இன்றைய இறைமொழி
செவ்வாய், 17 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 24-ஆம் வாரம், செவ்வாய்
1 கொரிந்தியர் 12:12-14, 27-31. லூக்கா 7:11-17
அழாதீர்!
ஆபிரகாமின் மகன் ‘உயிர்பெறும் நிகழ்வு’ (காண். தொநூ 22), நயீன் நகரத்துக் கைம்பெண்ணுடைய மகன் ‘உயிர்பெறும் நிகழ்வு’ (லூக் 7) இரண்டுமே ஆச்சர்யங்களைக் கொண்டிருக்கின்றன. ஆபிரகாம் மலையின் இந்தப் பக்கம் தன் மகன் ஈசாக்கை ஏற்றிக்கொண்டு போன போது, கடவுள் மலையின் அந்தப் பக்கம் ஓர் ஆட்டுக்குட்டியை ஏற்றிக்கொண்டு வருவது. நகருக்குள்ளிருந்து புறம் நோக்கி இளைஞன் ஒருவன் உயிரற்ற சடலமாகத் தூக்கிச் செல்லப்படுகின்றார். நகர்ப்புறத்திலிருந்து உள்நோக்கி வாழ்வின் ஊற்றாகிய இயேசு வருகின்றார். வந்தவர் பரிவு கொண்டு பாடையைத் தொட்டு நிறுத்துகின்றார். இறந்த இளைஞன் உயிர் பெற்று எழுகின்றார்.
முதல் நிகழ்வில்கூட ஆபிரகாமின் நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கடவுள் இருக்கின்றார். இரண்டாம் நிகழ்வில் அப்படி எதுவும் இல்லை.
வழக்கமாக இயேசு நிகழ்த்துகின்ற வல்ல செயல்கள் அல்லது அற்புதங்களில், குணம் அல்லது நலம் பெற விரும்புகிறவர் அல்லது அவருடைய சார்பில் இன்னொருவர் விண்ணப்பம் செய்வார். ஆனால், விண்ணப்பம் இல்லாமலேயே தானே செயலாற்றுகின்றார் இயேசு.
லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் இந்த நிகழ்வு நயீன் நகரத்தில் நடக்கின்றது. ஒரு பெண். அவர் கைம்பெண். தன் ஒரே மகனையும் இழக்கின்றார். எல்லாமே முடிந்தது என நினைத்தவரின் வாழ்வில் இயேசு அற்புதம் நிகழ்த்துகின்றார்.
முதலில் இயேசு தன் பயணத்தை நிறுத்துகின்றார். பின்னர் பெண்ணின் அழுகையை நிறுத்துகின்றார். பின்னர் பாடையை நிறுத்துகின்றார்.
சில பயணங்களை நிறுத்துவது நல்லது. சில அழுகையை நிறுத்துவது நல்லது. சில பாடைகளை நிறுத்துவது நல்லது.
புறப்பட்டுவிட்டோம் என்பதற்காகச் சென்றுகொண்டே இருக்க வேண்டிய தேவையில்லை. நாம் நிற்கின்ற இடத்தில்தான் இறைவன் வல்ல செயல் நிகழ்த்துகின்றார்.
இயேசு இளைஞனுக்கு உயிர் தந்த நிகழ்வில் அவரை இறைவாக்கினராக – எலியா, எலிசா போன்று – மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இன்று நாம் எதை நினைத்து அழுதுகொண்டிருக்கின்றோம்.
அழாதீர்! என்று நம்மைப் பார்த்துச் சொல்ல இதோ அவர் அருகில் இருக்கின்றார்.
முதல் வாசகத்தில், அருள்கொடைகள் பலவற்றை முன்மொழிகிற பவுல், மேலான அருள்கொடைகளை நாடுமாறு அவர்களை அழைக்கிறார். அருள்கொடைகள் அனைத்தின் ஊற்றாக இருக்கிறவர் ஆண்டவர்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கடவுளின் உடனிருப்பைக் கண்டுணர்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 201)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: