இன்றைய இறைமொழி
சனி, 28 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 25-ஆம் வாரம், சனி
சபை உரையாளர் 11:9-12:8. லூக்கா 9:43-45
மகிழ்ந்திரு, மறவாதிரு!
இன்றைய முதல் வாசகப் பகுதிதான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக நான் எடுத்த விவிலியப் பகுதி. இந்தப் பகுதியையும், நம் மண்ணின் பட்டினத்தாரின் ‘உடற்கூற்றுவண்ணம்’ என்னும் பாடலையும் ஒப்பீடு செய்தேன். இன்றைய முதல் வாசகப் பகுதி, உரைநடை போல இருந்தாலும் இது ஓர் எபிரேயப் பாடல்.
‘கதையாடல் செய்யுள்’ அல்லது ‘கதையாடல் பாடல்’ என்னும் இலக்கியக் கூற்றைக் கொண்டது. இதன்படி, ஒரு கதையானது பாடல் வடிவில் பாடப்படும். இங்கே பாடப்படுவது யாருடைய கதை?
உங்கள் மற்றும் என் கதை இது. ஆம்! தனிமனிதரின் வாழ்வியல் பயணத்தை கதைப்பாடலாக எழுதுகிறார் சபை உரையாளர். பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதர்கள் நான்கு நிலைகளாகப் பயணம் செய்கிறார்கள்: தாயின் வயிற்றுப் பருவம், குழந்தைப் பருவம், இளமைப் பருவம், மற்றும் முதிய பருவம்.
இந்தப் பாடலில் உள்ள சில கருத்துருக்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:
‘இளையோரே!’ என இங்கே விளிப்பது ஓர் இலக்கிய நடை. அதாவது, ஞானநூல் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும்போது, தங்களுக்கு முன்னால் உள்ள மாணவர்களை மனத்தில் வைத்தோ, அல்லது நேரிடையாக நிறுத்தியோ கூறுவர். இந்தப் பின்புலத்தில்தான் நீதிமொழிகள் நூல் ஆசிரியரும், ‘பிள்ளாய்!’ என விளிக்கிறார். மேலும், ‘இளமை’ என்பது நாம் எப்போதும் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் ஒரு பருவம். ஆக, தன் வாசகர்கள் அனைவரிடமும் இருக்கும் இளமை உணர்வை நினைவூட்டுவதற்காகவும், ‘இளையோரே’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் சபை உரையாளர்.
‘மகிழ்ச்சி’ என்பது சபை உரையாளர் நூலின் சில இடங்களில் ‘வீண்’ என்று அழைக்கப்பட்டாலும், ‘மகிழ்ச்சி’ என்பது மட்டுமே வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதே சபை உரையாளரின் அறிவுரை. மகிழ்ச்சி எப்போது வரும்? ‘மனக்கவலை ஒழியும்போது,’ ‘உடலுக்கு ஊறு வராதபோது.’ இங்கே, மகிழ்ச்சி என்பது முதலில் மனம் சார்ந்த விடயம் என்பதையும் சபை உரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.
எபிரேயத்தில் கடவுள் என்பதற்கு, ‘எலோஹிம்’ என்ற பதமும், ஆண்டவர் என்பதற்கு ‘யாவே’ என்ற பதமும் பயன்படுத்தப்படுகிறது. சபை உரையாளர் இந்த இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்தாமல், ‘படைத்தவர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஆக, கடவுள் என்று ஒரு பெயரைச் சொல்லி அவரை அந்நியப்படுத்தாமல், கடவுளுக்கும் நமக்குள் உள்ள உறவை முன்வைத்து, ‘படைத்தவர்’ என அழைக்கிறார். மேலும், படைத்தவர் என்பவர் எந்தவொரு மதத்திற்கும் உரியவர் அல்லர். மாறாக, அனைவருக்கும் பொதுவானவர். மனிதர்களில் யாரும் சுயம்பு கிடையாது. அதாவது, தாங்களாகவே உதித்தவர்கள் அல்லர். நமது இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் இறைவனையே சார்ந்திருக்கிறோம்.
‘வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே’ என்று சொல்லும் நாள்கள் என்பது முதுமைப் பருவத்தின் நாள்கள். ஏனெனில், முதுமைப் பருவத்தில் உடல் சோர்கிறது, உள்ளம் வாடுகிறது. அந்த நாள்கள் விரைவில் வரும் என்பது சபை உரையாளரின் கருத்து.
முதுமைப் பருவத்தை இயற்கை உருவகங்களாகப் பதிவு செய்கிறார் சபை உரையாளர். ஆக, மனிதர்கள் என்பவர்கள் இயற்கையின் ஒரு பகுதியினர். நாம் பல நேரங்களில் இதை மறந்துவிட்டு இயற்கைக்கு எதிராகப் பயணம் செய்கிறோம். நம் மருத்துவ உலகம் மூப்படைதல் அல்லது வயது முதிர்தலை ஒரு நோய் போல சித்தரிக்கிறது. நரைத்த தலைக்கு பூச்சு, முகத்தில் விழும் சுருக்கத்திற்கு நெகிழி அறுவைச் சிகிச்சை, தேய்ந்த பகுதிகளுக்கு சிலிக்கான் நிரப்புதல் என்று முதுமைக்கு எதிராக நம்மைப் போராடச் சொல்கிறது. ஆனால், வயது முதிர்தலை ஒரு எதார்த்த நிகழ்வாக எடுத்து அதைத் தன்னோடு அணைத்துப் புன்முறுவல் செய்கிறார் சபை உரையாளர். ‘வாதை மரம் பூப்பூக்கும் முன்னும்’ (‘நரை விழும் முன்’), ‘வெட்டுக்கிளி போல நடை தடுமாற’ (‘உடலுறவின் இயக்கம் குறைய’), ‘ஆசை அற்றுப் போகுமுன்’ (‘உணவு மற்றும் உறவின்மேல் உள்ள ஆசை குறைவு’) என வாழ்வின் இறுதியில் வரும் அனைத்தையும் இனிதே அனுபவிக்கச் சொல்கிறார் சபை உரையாளர். இங்கே, வாழ்வின் இரட்டைத்தன்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இளமை என்பதன் இணையான முதுமை அவசியம். இளமையைத் தழுவிய நாம் முதுமையையும் தழுவ வேண்டும் என்பதே உண்மை.
சபை உரையாளரின் காலத்தில் மோட்சம், நரகம், உத்தரிக்கிற நிலை என்ற புரிதலோ, மனித ஆன்மா என்றென்றும் வாழும் என்ற புரிதலோ இல்லை. இறந்தால் மண் உடலுக்கு, உயிர் கடவுளுக்கு என்ற புரிதல் மட்டுமே இருந்தது. சபை உரையாளரைப் பொருத்தவரையில், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. விலங்குகள் போலவே மனிதர்கள் இறக்கின்றனர் (காண். சஉ 3:19-21) அவ்வளவுதான்! இருந்தாலும், ‘நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார்’ என்று இந்தப் பகுதியில் சொல்கிறார் சபை உரையாளர். இந்த வரி பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று சொல்கின்றனர் சிலர். மற்றும் சிலர், கடவுளின் தீர்ப்பு நமக்கு இந்த உலகத்திலேயே கிடைக்கும் என்று சொல்கின்றனர்.
இறுதியாக, ‘வீண் முற்றிலும் வீண்’ என்று சபை உரையாளர் முடிக்கின்றார்.
இந்தக் கதையாடல் பாடல் நமக்கு வழங்கும் செய்திகள் இரண்டு:
(அ) ‘மகிழ்ந்திரு!’
வாழ்வின் எந்தப் பருவநிலையில் நாம் இன்று இருந்தாலும் அந்த நிலையில் மகிழ்ந்திருப்பது. ஒவ்வொரு வாழ்வியல் பருவநிலையிலும் அதற்கான வலிமையும் வலுவின்மையும் உண்டு. இரண்டையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருத்தல் நலம்.
(ஆ) ‘நினைந்திரு!’ (‘மறவாதிரு!’)
நம்மைப் படைத்த கடவுளையும், வரவிருக்கிற இருள்நிறை நாள்களையும் (முதிர்வயதையும், இறப்பையும்) மனத்தில் வைத்து வாழ்தல். இன்றிலிருந்து நூறு வருடம் கழித்துப் பார்த்தால் இதை எழுதும் நானும், இதை வாசிக்கும் நீங்களும் இங்கே இருக்க மாட்டோம். கடந்து போகும் வாழ்வை கைக்குள் பற்றிக்கொண்டு முழுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணமே நம் நினைவாகட்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் இறப்பை இரண்டாம் முறை முன்னறிவிக்கிறார். இயேசு எப்போதும் தம் ‘இறுதியை’ மனத்தில் வைத்து வாழ்ந்தார். ஆகையால்தான், வேகமாகவும் நன்றாகவும் அவருடைய வாழ்க்கையை அவரால் வாழ முடிந்தது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்களுடைய இறுதியை மனத்தில் வைத்தே அனைத்தையும் தொடங்குகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 211)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: