இன்றைய இறைமொழி
சனி, 8 ஜூன் 2024
பொதுக்காலம் 9-ஆம் வாரம் – சனி
தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் – நினைவு
2 திமொத்தேயு 4:1-8. லூக்கா 2:41-51
சரணாகதி – புகழ்ச்சி – மௌனம்
இயேசுவின் திருஇதயத் திருநாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது மரியாளின் மாசற்ற இதயம். இயேசு தன் அன்பை மனுக்குலத்திற்குக் காட்டியதை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியா இயேசுவையும் இறைத்தந்தையும் அன்பு செய்ததை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியாவின் இதயத்தின் வழியாக நம் அனைவருடைய இதயங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இத்திருவிழாவின் நோக்கம்.
லூக்கா நற்செய்தி 2-ஆவது பிரிவில், ‘மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்’ என இருமுறை வாசிக்கின்றோம். மேலும், மரியாவின் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சிமியோன் இறைவாக்குரைக்கின்றார். ‘இயேசுவின் சிலுவையின் கீழ் நின்ற மரியா தன் உள்ளத்தால் தன்னையே அவருடன் சிலுவையில் அறைந்துகொண்டார். இயேசுவைத் தன் உடலில் ஏந்தியதை விட, உள்ளத்தில் ஏந்தியதால்தான் வணக்கத்துக்குரியவர் ஆனார்’ என்கிறார் புனித அகுஸ்தினார்.
மரியாளின் இதயத் துடிப்பை நாம் நற்செய்தி நூல்கள் மற்றும் திருத்தூதர் பணிகளில் நிறைய வாசிக்கின்றோம். வானதூதரின் வார்த்தை கேட்டு, ‘இது எத்தகையதோ?’ என்று வியப்பில் கலங்குகிறது இதயம். ‘இது எங்ஙனம் ஆகும்?’ என்று கேள்வி கேட்டு தயங்குகிறது இதயம். ‘எலிசபெத்துக்கு குழந்தை பிறக்கப் போகிறதா?’ என்று துள்ளிக் குதித்து அவருக்கு உதவ ஓடுகிறது இதயம். ‘சத்திரத்தில் இடமில்லையா?’ – பயம் கொள்கிறது இதயம். ‘வந்த இடையர்களுக்கு இடம் எப்படித் தெரிந்தது?’ – வியப்பு கொள்கிறது இதயம். ‘பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் என் குழந்தைக்கா!’ – ஆச்சர்யம் கொள்கிறது இதயம். ‘என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்கக் கூடாதா?’ – மகனின் கேள்வி கேட்டு குழம்புகிறது இதயம். ‘உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது!’ – ஊராரின் உளறல் கேட்டு பதைபதைக்கிறது இதயம். ‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!’ – இல்லத்தாரின் இழுக்கு பற்றிக் கவலை கொள்கிறது இதயம். ‘இதோ! உம் மகன்!’ – மேலே பார்ப்பதா? கீழே பார்ப்பதா? குழம்புகிறது இதயம். ‘மகனுக்குப் பின் இறையாட்சி இயக்கத்திற்கு என்ன ஆகும்?’ – மேலறையில் பெந்தகோஸ்தே பெருவிழாவில் செபிக்கிறது இதயம்.
இவ்வாறாக, இயேசுவின் பிறப்புக்கு முன், இயேசுவின் பிறப்பில், வாழ்வில், பணியில், இறப்பில், உயிர்ப்பில், விண்ணேற்றத்திற்குப் பின் என அவருக்காகவே துடிக்கிறது அன்னை கன்னி மரியாளின் இதயம். ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!’ என்று தன் உள்ளம் வாளால் காயம்படக் கையளித்தார் அன்னை.
(அ) சரணாகதி அடையும் இதயம்
இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டபோது, ‘இது எங்ஙனம் ஆகும்?’ எனக் கேட்கிற மரியா, இறுதியில், ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்று தூதர் சொல்லக் கேட்டவுடன், ‘இதோ உம் அடிமை! உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!’ என்று சரணாகதி அடைகிறார். கேள்வி கேட்கிற உள்ளம் சரணாகதி அடைகிற உள்ளமாக மாறுகிறது. மரியாவின் அர்ப்பணம் அல்லது சரணாகதி மூளையிலிருந்து இதயத்துக்குக் கடந்துசெல்வதாக இருக்கிறது. உடல், மூளை, இதயம் என அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணமாக்குகிறார் மரியா.
(ஆ) கடவுளைப் புகழும் இதயம்
அன்னை கன்னி மரியாவின் இதயம் வாழ்க்கை முழுவதும் கடவுளைப் புகழ்ந்தது. எலிசபெத்து-சக்கரியாவின் இல்லத்தில், ‘என் ஆன்மா ஆண்டவரைப் போற்றிப் புகழ்கிறது!’ எனச் பாடுகிற மரியா, இறைவனின் அரும்பெரும் செயல்கள் அனைத்தும் இங்கே இப்போதே நடந்தேறிவிட்டதாக மொழிகிறார். இங்கே மரியாவின் இதயம் எதிர்நோக்கு கொண்டதாகவும் இருக்கிறது.
(இ) மௌனம் காக்கும் இதயம்
வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது மௌனம் காக்கிறார் மரியா. அனைத்தையும் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்திக்கிறார். இறைவனின் வார்த்தையை தன் வயிற்றில் ஏந்திய மரியா, இறைமகனின் வார்த்தைகளை உள்ளத்தில் ஏந்தி அமைதி காக்கிறார்.
சரணாகதி – புகழ்ச்சி – மௌனம் எனத் தொடர்கிறது மரியாவின் இதயத் துடிப்பு.
நிற்க.
இன்றைய முதல் வாசகத்தில், ‘நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’ என மொழிகிற பவுல், தன் வெற்றிவாகையை எதிர்நோக்குகிறார். தன் இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை அடைவதில் வெற்றியும் கண்டார் பவுல். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 119).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: