இன்றைய இறைமொழி
செவ்வாய், 19 மார்ச் 2024
புனித யோசேப்பு – கன்னி மரியாளின் கணவர்
2 சாமுவேல் 7:4-5அ, 12-14அ, 16. உரோமையர் 4:13, 16-18, 22. மத்தேயு 1:16, 18-21, 24அ
தாவீதின் மகனே
இன்று புனித யோசேப்பு – கன்னி மரியாளின் கணவர் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். ஐரோப்பிய நாடுகளில் இந்த நாள் ‘தந்தையர் நாள்’ என்றும் கொண்டாடப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தையும் நற்செய்தி வாசகத்தையும் இணைக்கிற ஒரு சொல் அல்லது நபர் தாவீது. நற்செய்தியாளர் மத்தேயு யோசேப்பைப் பற்றிய மூன்று வரையறைகளை அல்லது தலைப்புகளை முன்மொழிகிறார்
(அ) ‘யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு’
யோசேப்பு எங்கிருந்து வந்தார், எங்கே சென்றார் என்னும் இரு கேள்விகளுக்கு விடையாக இருக்கிறது மத்தேயு நற்செய்தியாளரின் அறிமுகம். ‘யாக்கோபின் மகன்’ என்பது யோசேப்பின் வேர். ‘மரியாவின் கணவர்’ என்பது யோசேப்பின் கிளை அல்லது கனி. நேரத்தைக் குறிக்கிற உரோமைக் கடவுளுக்கு இரண்டு முகங்கள். உண்மையில் நேரம் என்பது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிற நிகழ்காலம். நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் இரண்டு முகங்கள் நோக்கி நடந்துகொண்டே இருக்கிறோம். ‘யாக்கோபின் மகன்’ என்பது யோசேப்பின் இறந்தகாலம். ‘மரியாவின் கணவர்’ என்பது யோசேப்பின் எதிர்காலம். இவ்விரண்டு காலங்களுக்கும் இடையே நிற்கிறார் யோசேப்பு.
(ஆ) ‘யோசேப்பு நேர்மையாளர்’
கிரேக்கத்தில் ‘டிகாயுசுனே’ என்னும் சொல், சட்டம் சார்ந்த கீழ்ப்படிதல் என்னும் பொருளைக் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் நிலையே நேர்மையாளர் நிலை. ஆனால், யோசேப்பு சட்டம் சார்ந்த நேர்மையை அல்ல, மாறாக, இரக்கம் சார்ந்த நேர்மையைக் கொண்டிருக்கிறார் என்பது தொடர்ந்து வரும் பாடத்தில் தெளிவாகிறது. யோசேப்பு நேர்மையாளர். ‘ஆனால்’ மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்று சட்டத்தை அறிந்தவராக இருந்தாலும் மோசேயின் சட்டத்தையும் கடந்து நிற்கிறார் யோசேப்பு.
(இ) ‘தாவீதின் மகனே’
யோசேப்புக்குக் கனவில் தோன்றுகிற ஆண்டவரின் தூதர், ‘யோசேப்பே, தாவீதின் மகனே’ என அவரை அழைக்கிறார். இப்போதுதான் யோசேப்புக்கு அனைத்தும் புரியத் தொடங்குகிறது. தான் ‘மரியாவின் கணவர்’ என நினைத்தவருக்கு, கடவுளின் பெரிய திட்டத்தை வெளிப்படுத்துகிறார் தூதர். ‘தாவீதின் மகன்’ என்னும் சொல்லாடல் இயேசுவைக் குறிப்பதற்காக நற்செய்தியின் தொடக்கத்தில் (மத் 1:1) பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘தாவீதின் மகனாகிய இயேசு’ என்னும் மெசியாவின் தந்தையாகிய யோசேப்பும் இப்போது ‘தாவீதின் மகனே’ என அழைக்கப்படுகிறார்.
மோசேயின் சட்டத்தை அறிந்திருந்த யோசேப்பு, ஆண்டவராகிய கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதியையும் அறிந்தவராக இருக்கிறார். இந்த வாக்குறுதியையே இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். தெற்கு நாடான யூதாவும் பாபிலோனியப் படையெடுப்பால் அழிந்துவிட்ட நிலையில், ஆண்டவராகிய கடவுள் தம் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார் என ஒவ்வொரு இஸ்ரயேலரும் எதிர்நோக்கியிருந்த நிலையில், யோசேப்பும் இதே எதிர்நோக்கைக் கொண்டிருந்தார். இவருடைய எதிர்நோக்கு இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிக்கும் ஆபிரகாமின் எதிர்நோக்கு போல இருந்தது – ‘நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினாலும், அவர் எதிர்நோக்கினார். தயங்காமல் நம்பினார். ஆகவே, அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்’. இயேசு வழியாக யோசேப்பு பல மக்களினங்களுக்குத் தந்தையாகிறார்.
ஆக, ஆபிரகாம், யாக்கோபு, பழைய ஏற்பாட்டு யோசேப்பு, மோசே, தாவீது என அனைவரும் குவிகிற ஒற்றைப் புள்ளியாக இருக்கிறார் மரியாளின் கணவர் யோசேப்பு.
இன்றைய பெருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) முதலில், நம் வேர் எது, நம் கிளை எது என்பதை இன்று கண்டறிவோம். ஒவ்வொரு நொடியும் நாம் ஒரு பாலம் போல இரண்டு விடயங்களுக்கு நடுவே நிற்கிறோம். கடவுளுடைய திருவுளத்துக்கும் தன்னுடைய எண்ணத்திற்கும் இடையே நிற்கிற யோசேப்பு கடவுளுடைய திருவுளத்தைத் தெரிந்துகொள்கிறார். ஒவ்வொரு பொழுதும் நாம் ஏதோ இரு துருவங்களுக்கு இடையேதாம் நின்றுகொண்டிருக்கிறோம். இவற்றைப் பற்றிய தன்னறிவு இன்றியமையாதது.
(ஆ) இரண்டாவதாக, நம்முடைய நேர்மையாளர்நிலை என்பது இறைவனுக்கும் நமக்குமான உறவை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இறைவனை மையமாகக் கொண்ட நேர்மை, நம் நன்மைத்தனத்தை அல்ல, மாறாக, கடவுளின் இரக்கத்தை முதன்மைப்படுத்தும். கடவுளின் இரக்கத்தைப் பெறுகிற நாம் அதை ஒருவர் மற்றவருக்கு, குறிப்பாக, கையறுநிலையில் இருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். யோசேப்பின் பார்வையில் கன்னி மரியா மோசேயின் திருச்சட்டத்தைப் பொருத்தவரை கையறுநிலையில் இருந்தார்.
(இ) மூன்றாவதாக, நாம் சிந்திக்கும் எண்ணங்கள் ஒரு பக்கம் இருக்க, கடவுள் நமக்கென வைத்திருக்கும் பாதை மிகவும் பெரியதாகவும், அழகாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்கிறது. தூக்கத்திலிருந்து விழித்தெழுகிற யோசேப்பு தன் திட்டம் விடுத்து, கடவுளின் திருவுளம் ஏற்கிறார். இந்த விழிப்புநிலை நமக்கு அவசியம். மேலும், யோசேப்பின் பதிலிறுப்பு சொல்லால் அல்ல, மாறாக, செயலால் நடந்தேறுகிறது. இதுமுதல் அவர் தொடர்ந்து கடவுளின் திட்டத்தை மட்டும் நிறைவேற்ற வேண்டியிருக்கும். தொடர்ந்து தம் செயலால் பதிலிறுப்பு செய்கிறார் யோசேப்பு. இன்று நாமும் நம் சொற்களால் அல்ல, செயல்களால் பதிலிறுப்பு செய்ய வேண்டும். நம்மைச் சுற்றி சொற்கள் நிறைந்திருக்கின்றன இன்று. சொற்கள் குறைந்து செயல்கள் மேம்படுதல் நலம். ஸ்மைலிகள் குறைத்து ஸ்மைல் செய்வது நலம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: