இன்றைய இறைமொழி
செவ்வாய், 2 ஜூலை 2024
பொதுக்காலம் 13-ஆம் வாரம் – செவ்வாய்
ஆமோஸ் 3:1-8, 4:11-12. மத்தேயு 8:23-27
இவர் எத்தகையவரோ?
இயேசு இயற்கைமீது ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். கடினமான நேரங்களில் கடவுள்மேல் நம்பிக்கை அவசியம். ‘இவர் எத்தகையவரோ?’ என்னும் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் விடையளிக்க வேண்டும்.
நோய், விபத்து, இழப்பு, இறப்பு போன்றவை திடீரென நம் வாழ்வில் புயல்போல நம்மைத் தாக்குகின்றன. இந்நேரங்களில் கடவுளின் உடனிருப்பை நாம் உணரவும், அவருடைய உடனிருப்பை உணர்கிற நாம் அவரைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை செய்யவும் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு காற்றையும் கடலையும் அடக்குகிறார். படகில் இயேசு தங்களோடு இருப்பதை மறக்கிற சீடர்கள் வெளியிலிருந்து அடிக்கிற புயல் கண்டு அச்சம் கொள்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் களைகிற இயேசு தொடர்ந்து அமைதியை ஏற்படுத்துகிறார்.
‘நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?’
நம்பிக்கையின்மைக்கும் நம்பிக்கைக்கும் இடைப்பட்ட நிலையே நம்பிக்கை குன்றிய நிலை. சீடர்கள் இயேசுவுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலையில் நிற்கிறார்கள். அச்சம் விடுத்து இயேசுவைப் பற்றிக்கொள்ளும்போது நம்பிக்கை பிறக்கிறது.
சீடர்களின் நம்பிக்கைக் குறைவுக்குக் காரணங்கள் மூன்று: (அ) அச்சம் – அவர்களுக்குக் கடல் பரிச்சயமாக இருந்தாலும், கடவுள் அருகில் இருந்தாலும் உள்ளத்தில் அச்சம் இருக்கிறது. நம்பிக்கைக்கு மிகப்பெரிய தடை அச்சம். (ஆ) கடல்மேல் கண்கள் – கடவுள்மேல் கண்களைப் பதிப்பதை விடுத்து கடல்மேல் கண்களைப் பதித்தனர். (இ) மறதி – தங்களோடு இருப்பவர் வல்லசெயல்கள் நிகழ்த்துகிற போதகர் என்பதை மறந்துவிட்டார்கள்.
இன்று நாம் எத்தகைய புயலால் சூழப்பட்டிருந்தாலும், நம் கண்களை அதிலிருந்து சற்றே திருப்பி இயேசுவின்மேல் பதிய வைப்போம். அவரைக் காணும் அந்த நொடியில், ‘இவர் எத்தகையவரோ?’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் பொறுப்பற்ற நிலையை ஆமோஸ் வழியாக ஆண்டவராகிய கடவுள் கடிந்துகொள்கிறார். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள். ஆனால், அந்த நிலைக்குரிய வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை.
நிற்க.
நம்பிக்கை வாழ்வு என்பது ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய முயற்சி (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 138).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: