இன்றைய இறைமொழி
சனி, 7 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 22-ஆம் வாரம், சனி
1 கொரிந்தியர் 4:6-15. லூக்கா 6:1-5
தன்னுரிமை விடுத்து சரணாகதி
திருத்தூதுப் பணி, கடவுளின் கொடைகள், கட்டளைகள் நம்மில் சரணாகதியைத் தூண்டவேண்டுமே தவிர தன்னுரிமையைத் தூண்டக்கூடாது என அறிவுறுத்துகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. கடவுள் நமக்கு அளித்துள்ள கொடைகள் நம்மில் பெருமை அல்லது பெருமித உணர்வை அல்ல, மாறாக, தாழ்ச்சியையும் சரணாகதியையும் எழுப்ப வேண்டும்.
(அ) தன்னுரிமையின் ஆபத்துகள்
கொரிந்து நகர நம்பிக்கையாளர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட நம்பிக்கை, அழைத்தல், கொடைகள் ஆகியவற்றை முன்நிறுத்தி தாங்கள் மற்றவர்களைவிடப் பெரியவர்கள் என்று இறுமாப்பு அடைந்தார்கள். அவற்றுக்கு ஊற்றான கடவுளை மறந்துவிட்டு, அவற்றை மட்டும் பற்றிக்கொண்டு தன்னுரிமை பாராட்டினார்கள். அவர்களுடைய இறுமாப்புநிறை வாழ்வுக்கு மாற்றாகத் தங்களுடைய திருத்தூதர் பணிநிலை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிற பவுல், தன்னுரிமையால் வீக்கமடையும் ஒருவர் கடவுளின் அருளாலேயே கொடைகளும் வெற்றிகளும் சாத்தியம் என்பதை மறந்துவிடுகிறார் என உரைக்கிறார் (முதல் வாசகம்).
நம் உளப்பாங்கை ஆய்ந்தறிய அழைக்கிறது இந்த வாசகம். கடவுள் நமக்குக் கொடுத்துள்ள ஆசீர் மற்றும் திறன்களை முதன்மைப்படுத்தி நாம் அவற்றைக் குறித்துப் பெருமை கொள்கிறோமா? தன்னுரிமை நன்றியுணர்விலிருந்தும் தாழ்ச்சியிலிருந்தும் நம்மைத் தள்ளி விடுகிறது. கடவுளிடம் சரணாகதி அடையும்போது நம் நன்நிலையும் நற்கொடையும் கடவுளால்தான் சாத்தியம் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம்.
(ஆ) தாழ்ச்சியையும் சார்புநிலையையும் பெற்றுக்கொள்தல்
நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாகக் குற்றம் சுமத்துகிறார்கள் பரிசேயர்கள். ஓய்வுநாளின் நோக்கத்தையும், இரக்கத்தின் அவசியத்தையும் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. கடவுளின் கட்டளைகள் மனிதர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டவை. நம் செயல்களை பரிவே இயக்க வேண்டும்.
சட்டரீதியான அணுகுமுறைகளையும் உறைந்துபோன எதிர்பார்ப்புகளையும் விடுத்து பரிவையும் ஏற்றுக்கொள்தலையும் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுளின் இரக்கத்துக்கும் அன்புக்கும் ஏற்றாற்போல நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்வதே சரணாகதி. கடவுளை நாம் சார்ந்திருக்கிறோம் என்னும் உறவு வளரும்போது தன்னுரிமை மறைகிறது.
(இ) சரணாகதி வாழ்வு
தன்னுரிமை நான்-எனது-எனக்கு என்று நம் நோக்கத்தை மாற்றுகிறது. சரணாகதியோ இறைவன்-இறைவனுடைய-இறைவனுக்கு என்று நம் திசையைத் திருப்புகிறது. நம் அறிவு, புரிதல், சட்டங்களை விடுத்து, கடவுளின் ஞானம், அறிதல், பரிவு ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது.
தாழ்ச்சி, நன்றியுணர்வு, கடவுள்சார்பு வாழ்க்கை ஆகியவற்றால் நாம் சரணாகதியில் வளர்கிறோம். நம் தன்னுரிமை வழியாக அல்ல, மாறாக, அன்பு, பணிவிடை வழியாக கடவுளை அடைகிறோம். இவ்வாறாக, நாம் கடவுளின் திருவுளம் நம் வாழ்வில் செயல்பட அனுமதிக்கிறோம்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் கடவுளுடைய திருவுளத்துக்குச் சரணாகதி அடைவதில் தங்கள் வாழ்வின் உண்மையான நிறைவைப் பெறுகிறார்கள், கடவுளுடைய அருளின் கருவிகளாக இவ்வுலகில் செயல்படுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 193).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: