இன்றைய இறைமொழி
திங்கள், 21 ஜூலை ’25
பொதுக்காலம் 16-ஆம் வாரம் – திங்கள்
விடுதலைப் பயணம் 14:5-18. மத்தேயு 12:38-42
அடையாளம் வேண்டும்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சமகாலத்தவர் அவரிடம், ‘போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும்!’ என்று கேட்கிறார்கள். ‘நம்புகிறவர்களுக்கு அடையாளம் தேவையில்லை. அடையாளம் கேட்பவர்கள் நம்புவதில்லை’ என்று அறிந்தவராக இருக்கிற இயேசு, ‘யோனா, சாலமோன்’ என்னும் இரு அடையாளங்களை வழங்கி, அவர்களிலிருந்து தாம் மேலானவர் என்று உரைக்கிறார். அடையாளங்கள் தங்களிலேயே நிறைவற்றவை. அவற்றைப் பார்க்கிறவர் அவற்றுக்கான பொருளை வழங்க வேண்டும்.
முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள் கண்முன் பெரிய அடையாளம் ஒன்றை நிகழ்த்துகிறார். எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கிக் கிடந்தவர்கள்முன் பத்து அடையாளங்களை (வாதைகளை) நிகழ்த்துகிற கடவுள், வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் அவர்கள் கடந்துபோகுமுன் அவர்கள் கால் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்கிறார்.
‘பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்துகொள்வர்’ என்று உரைக்கிறார் ஆண்டவர். எகிப்தியர்களுக்கு மட்டுமல்லாமல் இஸ்ரயேல் மக்களுக்குமான அடையாளமாகவும் இது திகழ்கிறது. ஆண்டவர் தம் மக்களோடு நிற்கும்போது அவர்கள் வெற்றியும் விடுதலையும் பாதுகாப்பும் பெறுகிறார்கள் என்னும் பாடத்தை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
‘ஆண்டவரே, உங்களுக்காகப் போரிடுவார்! நீங்கள் சும்மாயிருங்கள்!’ என்பது மக்களுக்கு வழங்கப்படுகிற கட்டளையாக இருக்கிறது. தாய்ப் பூனையின் பாதுகாப்பில் தன்னையே ஒப்படைக்கும் குட்டிப் பூனை போல அவர்கள் சும்மாயிருந்தால் போதும். ஆண்டவர் அவர்களை இக்கரையிலிருந்து தூக்கி அக்கரைக்கு அனுப்பிவிடுவார்.
வெற்றியின் விடுதலையின் பாதுகாப்பின் அடையாளமாக இருப்பதோடு, அவற்றை மக்களுக்கு வழங்குகிறார் ஆண்டவராகிய கடவுள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூபிலி 2025-ஐ அறிவித்தபோது வெளியிட்ட ஆணை ஏட்டில், ‘நாம் அனைவரும் எதிர்நோக்கின் அடையாளங்களாக மாற வேண்டும். குறிப்பாக இளையோர், வயது முதிர்ந்தோர், புலம் பெயர்ந்தோர், சிறைக் கைதிகள், நோயுற்றோர், விளிம்புநிலை மக்கள் ஆகியோருக்கு நாம் எதிர்நோக்கின் அடையாளங்களாகத் திகழ வேண்டும்.’ நாம் எதிர்நோக்கை அடையாளப்படுத்த வேண்டுமெனில், முதலில் நாம் எதிர்நோக்கு உடையவர்களாகத் திகழ வேண்டும்.
யோனா அறிவித்த இறைவாக்கினர் பணியை இயேசு செய்ததால் யோனா போன்ற அடையாளமாகத் திகழ்ந்தார் அவர். கடவுளின் ஞானமாக அவர் இந்த உலகிற்கு வந்ததால் ஞானியான சாலமோனை அடையாளப்படுத்துகிறார். இயேசு மொழிந்த அடையாளங்கள் பற்றி அறிந்திருந்த அவருடைய சமகாலத்து மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களை அவர்மேல் நம்பிக்கைகொள்ளத் தயாராக இல்லை. ஆண்டவராகிய கடவுள் செங்கடலில் நிகழ்த்திய அடையாளத்தைக் கண்ட இஸ்ரயேல் மக்களும் தங்கள் நம்பிக்கையில் பல நேரங்களில் நிலைத்திருக்கவில்லை.
நாம் நம்பிக்கையின், எதிர்நோக்கின், அன்பின் அடையாளங்களாகத் திகழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஏனெனில், நம்மைச் சுற்றியிருப்போர் நம்மைப் பார்த்து, ‘நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அடையாளம் என்ன?’ எனக் கேட்கிறார்கள். நாம் அணியும் சிலுவையும், ஏந்தும் செபமாலையும், கட்டும் கோவில்களும்தாம் நம் அடையாளங்களா? நாமே அடையாளங்களாக மாறுவது எப்போது? எப்படி?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: