இன்றைய இறைமொழி
செவ்வாய், 10 செப்டம்பர் ’24
பொதுக்காலம் 23-ஆம் வாரம், செவ்வாய்
1 கொரிந்தியர் 6:1-11. லூக்கா 6:12-19
குழும உருவாக்கம்
மனிதர்கள் சமூக விலங்குகள். நாம் மனிதர்களாகப் பிறப்பதில்லை, மாறாக, மனிதர்களாக மாறுகிறோம் என்கிறார்கள் சமூகவியல் அறிஞர்கள். நம் உருவாக்கத்தில் குழுமம் – குடும்பம், சமூகம் – முதன்மையான இடம் பெறுகிறது. குழுமங்கள் நம்மை உருவாக்குவது போல, குழுமங்களை நாம் உருவாக்குகிறோம். நம் இருத்தல் குழுமத்தின் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிறிஸ்தவ குழுமங்கள் உருவாக்கத்தையும் அவை தொடர்ந்து வளர்வதையும் எடுத்துரைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
(அ) ஒப்புரவையும் ஒன்றிப்பையும் நாடுதல்
முதல் வாசகத்தில், கொரிந்து நகரத் திருஅவைக் குழுமம் தங்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகளையும் பிரச்சினைகளையும் கையாளுகிற முறையை ஆய்ந்து பார்க்கிற பவுல், அவர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக நடுவர்களை நாடுவதை வழக்கமாகக் கையாளுகிறார்கள். தங்கள் குழுமத்துக்குள் உள்ள பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதன் வழியாக ஒப்புரவையும் ஒன்றிப்பையும் அவர்கள் நாடுமாறு அறிவுறுத்துகிறார்.
குழம வாழ்வில் பிரச்சினைகள் வருவது இயல்பு. அவற்றை ஒரு குழுமம் எப்படிக் கையாளுகிறதோ அதைப் பொருத்தே குழுமத்தின் முதிர்ச்சியை அளவிட முடியும். மன்னிப்பு, புரிதல், ஒப்புரவு ஆகியவை குழும வாழ்வை உருவாக்குகின்றன.
(ஆ) இறைவேண்டல் என்னும் அடித்தளம்
தம் பணிக்கான உடனுழைப்பாளர்களைத் தெரிவு செய்கிற இயேசு, அவர்களைத் தம் குழுமத்துக்குள் அனுமதிக்கும் முன்னர் தந்தையுடனான உறவை நாடிச் செல்கிறார் இயேசு. தந்தையோடு உள்ள குழும உறவு சீடர்களுடனான உறவுக்கு அடித்தளமாக இருக்கிறது.
இறைவேண்டல் செய்கிற குழுமம் இணைந்த குழுமமாக இருக்கிறது.
(இ) குழும வாழ்வே பணியின் இயங்குதளம்
தம் உடனுழைப்பாளர்களை ஏற்படுத்துகிற இயேசு அவர்களை வேறு வேறு பின்புலங்களிலிருந்து தெரிவு செய்கிறார். அவர்கள் வேறு வேறு பின்புலத்திலிருந்து வந்தாலும் அவர்களுடைய பணியின் நோக்கம் ஒன்றாக இருக்கிறது. இறைவார்த்தை அறிவிக்கவும், நோய்கள் நீக்கவும், பேய்கள்மேல் அதிகாரம் கொண்டிருக்கவும் அதிகாரம் தருகிறார்.
கிறிஸ்துவின் பணியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்பவர்கள் திருத்தூதர்கள். நம்பிக்கையின் கரங்களாக அவர்கள் நம்மை நோக்கி நீண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பணிகளில் நாமும் இணையுமாறு நம்மை அழைக்கிறார்கள்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தங்களுடைய குழும வாழ்வை அமைதி, இறைவேண்டல், பணியால் நெறிப்படுத்துகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 195).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: