• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இதன் மறைபொருள் பெரிது! இன்றைய இறைமொழி. செவ்வாய், 29 அக்டோபர் ’24

Tuesday, October 29, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 29 அக்டோபர் ’24
பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் செவ்வாய்
எபேசியர் 5:21-33. லூக்கா 13:18-21

 

இதன் மறைபொருள் பெரிது!

 

இறையாட்சி பற்றிய இயேசுவின் உருவகங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. இயேசுவின் உருவகங்கள் வெகுசன மக்களுக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறையாட்சியை கடுகுவிதை மற்றும் புளிப்புமாவுக்கு ஒப்பிடுகிறார் இயேசு.

 

முதலில் இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்றால் திருஅவை, விழுமியங்கள், இறப்புக்குப் பின் வாழ்வு என்று நிறையப் புரிதல்கள் உள்ளன. ஆனால், இறையாட்சி என்பது இயேசு. அவ்வளவுதான்! அதனால்தான், ‘இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது (லூக் 17:21), ஏனெனில் நான் உங்கள் நடுவே இருக்கிறேன்’ என்கிறார் இயேசு. இயேசு இயங்கும் இறையாட்சித் தளம் இந்த உலகம்.

 

(அ) கடுகுவிதை

 

யூதர்கள் கடுகுவிதையை எல்லா விதைகளிலும் மிகச் சிறியதாகக் கருதினார்கள் (காண். மத் 13:31-33, மாற் 4:30-32). இயேசுவும் ‘கடுகளவு நம்பிக்கை’ (காண். லூக் 17:6) என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தும்போது, கடுகின் சிறிய வடிவத்தையே குறிப்பிடுகிறார். ‘கடுகு’ என்பது ‘ஸினாப்பிஸ் நீக்ரா’ என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் விதை. இத்தாவரம் நான்கு அடிகளிலிருந்து பதினைந்து அடிகள் வரை வளரும். ஆகையால் இதை மரம் என்றும் அழைப்பர். இயேசு கடுகுவிதையின் வளர்ச்சியைப் பற்றிப் பேசினாலும், அவருடைய அழுத்தம் கடுகுவிதையின் தொடக்கம் மற்றும் இறுதியைப் பற்றியே இருக்கிறது. சிறிய தொடக்கம். ஆனால், பெரிய முடிவு. சிறிய விதை பெரிய மரமாகிறது.

 

இங்கே மற்றொரு வாக்கியத்தையும் இயேசு சொல்கிறார்: ‘வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.’ இயேசுவின் ‘விதைப்பவர்’ எடுத்துக்காட்டில், ‘பறவைகள்’ விதைகளின் எதிரிகளாக இருக்கின்றன (காண். லூக் 8:5, 12). ஆனால், இங்கே அவை விருந்தினர்களாக இருக்கின்றன. இறையாட்சி என்ற கடுகுமரம் பறவைகளை விரட்டியடிக்கும் ‘செல்ஃபோன் டவர்’ அல்ல, மாறாக, பறவைகளை ஈர்த்து அவற்றுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும் கடுகு மரம். ‘பறவைகள்’ என்பது புறவினத்தாரைக் குறிப்பதாகத் திருஅவைத் தந்தையர் விளக்கம் கொடுக்கிறார்கள் (காண். தானி 4:12, 21, திபா 104:13, எசே 17:23).

 

(ஆ) புளிப்புமாவு

 

புளிப்புமாவு என்று நாம் சொல்வது இன்று நாம் ரொட்டி அல்லது கேக் செய்யும்போது சேர்க்கும் ஈஸ்ட் என்ற பாக்டீரியா, அல்லது புதிதாக அரைத்த மாவு பக்குவம் அடைவதற்காக அதில் சேர்க்கப்படும் உறைமாவு. மாவில் சேர்க்கப்பட்டவுடன் இது செயலாற்றத் தொடங்குகிறது. மாவு நெகிழ்வுத்தன்மை அடையச் செய்கிறது. மாவு எந்த அளவில் இருந்தாலும் புளிக்காரம் செயலாற்றுகிறது. சிறிய தொடக்கம் பெரிய முடிவு. புளிக்காரம் யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும். இதன் வேலையைப் பாதி இரவில் நிறுத்த முடியாது. மாவிலிருந்து இதைப் பிரித்தெடுக்க முடியாது. இது புளிக்கச் செய்த மாவை மீண்டும் பழைய மாவாக மாற்ற முடியாது.

 

புளிப்புமாவு விவிலியத்தில் எதிர்மறையான பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். லூக் 12:1, 1 கொரி 5:6-8, கலா 5:9). இங்கே நேர்முகப் பொருளில் உள்ளது.

 

இவ்வுருவகங்கள் இறையாட்சி பற்றிச் சொல்வது என்ன?

 

காண்பதற்கு சிறிய வடிவம் கொண்டிருந்தாலும் கையில் எடுத்தால் சிறிய அளவில் இருந்தாலும் விதையும் புளிப்புமாவும் தம்மகத்தே நிறைய ஆற்றல் கொண்டவை. இறையாட்சியும் தன்னகத்தே ஆற்றல் கொண்டது. விதையும் புளிப்புமாவும் செயலாற்றும் விதம் நம் கண்களுக்கு மறைவாக இருக்கிறது. இறையாட்சியின் செயல்பாடும் அத்தகையதே. விதையும் புளிப்புமாவும் செயல்படுவதை வெளிப்புறக் காரணிகள் எளிதாகத் தடுக்க இயலாது. இறையாட்சியின் வளர்ச்சிiயையும் யாரும் தடை செய்ய முடியாது. விதையும் புளிப்புமாவும் பயன்படு பொருள்களாக மாறுகின்றன. இறையாட்சி என்பது மனித உறவுகளின் நடவடிக்கைகளின் பயன்பாட்டுத் தளமாகத் திகழ்கிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில், காணக்கூடிய நிகழ்வான ‘திருமண இணைப்பிலிருந்து’ காண இயலாத கடவுளின் இருத்தல் பற்றிய புரிதலுக்குக் கடந்து செல்கிறார் பவுல். திருமணத்தில் இணைந்திருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்குமான அறிவுரைப் பகுதியாக இருந்தாலும், அதன் நீட்சி என்னவோ கடவுளை நோக்கியதாக இருக்கிறது.

 

‘இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது’ என்கிறார் பவுல். ‘மறைபொருள்’ என்பது மறைவாக இருக்கும் பொருள் மட்டுமல்ல, மாறாக, நம்மையும் உள்ளடக்கிய, நம்மையும் தழுவி நிற்கும் பொருள். இறையாட்சி, இறைவனைப் பற்றிய புரிதல்கள் அனைத்தும் நம்மைப் பற்றிய புரிதல்களாகவே அமைந்துள்ளன.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 237).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: