இன்றைய இறைமொழி
வெள்ளி, 11 அக்டோபர் 2024
பொதுக்காலம் 27-ஆம் வாரம், வெள்ளி
கலாத்தியர் 3:7-17. லூக்கா 11:15-26
புனித 23-ஆம் யோவான், திருத்தந்தை, நினைவு
இடறல்படாத நம்பிக்கை
தடைகளும் விமர்சனங்களும் எழுந்தாலும் நம் நம்பிக்கை இடறலுக்கு உட்படாமல் இருக்க வேண்டும் என அழைக்கின்றன இன்றைய வாசகங்கள். உண்மையான நம்பிக்கை கடவுளின் வாக்குறுதிகளில் வேரூன்றியிருக்கிறது எனக் கற்றுக்கொடுக்கிறார் பவுல். மற்றவர்கள் தம்மைப் பற்றி இடறல்பட்டாலும் தம் பணியைத் தொடர்ந்தாற்றும் துணிச்சல் பெற்றிருக்கிறார் இயேசு.
(அ) கடவுளின் திட்டத்தில் பற்றுறுதிகொள்ளும் நம்பிக்கை
சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, மாறாக, நம்பிக்கையால் நாம் மீட்கப்படுகிறோம் என்று கலாத்திய நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், கடவுளின் திட்டத்தில் ஆபிரகாம் கொண்டிருந்த அசைக்க முடியாத பற்றுறுதியை எடுத்துரைக்கிறார். பிரச்சினைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும்போது நாம் சலனப்படுகிறோம். ஆனால், வாழ்வின் தூரத்தை நம் கண்முன் கொண்டு வந்து பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கிறது.
(ஆ) விமர்சனத்தையும் தாண்டிய நம்பிக்கை
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எதிரிகள் அவரை விமர்சனம் செய்கிறார்கள். பெயல்செபூலைக் கொண்டு அவர் பேய்களை ஓட்டுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், எந்தவொரு எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்தாலும் அமைதியாக இருக்கிறார் இயேசு. தம் தந்தை விடுக்கும் அழைப்பு விமர்சனத்தையும் தாண்டியது என்பதை உணர்கிறார். மற்றவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டாலும், விமர்சனம் செய்தாலும், எதிர்த்தாலும் நாம் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என இயேசு அழைக்கிறார்.
(இ) கடவுளின் அரசாட்சியை மையபப்டுத்திய நம்பிக்கை
தனக்குத்தானே பிளவுபட்ட அரசு நிலைத்திருக்க முடியாது என் சொல்கிற இயேசு, எந்தவொரு பிரிவினையும் ஆபத்தானது என எச்சரிக்கிறார். ஐயம் பிரிவினையை ஏற்படுத்துகிறது. நம்பிக்கையோ அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. கடவுளுடைய அரசாட்சியில் வேரூன்றி நிற்குமாறு நம்மைத் தூண்டுகிறது நம்பிக்கை.
திருத்தந்தை 23-ஆம் யோவான்
நகைச்சுவை உணர்வு, எளிமை, அசைக்க முடியாத இறைப்பற்ற ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் திருத்தந்தை புனித 23-ஆம் யோவான். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டியவர் இவரே. திருஅவைக்குள் புதிய காற்றை வருவித்தவரும், புதிய மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தவரும் இவரே. எல்லாம் கடவுளுடைய பணி என்னும் நம்பிக்கைப் பார்வையை இவர் கொண்டிருந்தார்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்களுடைய நம்பிக்கையை கடவுளின் வாக்குறுதிகளில் பதிக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 222)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: