இன்றைய இறைமொழி
சனி, 20 ஜூலை 2024
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – சனி
மீக்கா 2:1-5. மத்தேயு 12:14-21
எடுப்பவர்களும் கொடுப்பவர்களும்
இன்றைய வாசகங்கள் அநீதிக்கும் இரக்கத்துக்கும், பேராசைக்கும் தாராள உள்ளத்துக்குமான முரணை முன்மொழிவதாக அமைந்துள்ளன. முதல் வாசகத்தில், சமூக நீதியின் இறைவாக்கினர்களில் ஒருவரான மீக்கா, வலுவற்றவர்களைச் சுரண்டுபவர்களைக் கடிந்துகொள்கிறார். அருகிலிருப்பவரின் நிலத்தைப் பறித்துக்கொள்பவர், நொறுங்கிக்கிடப்பவர்களை மேலும் உடைப்பவர்கள், நாட்டின் சட்ட அமைப்பைத் தங்களுக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்பவர்களுக்கு எதிராக இறைவாக்கு உரைக்கிறார்.
மீக்காவின் சொற்கள் பல ஆண்டுகளைக் கடந்து இன்றும் ஒலிக்கின்றன. மனிதர்களைவிட உடைமைகளை முதன்மைப்படுத்துவதும், இரக்கத்தைவிட இலாபத்தை முதன்மைப்படுத்துவதும் இன்றும் நம்மைச் சுற்றி நடக்கின்றன.
இருந்தாலும், நற்செய்தி வாசகம், நமக்கு எதிர்நோக்கின் ஒளியாக அமைகிறது. இயேசுவை அவருடைய எதிரிகள் ஒழித்துவிடத் தேடுகிறார்கள். அவர் தனிமையான இடத்தைத் தேர்ந்துகொண்டு அங்கே செல்கிறார். அங்கே சென்றதும் ஓய்ந்திருக்காமல், நலமற்றவர்களுக்கு நலம் தருவதிலும், பேய்களை ஓட்டுவதிலும், இரக்கச் செயல்கள் புரிவதிலும் நேரத்தைச் செலவழிக்கிறார்.
முதல் வாசகத்தில், பேராசையும் அநீதியும் மேலோங்கி நிற்க, இரண்டாம் வாசகத்தில் இரக்கமும் அன்பும் மேலோங்கி நிற்கிறது. பேராசையும் அநீதியும் மனித மாண்பைக் குலைக்கின்றன. இரக்கமும் அன்பும் மனித மாண்பைக் காப்பதோடு துன்புறுவோருக்கு ஆறுதல் தருகின்றன.
இந்த முரணுக்கு நடுவில் எழுகிற கேள்வி இதுதான்: ‘நம் வாழ்வின் முதன்மை எது? செல்வத்தையும் அதிகாரத்தையும் தேடுவதா, அல்லது மற்றவர்களுக்குப் பணிபுரிவதா? நம் நலன்களைப் பேணுவதா? பொதுநலனைக் காப்பதா?
இயேசு நமக்குத் தெளிவான பதிலைக் கொடுக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இறையாட்சியைத் தேட அழைக்கிறார். நம் வாழ்வின் வளங்களைப் பொறுப்புணர்வுடன் நிர்வகிக்கவும், நம் ஆசீர்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், அனைவரும் மேன்மையடைகிற உலகைக் கட்டியெழுப்பவும் அழைக்கிறார்.
நிற்க.
இந்த உலகில் உள்ள நம் அனைவரையும் ‘எடுப்பவர்கள்,’ ‘கொடுப்பவர்கள்’ என இரண்டாகப் பிரிக்கலாம். ‘எடுப்பவர்கள்’ மற்றவர்களுக்குத் தீமை நினைக்கிறார்கள், மற்றவர்களை ஒடுக்குகிறார்கள், வலுவற்றவர்களிடமிருந்தும் கொள்ளையிடுகிறார்கள். ‘கொடுப்பவர்களோ’ மற்றவர்களுக்கு நன்மை நினைக்கிறார்கள். மற்றவர்கள் மேம்படவும் வலுவற்றவர்கள் நலம்பெறவும் துணைசெய்கிறார்கள். எதிர்நோக்கின் திருப்பயணி ‘கொடுப்பவராக’ இருக்கிறார் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 153).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: