• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 14 மே 2024. சேர்த்துக்கொள்ளப்படுதல்

Tuesday, May 14, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
செவ்வாய், 14 மே 2024
பாஸ்கா காலம் 7-ஆம் வாரம் – செவ்வாய்
திப 1:15-17, 20-26. யோவா 15:9-17
புனித மத்தியா, திருத்தூதர் – விழா

 

சேர்த்துக்கொள்ளப்படுதல்

 

‘மத்தியா’ என்றால் ‘கடவுளின் கொடை’ அல்லது ‘கடவுளால் கொடுக்கப்பட்டவர்’ என்பது பொருள். ‘மத்தேயு’ என்பதன் பொருளும் இதுவே. தொடக்கத் திருஅவையில் யூதாசின் இறப்புக்குப் பின்னர், அவருடைய இடத்தை நிரப்புமாறு இருவர் முன்னால் நிறுத்தப்படுகின்றனர்: ‘பர்சபா’ மற்றும் ‘மத்தியா.’ இவர்களில் யாரைத் தெரிந்துகொள்வது என்று பார்க்க சீட்டுப் போடுகின்றனர். சீட்டு இவர் பெயருக்கு விழுகிறது.

 

மத்தியா பதினொருவருடன் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். ‘சேர்த்துக்கொள்ளப்படுதல்’ என்றால் ‘தேர்ந்தெடுக்கப்படுதல், தகுதியாக்கப்படுதல், சிறப்பானதாகக் கருதப்படுதல்.’ சேர்த்துக்கொள்ளப்படுகிற அனைத்தும் மதிப்பு பெறுகிறது.

 

திருவுளச் சீட்டு எடுத்தல் அல்லது அறிதல் என்பது யூத மரபிலும் இருந்த வழக்கமே. இந்த வழக்கத்தின்படி ஊரிம் மற்றும் தும்மிம் என்னும் இரு கட்டைகள் அல்லது உருளைகளைக் கொண்டு தலைமைக்குரு இறைவனின் திருவுளத்தை அறிந்து சொல்வார். பொதுவாகப் போருக்குச் செல்லும் முன்னர் திருவுளம் அறியப்பட்டது.

 

இயேசுவின் திருத்தூதர்கள் 12 பேர். 12 என்ற எண் முதல் ஏற்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் பெறக் காரணம் யாக்கோபின் புதல்வர்கள் 12 பேர். இவர்கள் வழியாகவே இஸ்ரயேல் என்ற இனத்தில் உள்ள 12 குலங்கள் உருவாகின்றன. இஸ்ரயேலின் 12 புதல்வர்களில் 11-வது புதல்வரான யோசேப்பு அவர்களுடைய சகோதரர்களால் விற்கப்படுகின்றார். அவருடைய இரு மகன்களின் பெயர் மனாசே மற்றும் எப்ராயிம். ‘லேவி’ என்னும் குலம் குருத்துவக் குலம் ஆகிறது. யோசேப்பு என்ற ஒரு குலம் இல்லை. அது அவருடைய மகன்கள் பெயரால் இரு குலங்களாக மாறியது. ஆக, 12 என்ற எண் தக்கவைக்கப்பட்டது.

 

திருத்தூதர்கள் தங்கள் வேர்களையும், தொடக்கத்தையும் தக்கவைத்துக்கொள்ள விரும்புகின்றனர். குறிப்பாக, தங்கள் தலைவரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவே 12 திருத்தூதர்களை நியமித்ததால், அதே எண்ணை அவர்கள் நிலைக்க வைக்க விரும்புகின்றனர். அதன்படி, யூதாசின் இடம் காலியாக இருக்க, அந்த இடத்தில் ஒருவரை நிரப்பும் தேவை எழுகின்றது.

 

இதற்கிடையில், பவுல் தன் சிறப்பு அழைப்பின் வழியாக திருத்தூதர்கள் குழாமில் சேர்க்கப்பட்டதுடன், புறவினத்தாரின் திருத்தூதர் என்றும் தன்னை அழைத்து மகிழ்கின்றார். மேலும், சில இடங்களில் பர்னபா என்ற பெயரும் திருத்தூதர் அட்டவணையில் உள்ளது.

 

இன்றைய திருநாளின்படி மத்தியா 12-வது நபர். திருவுளச் சீட்டால் தெரிவு செய்யப்பட்ட நபர்.

 

புனித மத்தியாவைப் பற்றிய குறிப்பு நற்செய்தி நூல்களில் இல்லை. ஆனால், இவர் இயேசுவோடு அவருடைய விண்ணேற்றம் வரை இருந்ததாக திருத்தூதர் பணிகள் பதிவு செய்கின்றது. யுசேபியு எழுதிய நூலில் இவர் ‘தோல்மாய்’ என அழைக்கப்படுகின்றார். அலெக்சாந்திரிய நகர் கிளமெந்து, சக்கேயுவின் இன்னொரு பெயர்தான் மத்தியா’ என எழுதுகிறார். சில இடங்களில் இவருடைய பெயர் ‘பர்னபா’ என்றும் உள்ளது.

 

இவருடைய பணி மற்றும் இறப்பு பற்றியும் மூன்று குறிப்புகள் உள்ளன: ஒரு குறிப்பின்படி, இவர் கப்பதோசி பகுதியில் பணியாற்றிவிட்டு அங்கே இறந்தார் என்றும். இன்னொரு குறிப்பில், அவர் மனித இறைச்சி சாப்பிடும் கொடியவர்களுக்கு நற்செய்தி அறிவித்து கல்லால் எறியப்பட்டு இறந்தார் என்றும், மூன்றாவது குறிப்பில், இவர் எருசலேமில் பணியாற்றி வயது முதிர்ந்து இறந்தார் என்றும் உள்ளது.

 

இன்றைய திருநாள் நமக்குச் சொல்வது என்ன?

(அ) இயேசுவின் திருத்தூது நிலைக்குள் நாம் அனைவரும் நுழைய முடியும். இந்த மத்தியா என்பவர் நம் அனைவருடைய பதிலி. பணியாளர் நிலையில் இருந்த இவர் நண்பர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றார். சீடர் என்ற நிலையில் இருந்த இவர் திருத்தூதர் என்ற நிலைக்கு மேன்மைப்படுத்தப்படுகின்றார்.

(ஆ) வாழ்வின் நிகழ்வுகள் நமக்கு நேர்கின்றன. நாம் சிலவற்றை மட்டுமே தெரிவு செய்ய முடிகிறது. நம் கைக்குள் அடங்காதவற்றை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடிவதில்லை. நேர்கின்ற அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் துணிவு தேவை என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் மத்தியா. திருத்தூதர்நிலை அவர்மேல் விழுந்தாலும், அதன் துன்பங்களோடு அதைத் தழுவிக்கொள்கிறார் அவர். தனக்கு நேர்ந்த அதிர்ஷ்டம் என எடுத்துக்கொள்ளாமல், அதை ஒரு பொறுப்பு என ஏற்றுக்கொள்கிறார்.

(இ) ‘நான் உங்களை அன்பு செய்தேன், உங்களைத் தேர்ந்துகொண்டேன், நீங்கள் கனிதருமாறு உங்களை ஏற்படுத்தினேன்’ என்று தம் சீடர்களிடம் உரையாடுகிறார் இயேசு. இவ்வாறாக, ‘நான்’ என்னும் இயேசுவே இங்கே செயல்பாடுகளை முன்னெடுக்கிறார். இறைவனுடைய செயல்பாடுகளும் முன்னெடுப்புகளும் நம் வாழ்வில் நிகழுமாறு நாம் அனுமதிக்க வேண்டும்.

 

நிற்க.

 

‘எதிர்வருகிற யூபிலி ஆண்டில் அனைவரும் ‘வாயிலாகிய’ (காண். யோவா 10:7, 9) ஆண்டவர் இயேசுவை தனிப்பட்ட, உண்மையான முறையில் கண்டு உறவாடுவார்களாக! அவரே நம் மீட்டு, அவரே அனைவருக்கும் எங்கும் ‘நம் எதிர்நோக்கு’ (காண். 1 திமொ 1:1) என அறிவிக்கிறது திருஅவை.’ – திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலி அறிவிப்பு ஆணை, 9 மே 2024. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 97)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: