இன்றைய இறைமொழி
சனி, 15 ஜூன் 2024
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – சனி
1 அரசர்கள் 19:19-21. மத்தேயு 5:33-37
சொல் சுருக்கம்
சீடர்களின் மேன்மையான நெறி பற்றிய இயேசுவின் போதனை தொடர்கிறது (நற்செய்தி வாசகம்). ‘பொய்யாணை’ பற்றிய கட்டளையை – மோசேயின் விதிமுறையை – எடுத்தாளுகிற இயேசு, அதற்கு மாற்றாக மூன்று விடயங்களைப் பரிந்துரைக்கிறார்:
(அ) ‘ஆணையிடவே வேண்டாம்!’
ஆணையிடுதல் அல்லது சத்தியம் செய்தல் அல்லது சபதம் எடுத்தல் போன்றவற்றில் சொல் ஒன்றும், செயல் ஒன்றும் இணைந்து செல்கின்றன. ஒருவர் பேசுகிற சொற்களுக்கு அழுத்தம் அல்லது உறுதி கொடுப்பதற்காக செயல் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘இதை நான் செய்யவில்லை!’ எனச் சொல்கிற ஒருவர், அச்சொற்களை உறுதி செய்வதற்காக எரிகிற நெருப்பில் கை வைக்கிறார். அதாவது, அவர் சொல்வது பொய்யாக இருக்கும் நேரத்தில் நெருப்பு அவரை எரித்துவிடும் என்பது அவருடைய புரிதல். சொற்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் செயல் தேவையில்லை. எனவே, ஆணையிடுதல் தேவையில்லை.
(ஆ) ‘ஆம்’ என்றால் ‘ஆம்,’ ‘இல்லை’ என்றால் ‘இல்லை’
சொல்லில் தூய்மையும் தெளிவும் உண்மையும் இருக்க வேண்டும். நாம் ஏன் பொய் சொல்கிறோம்? நம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக, மற்றவர்கள்மேல் பயத்தினால்! பொய் கூறுபவர் ஒரே நேரத்தில் ஆம் என்றும் இல்லை என்றும் கூறுகிறார். இப்படிப்பட்ட அவருடைய செயல் அவருக்கு ஆற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது. அடுத்தவரிடம் தன் கூற்றை உறுதிப்படுத்துவதற்காக அவர் இன்னொரு பொய்யை உருவாக்க வேண்டியுள்ளது. ‘நாம் பேசுகிற ஒரு பொய் இது வரை நாம் பேசிய அனைத்து உண்மைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது!’. ஒருவர் மேல் நாம் உருவாக்கும் நம்பிக்கை தென்னை மரம் போல மெதுவாக வளர்கிறது. ஆனால், நம்பிக்கை இழத்தலோ தேங்காய் விழுவதுபோல ஒரு நொடியில் விழுந்துவிடுகிறது.
(இ) மிகுதி வேண்டாம்!
‘இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது!’ என்னும் சொற்கள் முதல் ஏற்பாட்டு பாம்பு ஏமாற்றுதல் நிகழ்வுக்கு இட்டுச் செல்கின்றன. மிகுதியான சொற்கள் பேசுகிற பாம்பு நம் முதற்பெற்றோரைத் திசைதிருப்புகிறது. சொல் சுருக்கம் மிகவும் அவசியம்.
நிற்க.
இறைவாக்கினர் எலியாவிடமிருந்து ஆற்றலையும் பணிப்பொறுப்பையும் ஏற்கிறார் எலிசா. தான் செய்துவந்த பணியை நிறுத்துவிட்டு புதிய பணி நோக்கிப் புறப்படுகிறார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 125).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: