண்டவராக, கண்டுகொள்ளாதவராக நாம் இருக்கும் வரை நாம் கடவுளை விடடுத் தூரமாகவே இருக்கிறோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: