இன்றைய இறைமொழி
வெள்ளி, 25 அக்டோபர் ’24
பொதுக்காலம் 29-ஆம் வாரத்தின் வெள்ளி
எபேசியர் 4:1-6. லூக்கா 12:54-59
ஆய்ந்து பார்த்தலும் பதிலிறுத்தலும்
‘கடவுள் நம் வாழ்வில் ஆற்றும் அறிகுறிகளை ஆய்ந்தறிந்து, மாற்றத்தைத் தள்ளிப்போடாமல் உடனடியாக அவரை ஏற்றுக்கொள்வது நமக்கு வாழ்வளிக்கிறது.’
கீழ்த்திசை ஞானியர் குழந்தை இயேசுவைச் சந்திக்க வருகிற நிகழ்வு பற்றி, ‘கிறிஸ்துவின் வாழ்வு’ என்னும் தமது நூலில் இவ்வாறு எழுதுகிறார் பேராயர் ஃபுல்டன் ஷீன்: ‘அந்த விண்மீன் அன்று எல்லாருக்கும் தெரிந்தது. சிலர் அதை ஓர் ஆச்சர்யமாகப் பார்த்து வழிநடந்தார்கள். அரண்மனையில் வாழ்ந்தவர்களின் கண்கள் மதுமயக்கம் கொண்டிருந்ததால் அவர்களுக்கு மங்கலாகத் தெரிந்தது. வானத்தையும் அண்ணாந்து பார்க்காமல் தங்கள் வழியே சென்ற சிலரின் கண்களுக்கு அது தெரியவில்லை. எருசலேம் நகர மக்களோ விண்மீனில் ஒரு கண், தங்கள் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளில் மற்ற கண் என பிளவுபட்டுக் கிடந்தனர். ஆனால், கீழ்த்திசையில் இருந்த ஞானியர் மட்டுமே அந்த விண்மீன் கண்டு அதை ஆய்ந்து பார்த்துப் பதிலிறுப்பு செய்தார்கள். விண்மீனை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.’
இயேசுவுடைய பிறப்பின்போது தோன்றிய விண்மீனை மட்டுமல்ல, தங்களோடு வலம் வந்த இயேசுவையே எருசலேம் மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதே இன்றைய நற்செய்தி வாசகத்தின் பின்புலம்.
தம் சமகாலத்து மக்கள் தம்மைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு: (அ) ஆய்ந்தறிவதில் வெளிவேடம், (ஆ) தள்ளிப்போடுதல்.
(அ) ஆய்ந்தறிதலில் வெளிவேடம். இயேசுவின் காலத்திலும் அதன் முந்தைய காலத்திலும் வானின் உறுப்புகளின் நகர்வுகளைவைத்தே வானிலை கணிக்கப்பட்டது. வானிலை ஆய்ந்தறியும் அறிவு ஒவ்வொரு தலைமுறையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன்படி, மேகத்தின் வருகை மழையை முன்னறிவிக்கிறது, காற்றின் வருகை வெப்பத்தை முன்னறிவிக்கிறது என அவர்கள் கணித்தார்கள். இது தவிர, விண்மீனை வைத்து திசை அறிந்தார்கள். பறவைகள் வட்டமிடுவதைக் கவனித்து நிலம் அறிந்தார்கள். கால்நடைகளின் இயக்கம் கவனித்து நிலநடுக்கம் அறிந்தார்கள். இவ்வளவு விடயங்கள் அறிந்தவர்கள் இயேசுவின் போதனை, வல்ல செயல்கள் ஆகியவற்றைக் கண்டு அவர் அறிவித்த இறையாட்சியை ஆய்ந்தறியத் தவறினார்கள். இதையே அவர்களுடைய வெளிவேடம் என்கிறார் இயேசு. நிலம் மற்றும் வானில் உள்ள நகர்வுகளை ஆய்ந்தறிந்தவர்கள் இயேசுவின் நகர்வை, விண்ணேற்றம் நோக்கிய அவருடைய பயணத்தை ஆய்ந்தறியவில்லை.
(ஆ) தள்ளிப்போடுதல். இயேசுவின் போதனையைக் கேட்டவர்களும், அவர்களுடைய வல்ல செயல்களை அறிந்தவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டார்கள். சிலர் இயேசுவின்மேல் பொறாமை கொண்டு அவருடை எதிரிகளாக மாறினார்கள். தங்கள் முன்னால் நின்ற இயேசுவே அருள்பொழிவு பெற்றவர் (மெசியா) என ஏற்றுக்கொள்ளாமல், மெசியா வருவார் என இன்னும் எதிர்நோக்கி இருந்தார்கள். திருத்தூதர்களுடைய காலத்திலும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குப் பலர் தயங்கினார்கள்.
தள்ளிப்போடுவதன் ஆபத்தை ஓர் உவமை வழியாக எடுத்துச்சொல்கிறார் இயேசு. எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது எதிரியிடம் சமரசம் செய்துகொள்ளக் காலம் தாழ்த்தினால் அது உயிரையே எடுத்துவிடும் என்பது இயேசுவின் பாடம். இங்கே, ‘நீங்கள்’ என்பது ‘இயேசுவின் சமகாலத்தவர்கள்,’ ‘எதிரி’ என்பது ‘இயேசு’ (மக்களின் தலைமைக்குருக்களும் பரிசேயர்களும் இயேசுவை எதிரியாகவே நினைத்தார்கள்), ‘ஆட்சியாளர்’ என்பது ‘விண்ணகத் தந்தை’, ‘வழி’ என்பது ‘இந்த உலகப் பயணம்’ (லூக்கா நற்செய்தியில் வழி என்பது முதன்மையான கருத்துரு), ‘வழக்கு’ என்பது ‘நம்பிக்கைப் போரட்டம்,’ ‘நடுவர்’ என்பது ‘விண்ணகத்தில் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்துள்ள இயேசு,’ ‘நீதிமன்ற அலுவலர்’ என்பது ‘தூய ஆவியார் அல்லது வானதூதர்கள்.’
வழியில் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தத் தவறும் ஒவ்வொருவரும் இப்போது எதிரியாகக் கருதுகிற இயேசுவை ஒருநாள் நடுவராக எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு, அவருடைய தீர்ப்புக்கு ஆளாவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. மனமாற்றத்தைத் தள்ளிப்போடுதல் மாபெரும் தவறு!
இந்த நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) ஆய்ந்தறியக் கற்றுக்கொள்தல்! வானிலை முன்னுணர்தல் பற்றி நாம் இன்று கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அந்த வேலையைச் செயற்கைக்கோள்கள் பார்த்துக்கொள்கின்றன. வாழ்க்கையை முன்னுணர்தல் பற்றியே நாம் அக்கறைகொள்ள வேண்டும். காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்தறித்து வாழ்தல் பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு வலியுறுத்துகிறது (காண். இன்றைய உலகில் திருஅவை, எண். 4). திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவின் மறையுடலின் உறுப்பினராக மாறுகிறோம். பெற்றோர், ஞானப்பெற்றோர், பெரியோர், அறவோர் வழியாக இயேசுவைப் பற்றி அறிகிறோம். ஆனால், இந்த அறிவு இயேசு அனுபவமாக மாறாமல் பல நேரங்களில் நின்றுவிடுகிறது. அப்படி நின்றுவிடக் காரணம் நாம் இயேசுவை ஆய்ந்தறியத் தவறுவதுதான். ஆய்ந்தறியக் கற்றுக்கொள்தல் நலம்.
(ஆ) தள்ளிப்போடுதல் தவிர்த்தல்! எதிரியோடு ஆட்சியாளரிடம் செல்லும் வரை நமக்கு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தைப் பயன்படுத்துத் தவறி, ‘போய்ப் பார்த்துக்கொள்ளலாம்!’ என நினைப்பதே தள்ளிப்போடுதல். நம் ஆன்மிக வாழ்வில் கடவுள் அனுபவத்தை நாம் நம்முடைய முதுமைக்கு எனத் தள்ளி வைக்கிறோம். அல்லது இது எல்லாம் மற்றவர்களுக்கு என நினைத்துக்கொண்டு ஓய்ந்திருக்கிறோம். தள்ளிப்போடுதல் என்னும் நம் செயலால் நாம் பணியிடத்தில், படிப்பில், பொருள் ஈட்டுதலில் இழந்த வாய்ப்புகள் ஏராளம். தள்ளிப்போடுதல் உறவுநிலைகளையும் பாதிக்கிறது. இயேசுவை ஏற்றுக்கொள்தலும், வாழ்க்கையை ஏற்றுக்கொள்தலும் இன்றே இப்போதே இங்கேயே நடந்தேற வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்!’ என்று எபேசு நகர மக்களை அழைக்கிற பவுல், ‘ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழுங்கள்!’ என அறிவுறுத்துகிறார். கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ள எதிர்நோக்கு ஒருமைப்பாட்டில் மக்களை இணைக்கிறது.
‘கடவுள் நம் வாழ்வில் ஆற்றும் அறிகுறிகளை ஆய்ந்தறிந்து, மாற்றத்தைத் தள்ளிப்போடாமல் உடனடியாக அவரை ஏற்றுக்கொள்வது நமக்கு வாழ்வளிக்கிறது.’
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்களின் அழைப்புக்கேற்ப வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 234).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: