இன்றைய இறைமொழி
செவ்வாய், 18 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 6-ஆம் வாரம் – செவ்வாய்
தொடக்கநூல் 6:5-8, 7:1-5, 10. திருப்பாடல் 29. மாற்கு 8:14-21
இன்னும் உங்களுக்குப் புரியலையா?
இயேசுவின் வல்ல செயல்களைக் காண்கிற மக்கள் கூட்டம், ‘இவர் யாவற்றையும் நன்றாக செய்கிறார்!’ என்று புகழ்கிறது. ஆனால், இயேசுவுக்கு அருகிலிருந்த அவருடைய சீடர்கள் அவர் யாரென அறிந்துகொள்ளவில்லை. மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் சீடர்களின் இயலாமையையும் நொறுங்குநிலையையும் நன்றாகப் பதிவு செய்கிறார். இயேசுவின் சீடர்கள் அவரைப் புரிந்துகொள்ளாமல் இருப்பார்கள், அல்லது தவறாகப் புரிந்துகொள்வார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் இருக்கிறார்கள். ‘பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்!’ என்று கட்டளையிடுகிறார். இங்கே ‘புளிப்பு மாவு’ என்பதை அவர்களுடைய ‘வெளிவேடம், பகைமையுணர்வு’ ஆகியவற்றின் உருவகமாக மொழிகிறார் இயேசு. உருவகத்தின் பொருள் சீடர்களுக்குப் புரியவில்லை. புரியவில்லை என்பதை இயேசுவிடம் கூறவில்லை. மேலும், தங்களிடம் உள்ள அப்பத்தின் குறைபாட்டை எண்ணிப் பார்க்கிறார்கள். அப்பங்களைப் பலுகச் செய்கிறவர் தங்கள் நடுவே இருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
‘இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?’ என்னும் இயேசுவின் இறுதிக் கேள்வி சீடர்களை நோக்கியதாகவும் வாசகர்களாகிய நம்மை நோக்கியதாகவும் உள்ளது.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் மனத்துயர் அடைவதை உரைக்கிறார் ஆசிரியர்: ‘மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.’
மாந்தரின் இதயச் சிந்தனைகள் தீமையை உருவாக்குகின்றன எனில் அவற்றைப் பற்றி நாம் கவனமாக இருத்தல் வேண்டும்.
நாம் கற்க வேண்டிய பாடங்கள் எவை?
நம் உள்ளத்தில் உள்ள கவலை, விரக்தி, சோர்வு போன்றவை நமக்கு நேரும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள இயலாமல் செய்கிறது.
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதைப் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.
நம் இதயத்தின் எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: