• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. சனி, 10 ஆகஸ்ட் ’24. மறைசாட்சியம்

Saturday, August 10, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 10 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 18-ஆம் வாரம் – சனி
புனித லாரன்ஸ், திருத்தொண்டர் – விழா
2 கொரி 9:6-10. யோவா 12:24-26.

 

மறைசாட்சியம்

 

இலத்தீன் மொழியில் ‘லவுரென்சியுஸ்’ என்றழைக்கப்படும் இப்புனிதர் (கிபி 225 – 258) உரோமை நகரத்தின் ஏழு திருத்தொண்டர்களில் ஒருவர். உரோமைப் பேரரசர் வலேரியன் கட்டவிழ்த்துவிட்ட கிறிஸ்துவ துன்புறுத்தலின்போது மறைசாட்சியாக உயிர் துறந்தார். தொடக்கத் திருஅவையில் திருத்தொண்டர்கள்தாம் ஆலயத்தின் சொத்துகளின் கண்காணிப்பாளர்களாகவும், தகுந்த பிறரன்புப் பணிகளுக்கு அவற்றைப் பகிர்ந்துகொடுப்பவர்களாகவும் இருந்தனர்.

 

வரலாற்றில் இவரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற மூன்று நிகழ்வுகளை நாம் அறிவோம்:

 

(அ) ‘இவர்களே திருச்சபையின் சொத்துகள்.’ பேரரசர் வலேரியன் திருச்சபையின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய விரும்பி ஒரு கட்டளை இடுகின்றார். திருஅவையின் சொத்துகள் அனைத்தும் பேரரசருக்கே என்ற கட்டளை வந்தவுடன், சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடுத்துவிட்டு, எல்லா ஏழைகளையும் பேரரசரிடம் அழைத்துச் சென்று, ‘இவர்களே திருச்சபையின் சொத்துகள்’ என்று மொழிந்தார் லாரன்ஸ்.

 

(ஆ) திருத்தந்தை, ஆயர்கள், மற்றும் அருள்பணியாளர்கள் தலைவெட்டப்பட்டு இறந்தனர். இவரோ, சூடாக்கப்பட்ட இரும்புப் பலகையில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாகிக் கொலை செய்யப்பட்டார். இவரைப் பற்றி எழுதுகின்ற வரலாற்று ஆசிரியர்கள், ‘இவர் துன்புற்றார், இவர் வறுத்து எடுக்கப்பட்டார், இவர் மறைசாட்சியானார்’ என எழுதுகின்றனர்.

 

(இ) அருள்திரு. சாங்த்துலுஸ் என்பவர் புனித லாரன்ஸின் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பியபோது, வேலைக்காரர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லி, புனித லாரன்ஸிடம் வேண்டிக்கொண்டே கையிலிருந்த ஒற்றை ரொட்டியை வைத்து ஏறக்குறைய 10 நாள்களுக்கு அனைவருக்கும் உணவு கொடுத்தார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்’ என்கிறார் இயேசு. முதல் வாசகத்தில், கொடுத்தலின் மேன்மை பற்றி கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல்.

 

தான் இருக்கும் வரை இல்லாதவர்கள் அனைவருக்கும் தன்னிடம் இருந்ததைக் கொடுத்த புனித இலாரன்ஸ், இறுதியில் தன் உயிரையும் கொடுத்துவிட்டுக் கோதுமை மணியாக மடிகின்றார்.

 

ஏன் மனிதர்கள் கடவுளுக்காகவும், மறைக்காகவும் சாட்சிகளாக இறக்கின்றனர்? விவிலியத்தில் நாம் காணும் திருமுழுக்கு யோவான் தொடங்கி, நம் மண்ணில் உயிர்நீத்த புனித தோமா, புனித அருளானந்தர், புனித தேவசகாயம் பிள்ளை ஆகியோர் வரை நிறையப் பேர் மறைக்காக உயிர்துறந்துள்ளனர். இன்றும் பலர் உயிர்துறக்கின்றனர்.

 

‘மறைசாட்சி’ என்ற தமிழ்ச் சொல்லின் ஆங்கிலப் பதம், ‘மார்ட்டர்.’ இது கிரேக்கச் சொல்லான ‘மார்ட்டிஸ்’ என்பதன் நீட்சி. இது ஒரு சட்டரீதியான சொல். அதாவது, நீதிமன்றத்தில் ஒருவர் சார்பாக சான்று சொல்பவர், அல்லது தான் கண்டதை அப்படியே கூறுபவர் ‘மார்ட்டிஸ்’ என அழைக்கப்பட்டார். திருத்தூதர் பணிகள் 1:22-இலும் நாம் இப்படிப்பட்ட பயன்பாட்டையே காண்கின்றோம். கிறிஸ்தவத்தில், இயேசுவுக்காகவும் இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் சான்று பகர்ந்து உயிர் துறந்தவர்களை நாம் மறைசாட்சியர் என அழைக்கின்றோம். ரம்பத்தால் அறுக்கப்பட்டு, கல்லால் எறியப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, நெருப்பிலிடப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு என பல நிலைகளில் துன்பங்கள் பட்டு இவர்கள் இறக்கின்றனர். 1 மற்றும் 2 மக்கபேயர் நூல்களிலும் நாம் மறைசாட்சியம் பற்றி வாசிக்கின்றோம்.

 

தெர்த்தூலியன் என்ற திருஅவை தந்தை, ‘வேதசாட்சிகளின் இரத்தம் விசுவாசத்தின் வித்து’ என்று மறைசாட்சியத்தை முதன்முதலாக இறையியலாக்கம் செய்கின்றார். அதாவது, மறைசாட்சியம் மற்றவர்களின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்ததே தவிர, மற்றவர்களை ஒருபோதும் அச்சுறுத்திப் பின்வாங்கச் செய்யவில்லை.

 

மறைசாட்சியர்கள் துணிவாகத் தங்கள் உயிரைக் கொடுக்க முன்வந்தபோது, மறையை மறுதலித்துப் பின்வாங்கிய நம்பிக்கையாளர்களும், பயத்தினால் நம்பிக்கையைத் துறந்தவர்களும் வரலாற்றில் உள்ளனர். இவர்களை மீண்டும் கிறிஸ்தவத்திற்குள் ஏற்பதா வேண்டாமா என்ற விவாதத்தில் திருஅவையில் பிளவும் ஏற்பட்டது.

 

ஏன் சாதாரண மனிதர்கள் கடவுளுக்காக அல்லது தங்கள் நம்பிக்கைக்காக உயிர்துறக்கின்றனர்?

 

(அ) தங்கள் உயிரைவிடப் பெரியதொன்றை அவர்கள் நம்பிக்கைக் கண்களால் பார்க்கின்றனர்.

 

(ஆ) தங்கள் நம்பிக்கை மற்றும் மதிப்பீடுகளோடு அவர்கள் சமரசம் செய்துகொள்ள மறுக்கின்றனர்.

 

(இ) மற்றவர்களின் அச்சுறுத்தலையும் மிஞ்சி நிற்கிறது அவர்களுடைய துணிச்சல்.

 

நாம் இன்றும் சின்ன சின்ன நிலைகளில் மறைசாட்சியர்களாக இருக்கின்றோம். தூக்கம் வந்தாலும் பொருட்படுத்தாமல் விவிலியம் வாசித்துவிட்டு, அல்லது செபமாலை செபித்துவிட்டு தூங்கச் செல்லும்போதும், நம்மிடம் உள்ளவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொடுக்கும்போதும், நோன்பு இருக்கும்போதும், பக்தி முயற்சிகளில் பங்கேற்கும்போதும், மற்றவர்களுக்குத் தீங்கு செய்யத் துடிக்கும் நம் எண்ணத்திற்குக் கடிவாளம் இடும்போதும், மற்றவர்களை மனதார மன்னிக்கும்போதும், யாரையும் தீர்ப்பிடாமல் இருக்கும்போதும், நம் வேலைகளைச் செய்யும்போதும், அன்றாடம் வரும் உடல், உள்ள துன்பங்களை ஏற்கும்போதும், நோய், முதுமை, தனிமை போன்ற நிலைகளில் உணரும் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும்போதும் நாம் மறைசாட்சியர்களாகவே வாழ்கின்றோம். மேலும், துன்பம் ஏற்கும் ஒவ்வொரு நொடியும் நாம் மறைசாட்சியாக இருக்கிறோம். நாம் ஏற்கும் துன்பமே நம் வாழ்க்கையில் நம்மை உயர்த்துகிறது.

 

அன்றாடம் நாம் கோதுமை மணி போல இறந்து பிறக்கின்றோம்!

 

நிற்க.

 

‘வலியை விரும்பி ஏற்றல் அனைத்தும் மறைச்சாட்சியமே’ என்பர் எதிர்நோக்கின் திருப்பயணிகள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 170).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: