• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. சனி, 17 ஆகஸ்ட் ’24. குழந்தைகள்

Saturday, August 17, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி,17 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 19-ஆம் வாரம் – சனி
எசேக்கியேல் 18:1-10, 13, 30-32. மத்தேயு 19:13-15

 

குழந்தைகள்

 

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் மண உறவு, மணமுறிவு, மற்றும் மணத்துறவு பற்றி வாசித்தோம். அதன் தொடர்ச்சியாக, குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

 

எபிரேயத்தில் குழந்தையைக் குறிக்க, ‘பென்,’ ‘யேலத்,’ மற்றும் ‘நஆர்’ என்னும் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்கத்தில் ‘டெக்னோன்’ அல்லது ‘பைதியோன்’ என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்கத்தில் ‘குழந்தை’ என்ற சொல் ‘அஃறிணை’ (அதாவது, திணையில் வராதவை, பொருந்தாதவை) வார்த்தையாகவே உள்ளது. தமிழிலும், ‘குழந்தை’ என்பதை ‘அது’ என்றே நாம் அழைக்கின்றோம். எபிரேய சமூகத்தில் 12 வயது நிரம்பும் வரை இளவல், ‘குழந்தை’ என்றே அழைக்கப்பட்டார்.

 

குடும்பங்களுக்கு இறைவன் வழங்கும் ஆசீரே குழந்தைகள் என்று கருதியது யூத சமூகம் (காண். தொநூ 15:2, 30:1, 1 சாமு 1:11, திபா 127:3, லூக் 1:7). குழந்தைகள் அதிகமாக இருப்பது பொருளாதார அடிப்படையிலும் நல்லது என்று பார்க்கப்பட்டது. ஏனெனில், விவசாய சமூகத்தில் உடனுழைப்புக்கு மனித ஆற்றல் நிறையத் தேவைப்பட்டது. மேலும், போர், வன்முறை, புலம்பெயர்தல், பாதுகாப்பற்ற இயற்கைச் சூழலில் நிறையக் குழந்தைகள் இருந்தால் அது குடும்பத்திற்கு பாதுகாப்பு என்றும், இனவிருத்திக்கு உதவி என்றும் மக்கள் நம்பினர். மனைவி குழந்தை பெற இயலாமல் போனால், இன்னொரு பெண்ணின் வழியாக கணவர் குழந்தை பெற்றுக்கொள்ள யூத சமூகம் அனுமதித்தது (காண். ஆபிரகாம்-சாரா-ஆகார்). ஒவ்வொரு யூதப் பெண்ணும் தன் மகன் ஒருவேளை மெசியாவாக வருவான் என்ற எண்ணத்திலேயே குழந்தைகள் பெற்றெடுத்தனர். ஏனெனில் மெசியா எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. குடும்பத்தலைவர் மகப்பேறின்றி இறந்து போனால், அவருடைய தம்பி தன் அண்ணனின் மனைவியை மணந்து குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கடமையும் இருந்தது (லெவிரேட் திருமண முறை).

 

குழந்தைகள் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டனர் (காண். 1 சாமு 1:11). குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் முக்கியமானதாகக் கருதப்பட்டன: மோசே (விப 2:10), சாமுவேல் (1 சாமு 1:20). தலைப்பேறு ஆண்டவருக்கு உரியது என்று வழங்கப்பட்டது (காண். எண் 3:44). குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிநிலையும் குடும்ப மற்றும் சமூக விழாவாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தாயிடம் வளர்ந்தனர். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. உயர்குடி மக்கள் தங்கள் இல்லங்களிலேயே ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தினர் என்ற வரலாற்று ஆசிரியர் யோசேபு எழுதுகின்றார்.

 

இயேசுவின் சமகாலத்தில் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் இருந்தன. வாசிக்கவும், எழுதவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. தோரா வாசிப்பு, விவசாயம், திறன்கள் வளர்த்தல் ஆகியவற்றுக்கும் பயிற்சி தரப்பட்டது. ஒரு குழந்தை பேசத் தொடங்கியவுடன் (4 வயதில்) சமயக் கல்வி வழங்கப்பட்டது. குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஓய்வுநாள் மற்றும் பாஸ்கா போன்ற திருவிழாக்களில் பங்கேற்றனர். குழந்தைகள் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பெற்றோர்களுக்கு அளிக்கும் மதிப்பும் கீழ்ப்படிதலும் நல்லொழுக்கமாகக் கருதப்பட்டது.

 

ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்களை தன் குழந்தைகள் என்று கொண்டாடுகின்றார். ஒரு தந்தை தன் குழந்தையைத் தூக்கி வளர்ப்பதுபோல, அதற்கு நடை பயிற்றுவிப்பது போல தான் இஸ்ரயேலுக்குச் செய்ததாக உச்சி முகர்கின்றார்.

 

இன்று குழந்தைகளைப் பற்றிய பார்வை மிகவும் மாறிவிட்டது. ஒருபக்கம், குழந்தைகள் தொழிலாளர்கள், குழந்தைகள்மேல் வன்முறை, வல்லுறவு ஆகியவை திணிக்கப்படுகின்றன. குழந்தைகள் வலுவற்றவர்களாக இருக்கின்றனர். இன்று வலுவற்ற இவர்களைக் குறிவைத்து கார்பரேட்கள் தங்கள் வன்முறையை காணொலி விளையாட்டுகள் வழியாகவும், வலைத்தளங்கள் வழியாகவும் திணிக்கின்றனர்.

 

இன்னொரு பக்கம், ‘ஆன்ட்டி நேடலிசம்’ (குழந்தை மறுப்பு) மனநிலை வேகமாக வளர்கின்றது. திருமண நாளன்று, மணமக்கள், ‘நமக்கு குழந்தை வேண்டுமா? நாய்க்குட்டி வேண்டுமா?’ என்று திட்டமிடுகின்றனர். ‘நான் படும் கஷ்டத்தை என் பிள்ளையும் பட வேண்டுமா?’ என்ற நினைப்பில் குழந்தைகள் வேண்டாம் என்று மணமக்கள் முடிவெடுக்கின்றனர். மேலும், கருத்தடை, கருக்கலைப்பு, சிசுக்கொலை என்று குழந்தைகள் பிறக்குமுன்னரே, அல்லது பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர்.

 

இந்தப் பின்புலத்தில், இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வைக் காண்போம்.

 

குழந்தைகளை எபிரேயக் குடும்பங்கள் கொண்டாடினாலும், அவர்கள் ஆள் கணக்கில் சேராதவர்களாகவே சமூகத்தில் பார்க்கப்பட்டனர். இந்த மனநிலை சீடர்களுக்கும் இருக்கிறது. ஆகையால்தான், குழந்தைகள் இயேசுவிடம் வருவதை அவர்கள் கண்டிக்கின்றனர். இன்னொரு பக்கம், ரபி ஒருவரிடம் குழந்தைகள் பொதுவில் அமரக் கூடாது என்ற விதியும் இருந்தது. அதே வேளையில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசி வழங்கும் வழக்கம் இருந்ததால் இயேசுவிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுகிறார்கள். அவர்களை ஆசிர்வதிக்கிற இயேசு, ‘விண்ணரசு இத்தகையோருக்கே என மொழிகிறார்.

 

அதாவது, ‘திருச்சட்டமே இவர்களுக்கு இல்லை’ என்ற நம்பிக்கை நிலவிய இடத்தில், ‘விண்ணரசு இவர்களுக்கு’ என்று இயேசு சொன்னது அவர்களுக்குப் புதுமையாகவும் புரட்சியாகவும் இருந்திருக்கும்.

 

குழந்தைகளை நாம் எந்த மனநிலையோடு பார்க்கிறோம்? கற்றலுக்கு ஏற்ற திறந்த உள்ளம் நம்மிடம் உள்ளதா? குழந்தைகள் மற்றும் வலுவற்றோர்க்குத் தீங்கிழைத்தல் கூடாது.

 

குழந்தைகளின் நிகழ்காலத்தை அல்ல, மாறாக, அவர்களின் எதிர்காலத்தை – அவர்கள் கொண்டிருக்கிற ஆற்றலை, மனத்தில் வைத்துச் செயலாற்றுகிறார் இயேசு.

 

நிற்க.

 

நாம் எப்படி இருக்கிறோம் என்பதல்ல, நாம் எப்படி மாறுகிறோம், வளர்கிறோம் என்பதே நம் மதிப்பை உயர்கிறது (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 175).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: