இன்றைய இறைமொழி
திங்கள், 31 மார்ச் ’25
தவக்காலம் நான்காம் வாரம் – திங்கள்
எசாயா 65:17-21. யோவான் 4:43-54
இனி இறப்பு இல்லை!
தவக்காலத்தின் நான்காம் வாரத்துக்குள் நுழைகிறோம். இந்த வாரம் நாம் வாசிக்கிற வாசகங்கள் பழைய ஏற்பாட்டின் மெசியா முன்னறிவிப்புகளையும் வாக்குறுதிகளையும் இயேசு எப்படி நிறைவேற்றுகிறார் என்று மொழிகின்றன. இன்னொரு பக்கம், இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு நிகழ்வுகளில் நாம் காணும் சில அடையாளங்களையும் எடுத்துரைக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், யூதா நாடு மீண்டும் சொந்த நாடு திரும்பும்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றி எசாயா எடுத்துரைக்கிறார்;:
(அ) ஆண்டவராகிய கடவுள் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சி அடைகிறார். ‘அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படாது’ என்கிறார். இஸ்ரயேல் மக்கள் அனுபவிக்கிற துயரங்களை ஆண்டவராகிய கடவுள் அழிக்கிறார். ஆண்டவர் மக்களில் மகிழ்கிறார். விளைவாக, மக்கள் மகிழ்ச்சி பெறுகிறார்கள்.
(ஆ) நீடிய ஆயுள். நீடிய ஆயுள் என்பது கடவுளின் கொடையாகப் பார்க்கப்படுகிறது. நம் வாழ்வின் நாள்களைக் கூட்ட இயலாது என்பதை நாம் அறிவோம். நம் அறிவியலும் மருத்துவமும் தொழில்நுட்பமும் இறப்பைத் தள்ளி வைக்குமே தவிர, இறப்பை நிறுத்தவோ, முதுமையை நிறுத்தவோ இயலாது. மெசியாவின் வருகையின்போது மக்கள் நீடித்த ஆயுள் பெற்றிருப்பர்.
(இ) இறப்பும் இளமையும். முதியவர் ஒருவர் இறக்க நேர்ந்தாலும் அவர் இளைஞர் என்றே கருதப்படுவர். அந்த அளவுக்கு இறப்பு மனிதர்களிடமிருந்து தூரமாகிப் போகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு அரச அலுவலரின் மகனுக்கு நலம் தரும் நிகழ்வை வாசிக்கிறோம். இந்த வாசகத்தில் மூன்று முரண்களை நாம் அடையாளம் காண்கிறோம்:
ஒன்று, ‘சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது’ என்று இயேசு சொல்லியிருக்கிறார். ஆனால், அவருடைய சொந்த ஊரார் அவரை வரவேற்கின்றனர்.
இரண்டு, ‘அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்ப மாட்டீர்கள்’ எனக் கடிந்துகொள்கின்ற இயேசு, அரச அலுவலரின் மகனை நலமாக்குகின்றார்.
மூன்று, ‘வாரும்!’ என்றழைத்த அரச அலுவலரின் வார்த்தை பயனற்றுப் போகிறது. ‘போ! நலமடைவான்!’ என்ற இயேசுவின் கட்டளை தூரத்திலும் அற்புதம் நிகழ்த்துகிறது.
முதல் அறிகுறி நடந்தபோது இயேசுவின் சீடர்கள் நம்புகின்றனர். இரண்டாவது அறிகுறி நடந்தபோது, அலுவலரும் அவரின் இல்லத்தாரும் நம்புகின்றனர்.
நிகழ்வின்படி, அரச அலுவலர் இயேசுவிடம், ‘ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்!’ என்றார். இயேசு அவரிடம், ‘நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்றார். இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
(அ) வார்த்தையால் தூரத்தில்
இயேசு நிகழ்த்தும் இந்த அறிகுறி அவருடைய சொற்களால் நடந்தேறுகிறது. இயேசுவின் வார்த்தைகளை நம்புகிறார் அரச அலுவலர். நிகழ்வின் இறுதியில் இயேசுவே வார்த்தை என நம்புகிறார். இந்த அறிகுறி தூரத்தில் நடந்தேறுகிறது. இயேசு இடத்தின்மேல் அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.
(ஆ) இறப்பின்மேல் இயேசு கொண்டிருந்த ஆற்றல்
இயேசு தம் இறப்பின்மேல் அதிகாரம் கொண்டிருக்கக் காரணம், அவர் ஒட்டுமொத்தமாக இறப்பின்மேல் அதிகாரமும் ஆற்றலும் கொண்டவராக இருந்தார் என்பதுதான்.
(இ) நம்பிக்கைப் பயணம்
இயேசுவை நோக்கி அரச அலுவலரின் பயணம் மீண்டும் இல்லம் நோக்கியதாக இருக்கிறது. இவ்விரண்டு பயணங்களிலும் அவருடைய உள்ளத்தில் இருந்தது நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கை கொண்டிருப்பவர் எப்போதும் வாழ்வைத் தக்க வைக்கிறார்.
மெசியா வாசிப்பில், இயேசுவின் உடனிருப்பு நம் வாழ்விலிருந்து இறப்பையும் அழுகையையும் துயரத்தையும் அகற்றி மகிழ்ச்சி தருகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: