இன்றைய இறைமொழி
சனி, 31 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 21-ஆம் வாரம் – சனி
1 கொரிந்தியர் 1:26-31. மத்தேயு 25:14-30
சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய்
தூர நாட்டிற்குப் பயணம் செய்யும் ஒருவர் தன் பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வது, நெடும் பயணம் மேற்கொள்ளும் அரசர் தன் அமைச்சர்கள் மற்றும் பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து அவர்களைச் சோதிப்பதும் எல்லா இடங்களிலும் காணக் கூடிய ஓர் எதார்த்தம். இந்த எதார்த்தத்தின் பின்புலத்தில் விண்ணரசு பற்றிய கருத்துரு ஒன்றை முன்மொழிகின்றார் இயேசு.
நிகழ்வின்படி ஒருவர் தம் பணியாளர்களிடம் அவரவர் திறமைக்கு ஏற்ப ஐந்து, இரண்டு, ஒன்று என்று தாலந்தை வழங்குகின்றார். இங்கே தலைவர் தம் பணியாளர்களின் திறமையை எப்படி ஆராய்ந்து பார்த்தார் என்பதும், ஏன் அவ்வாறு செய்தார் என்பதும் கொடுக்கப்படவில்லை. தலைவர் தான் விரும்பியதைச் செய்கின்றார். சில நேரங்களில் எல்லாருக்கும் ஒரு தெனாரியம் கொடுப்பார். சில நேரங்களில் தகுதிக்கு ஏற்பக் கொடுப்பார். அவர் தலைவர்! பணம் அவருடையது! அவ்வளவுதான்!
ஐந்து மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்கள் வணிகம் செய்யப் புறப்படுகின்றனர். ஒரு தாலந்து பெற்றவரோ அதைப் புதைத்து வைக்க நிலத்தைத் தேடிப் போகின்றார். மற்றவர்களின் தாலந்துகள் நிலத்துக்கு மேலே இருக்கின்றன. இவருடைய தாலந்தோ நிலத்துக்குக் கீழே இருக்கின்றது. தன் தலைவர் தனக்கு அளித்ததைப் பார்க்கக் கூட விரும்பவில்லை இவர். தன் தலைவர் தன் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார் என்னும் கோபமா? அல்லது மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து, ‘இந்த ஒரு தாலந்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது’ என்று அவர் அடைந்த மனச்சோர்வா? இவருடைய செயலின் காரணம் நமக்கு இப்போது தெரியவில்லை. பின்னரே தெரிகிறது.
ஒரு தாலந்து பெற்றவர் அதை அப்படியே நீட்டுகின்றார். நீட்டும்போது தன் செயலின் காரணத்தை அவரே மொழிகின்றார்: ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர். நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர். நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்.’
இவரின் வார்த்தைகளிலிருந்து மூன்று விடயங்களை நாம் ஊகிக்க முடியும்: (அ) இவர் தலைவரை விமர்சனம் அல்லது தகுதியாராய்ச்சி செய்கின்றார். தன்னால் இதைப் பெருக்க இயலுமா என நினைப்பதை மறுத்து தனக்கு இதை வழங்கியவரையும் அவருடைய உளப்பாங்கையும் ஆய்ந்து பார்க்கின்றார். (ஆ) இவர் தலைவரைப் பற்றி முற்சார்பு எண்ணம் கொண்டிருக்கின்றார். தன் தலைவர் இப்படித்தான் என்றும், இப்படி இருப்பவர் என்றும் அப்படியே இருப்பார் என்றும் நினைக்கின்றார். (இ) தாலந்தைப் பெருக்கும் முயற்சியில் தான் அதை இழந்து விடுவோமோ என்று அச்சம் கொள்கின்றார். இதை பொருளியலில் (economics) ‘லாஸ் அவெர்ஷன் ஃபேலஸ்ஸி’ (loss aversion fallacy) என அழைக்கின்றார்கள். தாலந்துகள் பெருகினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என அவர் நினைப்பதற்குப் பதிலாக, இத்தாலந்து சுருங்கிவிட்டால் கவலைப்பட வேண்டுமே என நினைப்பதுதான் ‘லாஸ் அவெர்ஷன் ஃபேலஸ்ஸி.’
மேலும், இப்பணியாளர் சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவும் தவறிவிட்டார்.
இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நம் இதயத்தில் எழும் எண்ணங்களைப் பற்றி நாம் விழிப்பாயிருத்தல் அவசியம். ஏனெனில், அவையே நம்மைச் செயல்பாட்டுக்கு இட்டுச் செல்கின்றன. எடுத்துக்காட்டாக, கொலை, கொள்ளை, வன்மம் போன்ற செயல்கள் எல்லாம் முதலில் எண்ணங்களாகவே தொடங்குகின்றன.
(ஆ) சிறியவற்றிலும் பிரமாணிக்கம் அவசியம். கணவன்-மனைவி உறவு நிலை பிரமாணிக்கத்திலோ, அல்லது கடவுள்-அருள்பணியாளர் பிரமாணிக்கத்திலோ, ‘சின்ன விடயம்தானே இது! கடவுள் இதை மன்னிக்க மாட்டாரா?’ என்ற எண்ணமே பெரிய தவறுகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.
(இ) அவரவருக்குக் குறிக்கப்பட்ட வேலையைச் செய்வது. மூன்றாவது பணியாளர் தான் ஒரு பணியாளர் என்ற வரையறையை மறந்து, தன்னைத் தலைவர்போல எண்ணிக் கொள்கின்றார். சில நேரங்களில் நம் வேலைகளைச் செய்வது மட்டுமே வாழ்க்கை நமக்கு வழங்கும் வரையறையாக இருக்கிறது.
விண்ணரசு பற்றி நாம் கற்கும் பாடங்கள் எவை?
(அ) தலைவர் தாம் விரும்பியதை தாம் விரும்புபவருக்குக் கொடுக்கிறார். ஏன் என்று அவரிடம் யாரும் கேட்க முடியாது.
(ஆ) தலைவர் தம் பணியாளர்களைப் பொறுப்புக்குரியவர்கள் என்னும் நிலைக்கு உயர்த்துகிறார். அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்வதும் அதிலிருந்து தள்ளிவிடப்படுவதும் நம் கைகளில்தான் உள்ளது.
(இ) தலைவர் திடீரென்று திரும்பி வருவார். இரவல் கொடுத்தவர் அதைத் திரும்பக் கேட்கிறார். நம் வாழ்வுக்கு நாம் பொறுப்பாளர்கள் என்பதை அவர் நமக்கு உணர்த்துகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 கொரி 1:26-31), ‘நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள்’ எனக் கொரிந்து நகரத் திருஅவையாருக்கு நினைவூட்டுகின்றார் பவுல். நாம் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப்பார்ப்பதும் நலம். நாம் எத்தனை தாலந்து கொடுக்கப்பட்டு அழைக்கப்பட்டாலும் அந்த நிலைக்கு ஏற்ப வாழ்க்கையைத் தகவமைத்துக் கொள்வது நலம்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தாங்கள் பெற்றுள்ள கொடைகளை பெருக்கிக் கொள்வதில் அக்கறை காட்டுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 187).
Share: