இன்றைய இறைமொழி
சனி, 1 ஜூன் 2024
பொதுக்காலம் 8-ஆம் வாரம் – சனி
யூதா 17, 20-25. மாற்கு 11:27-33
அதிகாரக் கேள்வி
இயேசுவின் அதிகாரம் கடவுளிடமிருந்து வருகிறது. கடவுளின் மகன் என்ற நிலையில் அவரிடமிருந்தே ஊற்றெடுக்கிறது. மனித நிறுவனங்களும் அமைப்புகளும் அதைத் தம் கட்டுக்குள் வைக்க இயலாது.
(அ) பாடச் சூழல் (நற்செய்தி)
இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இயேசுவின் இச்செயல் தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் நடுவே சலனத்தை ஏற்படுத்துகிறது. மெசியா வரும்போது எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்துவார் என அவர்கள் அறிந்திருந்தார்கள். கலிலேயாவிலிருந்து வருகிற தச்சரின் மகன் இயேசுவில் மெசியாவைக் கண்டுகொள்ள அவர்களால் இயலவில்லை.
(ஆ) சொல்லும் பொருளும்
(1) அதிகாரம் பற்றிய கேள்வி (வ. 27-28). எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்த இயேசுவுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்னும் கேள்வி அவருடைய எதிரிகளின் உள்ளத்தில் எழுகிறது. அதிகாரத்தின்மேல் அவர்கள் கொண்ட விருப்பமும், இருக்கிற நிலை இருப்பது போலவே இருக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.
(2) இயேசுவின் பதிலிறுப்பு (வ. 29-33). இயேசு நேரடியாகப் பதில் தரவில்லை. திருமுழுக்கு யோவானின் அதிகாரம் பற்றிய கேள்வியை எழுப்பி அவர்களைத் தம் வலைக்குள் இழுக்கிறார். அவர்களுடைய வெளிவேடத்தை வெளிப்படுத்துகிறார் – ஏனெனில், திருமுழுக்கு யோவானின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட அவர்கள் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தம் அதிகாரம் மேன்மையான இடத்திலிருந்து வருகிறது என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
(இ) சவால்கள்
(1) நம் அதிகாரத்தை நாம் எங்கே தேடுகிறோம்? பாரம்பரியத்திலா, அமைப்புகளிலா, அல்லது நமக்கு உள்ளேயா?
(2) ஆங்கிலத்தில் ‘ப்ளேயிங் இட் ஸேஃப்’ என்னும் சொல்லாடல் உண்டு. அதாவது, நாம் செயல்பட வேண்டும். அந்தச் செயல்பாடு ஆபத்து இல்லாததாக இருக்க வேண்டும். நம்மையே தற்காத்துக் கொள்வதற்காக நாம் ஏந்திக்கொள்ளும் கேடயம் இது. தாங்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி தங்களை நோக்கித் திரும்பியவுடன் அமைதி காக்கிறார்கள் அவருடைய எதிரிகள். இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது எனக் கடந்து போகிறார்கள். இந்த வகையான மனநிலை ஆன்மிக வாழ்வுக்கு எதிரானது. நாம் ஏதாவது முடிவெடுத்து அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
(3) நாம் வெற்றிபெறும்போதெல்லாம் அது நம் முயற்சியால் வந்தது என்றும், மற்றவர்கள் வெற்றிபெறும்போதெல்லாம் அது அவர்களுக்கு வெளியிலிருந்து வந்தது, அல்லது அதிர்ஷ்டத்தால் வந்தது எனவும் நினைக்கிறோம். இயேசுவின் செயல்பாடுகளைக் கண்டு அவரை மெசியா எனக் கொண்டாடுவதற்குப் பதிலாக அவர் இந்த நிலைக்கு வருவதற்கான அதிகாரத்தின், அதிர்ஷ்டத்தின் ஊற்றத்தை அவருக்கு வெளியில் தேடுகிறார்கள் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும்!
இன்றைய முதல்வாசகத்தில், ‘நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்!’ என எழுதுகிறார் யூதா. நம்மை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் தயங்குவோருக்கு இரக்கம் காட்டி நகர்வது நலம்.
நிற்க.
கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையில் நாமும் அதிகாரம் கொண்டுள்ளோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 113).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: