இன்றைய இறைமொழி
செவ்வாய், 13 ஆகஸ்ட் ’24
பொதுக்காலம் 19-ஆம் வாரம் – செவ்வாய்
எசேக்கியேல் 2:8-3:4. மத்தேயு 18:1-5, 10-14
சிறியவரே பெரியவர்
‘விண்ணரசில் மிகப் பெரியவர்?‘ என்று இயேசுவிடம் கேட்கிறார்கள் சீடர்கள்.
‘நம்பிக்கையின் தந்தை ஆபிரகாம்,’ ‘பன்னிரு புதல்வர்களின் தந்தை யாக்கோபு,’ ‘தன் எதிர்த்தகைவால் எகிப்தின் ஆளுநராக மாறிய யோசேப்பு,’ ‘கடவுளை நேருக்கு நேராகக் கண்ட மோசே,’ ‘வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் மக்களை வழிநடத்திய யோசுவா,’ ‘பலசாலி சிம்சோன்,’ ‘முதல் அரசர் சவுல்,’ ‘ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் தனிப்பெரும் பேரரசர் தாவீது,’ ‘ஞானியான சாலமோன்’ என்று யாருடைய பெயரையும் முன்மொழியவில்லை இயேசு.
ஒரு சிறு குழந்தையை முன்நிறுத்தி, குழந்தையே விண்ணரசில் பெரியது என்றும், இயேசுவை ஒரு குழந்தை போல ஏற்றுக்கொள்பவர் பெரியவர் என்றும் முன்மொழிகிறார் இயேசு.
மேலும், வறியோர், வலுவற்றோர், காணாமல்போவோர் என்னும் சின்னஞ்சிறியவர்கள்மேல் கடவுள் காட்டுகிற அக்கறையை எடுத்துரைக்கிறார்.
(அ) விண்ணரசைப் பொருத்தமட்டில் பெரியவர் என்னும் நிலை சிறியவராதல் என்னும் நிலையில்தான் வருகிறது.
(ஆ) கடவுள் வலுவற்றவர்களின் கடவுளாக இருக்கிறார். அவர்களைத் தேடிச் சென்று தூக்கி வருகிறார்.
(இ) விண்ணரசுக்கு உரியவரும் தம்மையே தாழ்த்திக்கொள்கிறார்.
மனிதகுலத்தின் விநோதம் என்னவெனில், நாம் வேகமாக வளர்கிறோம். வளர்ந்தபின், ‘நாம் இளவல்களாக இருந்திருக்கக் கூடாதா?’ என ஏங்குகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேலை ‘மானிடா’ என அழைக்கிற ஆண்டவராகிய கடவுள், ‘நீ கலகக்காரனாய் இராதே!’ என அறிவுறுத்துகிறார். மேலும், குழந்தைகளுக்கு உரிய திறந்த உள்ளத்துடன் ஏட்டுச்சுருளை உண்ண முன்வருகிறார் எசேக்கியேல்.
‘கலகம்’ என்பது உள்ளத்தில் எழுகிற கிளர்ச்சி. இது முதலில் எண்ணமாகத் தோன்றி, வார்த்தையாகத் தடித்து, செயலாக வெடிக்கிறது. கலக உள்ளம் நம்மைக் கடவுளிடமிருந்து தூரமாக்கிவிடுகிறது.
நிற்க.
‘குழந்தை உள்ளம் கலகம் செய்வதில்லை’ என அறிவார்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 172).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: