• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. சனி, 14 செப்டம்பர் ’24. உயர்த்தப்படும் வலுவின்மை

Saturday, September 14, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 14 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 23-ஆம் வாரம், சனி
எண்ணிக்கை 21:4-9 (அ) பிலிப்பியர் 2:6-11. யோவான் 3:13-17

 

உயர்த்தப்படும் வலுவின்மை

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளம் ஒன்றில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான அடையாளம் எது என்று காண ஒரு சர்வே நடத்தப்பட்டது. இஸ்ரயேலைக் குறிக்கும் நட்சத்திரம், கிறிஸ்தவர்களைக் குறிக்கும் சிலுவை, பௌத்தர்களைக் குறிக்கும் சக்கரம், மெக்டொனால்டைக் குறிக்கும் ‘எம்’ என்னும் எழுத்து என நிறைய அடையாளங்கள் வைக்கப்பட்டிருந்தன. இறுதியில் மெக்டொனால்டைக் குறிக்கும் ‘எம்’ என்னும் எழுத்தே மிகவும் பரிச்சயமானது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு பரிச்சயமான மற்றும் அல்ல, மாறாக, நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஓர் அடையாளம் திருச்சிலுவை. இத்திருச்சிலுவையின் மகிமையை இன்று விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

 

இந்த விழாவின் பின்புலம் அல்லது மரபாகக் கருதப்படுவது என்ன? கிபி இரண்டு முதல் நான்கு நூற்றாண்டுகளில் இயேசு அறையப்பட்டு உயிர்நீத்த சிலுவையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் ஆர்வம் உரோமையர்கள் மற்றும் தொடக்கக் கிறிஸ்தவர்களிடையே இருந்தது. இதன்படி 326-ஆம் ஆண்டு எருசலேமில், கான்ஸ்டான்டைன் பேரரசரின் தாய் புனித ஹெலனா அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவை பல இடங்களுக்குப் பவனியாகக் கொண்டுவரப்பட்டதன் பின்புலத்தில்தான் திருச்சிலுவையின் மகிமை விழா தொடங்கியது.

 

திருச்சிலுவை நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, நம் வழிபாட்டை திருச்சிலுவை அடையாளத்தால் தொடங்குகிறோம், நிறைவு செய்கிறோம். ஆசீர் அளிக்கும்போதும் இதே அடையாளத்தையே பயன்படுத்துகின்றோம். அணிகலனாக, ஆபரணமாக, இல்லங்களில், ஆலயங்களில் என எங்கும் சிலுவையே வீற்றிருக்கின்றது.

 

இயேசு சிலுவையை எப்படிப் பார்த்தார் என்பதையும், பவுல் எப்படிப் பார்த்தார் என்பதையும் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வாசிக்கக் கேட்கின்றோம்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 3:13-17) நிக்கதேமிடம் உரையாடுகின்ற இயேசு, ‘பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்’ என்கிறார். ‘உயர்த்தப்படுதல்’ என்பதற்கு யோவான் நற்செய்தியில் இரு பொருள்கள் உண்டு: ஒன்று, இயேசு சிலுவையில் உயர்த்தப்படுவது. இரண்டு, இறப்புக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தவராய் இயேசு விண்ணேறிச் செல்வது. இந்த இடத்தில் முதல் பொருளே மேலோங்கி நிற்கிறது. நிக்கதேம் ஒரு யூதர் என்பதால் முதல் ஏற்பாட்டு நிகழ்வை அறிந்திருக்க வாய்ப்புண்டு. அந்த நிகழ்வின்படி (இன்றைய முதல் வாசகம்) பாலைநிலத்தில் தனக்கு எதிராக முணுமுணுத்த மக்களைத் தண்டிக்கும்படி ஆண்டவராகிய கடவுள் பாம்புகளை அவர்கள் நடுவே அனுப்புகின்றார். பின்பு அவர்கள் தன்னை நோக்கிக் கூக்குரல் எழுப்பியபோது, அவரே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து கம்பத்தில் உயர்த்துமாறு மோசேக்குச் சொல்கின்றார். வெண்கலப் பாம்பைப் பார்க்கும் அனைவரும் நலம் பெறுகின்றனர். உயர்த்தப்பட்ட பாம்பு மக்களுக்கு நலம் தருகின்றது. சிலுவையில் உயர்த்தப்படும் இயேசுவும் அனைவருக்கும் மீட்பு தருகின்றார்.

 

தாங்கள் நொறுக்கப்பட்டதன் அடையாளமாக அவர்கள் வெண்கலப் பாம்பை நோக்கிக் கண்களை உயர்த்துகின்றனர். நாம் சிலுவையை நோக்கி நம் கண்களை உயர்த்தும்போதும் நமக்காக இயேசு நொறுக்கப்பட்டதை நாம் உணர்கின்றோம்.

 

இரண்டாம் வாசகத்தில், பிலிப்பி நகர மக்களுக்கு எழுதுகின்ற பவுல், தன் சமகாலத்தில் விளங்கிய கிறிஸ்தியல் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, இயேசுவின் தற்கையளிப்பை ஓர் இறையியலாக வடிக்கின்றார். கடவுள் தன்மையில் இருந்த இயேசு அத்தன்மையைப் பற்றிக்கொண்டிராமல் தன்னையே வெறுமையாக்கி சிலுவைச் சாவுக்குத் தன்னை உட்படுத்துகின்றார். இயேசுவின் நொறுங்குநிலை, தாழ்ச்சி, மற்றும் உருக்குலைந்த நிலையின் அடையாளமாகச் சிலுவை திகழ்கின்றது.

 

இயேசு தன் பாடுகளை முன்னுரைக்கும் இடத்தில் எல்லாம் சிலுவை துன்பத்தின் அடையாளமாக இருப்பதாகத் தெரிகின்றது. பேதுருவும் கூட அத்தகையதொரு புரிதலைக் கொண்டிருந்ததால்தான், ‘ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்’ என்று இயேசுவைத் தடுக்கின்றார்.

 

இத்திருவிழா நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

 

துன்பத்தின் அடையாளமாக இருக்கின்ற சிலுவையே நம் மீட்பின் அடையாளமாக இருக்கின்றது. இதுதான் வாழ்வின் இருதுருவ நிலை. சிலுவை என்பது வாழ்வின் இரு துருவ நிலையின் அடையாளம். ஒரே நேரத்தில் அது விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்துமாறு அழைக்கிறது. அதே வேளையில் இந்த மண்ணுடன் நம் கால்களை ஆணி அடித்து இறுக்குகிறது. நேர்கோடும் குறுக்குக் கோடும் என வாழ்க்கையின் பாதைகள் மாறி மாறி மறைவதையும், நெட்டையும் குட்டையும் இணைந்ததே நாம் என்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது.

 

இன்றைய நாளில் திருச்சிலுவையின்முன் சற்று நேரம் அமர்ந்து, அதைப் பற்றித் தியானித்து, அதனோடு நம்மையே பிணைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

 

நிற்க.

 

மறைமாவட்டங்களில் யூபிலி 2025 புனித ஆண்டின் அடையாளமாக இருப்பது திருச்சிலுவை. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 199)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: