• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. சனி, 24 ஆகஸ்ட் 2024. ஐயத்திலிருந்து நம்பிக்கைக்கு

Saturday, August 24, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 24 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20-ஆம் வாரம் – சனி
புனித பர்த்தலமேயு, திருத்தூதர்
திருவெளிப்பாடு 21:9-14. யோவான் 1:45-51

 

ஐயத்திலிருந்து நம்பிக்கைக்கு

 

ஒவ்வொரு திருத்தூதரின் பயணமும் ஐயத்திலிருந்து நம்பிக்கை நோக்கியதாக இருக்கிறது. இன்று நாம் திருத்தூதர் புனித பர்த்தலமேயுவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். யோவன் நற்செய்தியாளர் இவரை ‘நத்தனியேல்’ என அழைக்கிறார். ‘பர்த்தலமேயு’ என்றால் அரமேயத்தில் ‘தாலமேயுவின் மகன்’ என்பது பொருள். ‘நத்தனியேல்’ என்றால் ‘கடவுளின் கொடை’ அல்லது ‘கடவுள் கொடுத்தார்’ என்பது பொருள். நம்பிக்கையே இவர் பெற்ற முதல் கொடை.

 

இயேசுவைச் சந்திக்கிற பிலிப்பு தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, ‘நாங்கள் அவரைக் கண்டோம்!’ என்கிறார். நத்தனியேலின் உடனடியான பதிலிறுப்பு எதிர்மறையாக இருக்கிறது. இருந்தாலும், இயேசுவைக் காணப் புறப்பட்டுச் செல்கிறார்.

 

நத்தனியேலின் நம்பிக்கைப் பயணம் நான்கு படிகளில் நடந்தேறுகிறது:

 

(அ) நத்தனியேலின் ஐயம்

 

‘நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ?’ என்னும் நத்தனியேலின் கேள்வியில் முற்சார்பு எண்ணமும் ஐயமும் விமர்சனம் செய்யும் மனப்பான்மையும் ஒளிந்து நிற்கின்றன.

 

(ஆ) இறைவெளிப்பாடு

 

கடவுளே தம்மை வெளிப்படுத்தினாலன்றி, மனிதர்களாகிய நாம் கடவுளைக் கண்டறிய இயலாது. தம்மைப் பற்றி அல்லாமல் நத்தனியேலைப் பற்றியும் வெளிப்படுத்துகிறார் இயேசு – ‘இவர் உண்மையான இஸ்ரயேலர். கபடற்றவர்!’

 

(இ) நத்தனியேலின் அறிக்கை

 

இயேசுவின் சொற்களைக் கேட்ட நத்தனியேல், ‘ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்’ என அறிக்கையிடுகிறார். யோவான் நற்செய்தியின் சுருக்கம்போல இருக்கின்றன நத்தனியேலின் சொற்கள்.

 

(ஈ) பெரிதானவற்றைக் காண்பாய்

 

சிறியவற்றிலிருந்து பெரியவை நோக்கி நகர்ந்த பர்த்தலமேயுவுக்கு இன்னும் பெரிதானவற்றைக் காட்டுகிறார் இயேசு. மனிதர்களுக்கும் கடவுளுக்குமான ஏணியாக மாறுகிறார்கள் திருத்தூதர்கள்.

 

ஐயம் கொண்ட நத்தனியேல் நம்பிக்கைக்குச் சான்று பகரும் திருத்தூதராக மாறுகிறார். இயேசுவின் உடனிருப்பு அவரிடம் மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

 

நம் உள்ளம் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் கொள்ளும்போதெல்லாம், ‘வந்து பாரும்!’ என்னும் இயேசுவின் சொற்கள் நம் காதுகளில் கேட்டுகொண்டே இருக்கின்றன.

 

இத்திருத்தூதர் வழங்கும் வாழ்க்கைப் பாடங்கள்:

 

(அ) உண்மையைத் தேடுதல். நத்தனியேலின் தொடக்கச் சொற்கள் அவருடைய நம்பிக்கைப் பயணத்தின் தொடக்கப் புள்ளிகளாக அமைகின்றன. உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் தேடல் இயேசுவை நோக்கி அவரை நகர்த்துகிறது. திறந்த உள்ளத்துடன் உண்மையைத் தேடுகிறார் பர்த்தலமேயு. தான் அமர்ந்திருந்த அத்திமரம் (தோரா – திருச்சட்டம்) இயேசுவையே சுடடிக்காட்டுகிறது என்பதை உணர்கிறார்.

 

(ஆ) உள்ளத்தின் உண்மை. ‘இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்’ என்று நத்தனியேலைக் குறித்துச் சொல்கிறார் இயேசு. ஆன்மிக வாழ்வில் உண்மையும் நம்பிக்கைக்குரிய நிலையும் போற்றுதற்குரியவை. நடிப்பும் ஏமாற்றமும் இல்லாத எதார்த்தமான உள்ளத்தையே ஆண்டவர் விரும்புகிறார்.

 

(இ) மறைசாட்சியம். மரபுக் கதையாடல்களின்படி திருத்தூதர் பர்த்தலமேயு பல நாடுகளில் – இந்தியா உட்பட – நற்செய்தி அறிவிக்கிறார். இறுதியில் மறைசாட்சிய இறப்பைத் தழுவுகிறார். சீடத்துவம் என்பது தியாகம் நிறைந்தது என நமக்குக் கற்பிக்கிறார். இயேசுவை நோக்கி நகர்ந்த அந்த நொடியே மறைசாட்சியம் நோக்கி அவர் நகர்கிறார். மறைசாட்சியத்தின் வழியாக நம்பிக்கையின் கதவுகளை நமக்குத் திறக்கிறார் (முதல் வாசகம்).

 

நிற்க.

 

எதிர்நோக்கின் திருப்பயணிகளின் தேடல் உண்மையை நோக்கியதாக இருக்கிறது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 181).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: