இன்றைய இறைமொழி
சனி, 11 மே 2024
பாஸ்கா காலம் 6-ஆம் வாரம் – சனி
திப 18:23-28. யோவா 6:23அ-28
தந்தையிடம் செல்கிறேன்
ஆண்டவராகிய இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுவதற்கு முந்தைய நாளாகிய இன்றைய நற்செய்தி வாசகம், ‘நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்’ என்னும் இயேசுவின் சொற்களோடு நிறைவு பெறுகிறது.
‘தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்’ என்கிறார் இயேசு.
இயேசுவின் திருமுழுக்கு, உருமாற்ற நிகழ்வுகளில், வானகத் தந்தை இயேசுவிடம், ‘நீரே என் அன்பார்ந்த மகன்!’ என மொழிகிறார். இப்போது தந்தையே சீடர்களை அன்பு செய்வதாக இயேசு கூறுகிறார்.
அன்பு என்பது ஒரு பெரிய வாக்குறுதி. மனித நிலையில் நாம் ஒருவர் மற்றவர்மேல் காட்டும் அன்பே நமக்கு ஆற்றல் தருகிறது என்றால், கடவுள் நம்மேல் அன்புகூர்ந்துள்ளார் என்னும் எண்ணம் நமக்கு அளப்பரிய ஆற்றல் தருவதாக இருக்கும்.
அன்பு – இதுவே இயேசு நமக்கு விட்டுச்செல்கிற மிகப்பெரிய கொடையாக இருக்கிறது.
அன்பின் தன்மை என்ன என்பதை இறுதிவரை நம்மை அன்புகூர்ந்து, உயிர்கொடுக்கும் மட்டும் அன்பு கூர்ந்து வெளிப்படுத்தினார் இயேசு.
அவர் விண்ணேறிச் செல்வது நம் தாழ்நிலையை விட்டு அகல்வதற்காக அல்ல, மாறாக, அன்பு செய்வோர் அனைவரும் அந்நிலையை அடைவர் என நமக்கு உணர்த்துவதற்காகவே!
நிற்க.
‘எதிர்நோக்கு ஏமாற்றம் தருவதில்லை’ (காண். உரோ 5:5) என்னும் சொற்களுடன் தொடங்குகிறது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் யூபிலி அறிவிப்பு ஆணை. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 95)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: