இன்றைய இறைமொழி
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20-ஆம் வாரம் – செவ்வாய்
எசேக்கியேல் 29:1-10. மத்தேயு 19:23-30
நிராகரிக்கப்படும் ஆஃபர்
பாதி வழி வந்த இளவல் மீதி வழி செல்ல முடியாமல் தன் வழி நடக்க, இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் இடையே உரையாடல் தொடர்கிறது. உரையாடலில் இரண்டு கருத்துருக்கள் இடம் பெறுகின்றன: (அ) செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். (ஆ) இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு
அ. செல்வரும் விண்ணரசும்
‘செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்’ எனச் சொல்கிறார் இயேசு. ‘செல்வர்’ என்றவுடன் நாம் உடனடியாக, செல்வம் படைத்த மற்றவர்களைத்தான் பல நேரங்களில் நினைக்கின்றோம். பெரிய அடுக்குமாடியில் குடியிருந்து, வங்கியில் நிறைய சேமிப்பு வைத்திருந்து, நிறைய நிலபுலங்கள் வைத்திருக்கும் மற்றவர்களை நாம் நம் மனத்திற்குள் சுட்டிக்காட்டி, அவர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்று சொல்லி நாம் அகமகிழ்கிறோம். அது தவறு. இரண்டு புரிதல்கள் அவசியம். ஒன்று, ‘செல்வம்’ என்பது சார்பியல் வார்த்தை. எடுத்துக்காட்டாக, ‘அவன் உயரமானவன்’ என்ற வாக்கியத்தில், ‘அவன் யாரைவிட உயரமானவன்’ என்ற ஒப்பீடு அடங்கியுள்ளது. இந்த ஒப்பீடு இருந்தால்தான் வார்த்தையின் பொருள் கிடைக்கும். அளவு, நிறம், மதிப்பு சார்ந்த சொற்கள் அனைத்தும் சார்பியல் சொற்களே. யாரும் செல்வரும் அல்லர். யாரும் ஏழையரும் அல்லர். அல்லது எல்லாரும் செல்வர். எல்லாரும் ஏழையர். இரண்டு பெரிய வீடுகள் வைத்திருக்கும் ஒருவரை நான் செல்வர் என அழைக்கிறேன் என்றால், நல்ல உடல்நலத்தோடு இருக்கும் ஏழையும் செல்வரே. இரண்டு, செல்வத்தைப் பற்றிய புரிதல் விவிலியத்தில் தெளிவாக இல்லை. செல்வம் மறுக்கும் விவிலியமே, விண்ணரசைப் புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகிறது என்பதை மனத்தில் கொள்ளல் வேண்டும்.
ஆனால், செல்வம் என்பது சீடத்துவத்துக்கான பெரிய தடை என்பதில் விவிலியம் தெளிவாக இருக்கிறது. அந்த ஒரு பின்புலத்தில்தான் இந்தப் பாடத்தைப் புரிந்துகொள்தல் வேண்டும். செல்வம் ஏன் தடையாக இருக்கிறது? செல்வம் ஒருவருக்குத் தன்னிறைவைக் கொடுக்கிறது. செல்வம் இருந்தால் கோவில் கதவுகள் தானாகவே திறக்கும். எடுத்துக்காட்டாக, திருப்பதி கோவிவில், நேர்மையான செல்வம் ஈட்டிய ஒருவர் தன் காணிக்கையை பெருமாளுக்குக் கொடுக்க நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதி, இலஞ்சப் பணத்தில் காணிக்கை கொடுக்க, அதே இலஞ்சப் பணத்தைப் பயன்படுத்தி, விஐபி நுழைவுச்சீட்டு பெற்று, ஓரிரு நிமிடங்களில் கடவுளின் அருளைப் பெற முடியும். இதே நிலை நம் ஆலயங்களிலும் சில நேரங்களில் நீடிக்கிறது. பங்கு ஆலயத்திற்கு அள்ளிக் கொடுக்கும் ஒருவர் அலுவலகம் வந்தால் அவருக்கு உடனடியாக வேலை நிறைவேறுகிறது. காத்திருக்கும் மற்றவர்கள் காத்துக்கொண்டே இருக்க வேண்டும். செல்வத்தால் இப்படி நிறைய பலன்கள் இருப்பதால்தான் சபை உரையாளரும், ‘பணம் இருந்தால்தான் எல்லாம் கிடைக்கும்’ (காண். சஉ 10:19) என்கிறார். தன்னிறைவு பெற்ற ஒருவர் கடவுளைத் தான் உடைமையாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறார்.
உடல்நலம், பொருள், அறிவு என்னும் எல்லாச் செல்வங்களும் தன்னிறைவுக்கே இட்டுச் செல்லும். இத்தன்னிறைவை இறைவனிடமிருந்து நம்மைத் திருப்பிவிடும். இதே எச்சரிக்கையை இன்றைய முதல் வாசகமும் விடுக்கிறது.
ஆ. கைம்மாறு
செல்வங்களைத் துறக்கச் சொல்லும் இயேசு, தன்னைப் பின்பற்றுபவர்கள் நூறு மடங்கு நிலபுலன்கள் பெறுவர் எனச் சொல்கிறார். அதாவது, நான் ஓர் ஏக்கர் நிலம் துறந்தால் எனக்கு நூறு ஏக்கர் கிடைக்கும். செல்வத்தைத் துறக்கும் ஒருவருக்கு செல்வமே மீண்டும் வாக்களிக்கப்படுவது புதிராக இருக்கிறது. ‘எல்லாவற்றையும் விட்டு விட்டு நாங்கள் உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!’ என்று பேதுரு இயேசுவிடம் கேட்கின்றார். இயேசுவும், ‘நீங்கள் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்பீர்கள்’ என்றும், ‘இழந்தவை அனைத்தும் நூறு மடங்கு கிடைக்கும்’ எனவும் கூறுகின்றார். இயேசுவின் ஆஃபர் இன்றுவரை நிராகரிக்கப்படுகிறது. இயேசுவின் ஆஃபர் அப்படி ஒன்றும் இன்று யாரையும் ஈர்க்கவில்லை. ஏனெனில், இயேசுவின் ஆஃபர் மறுவுலகம் சார்ந்தது. செல்வர்கள் மறுவுலகை நம்புவதில்லை. இவ்வுலகிலேயே விண்ணகத்தை அனுபவிக்கும் ஒருவருக்கு மறுவுலகில் விண்ணகம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? செல்வர்கள் உடனடி ஆஃபரையே விரும்புகின்றனர்.
ஆக, இரண்டு கருத்துருக்களிலும் செல்வம், சீடத்துவத்துக்கான தடை என்பது முன்வைக்கப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (எசே 28:1-10) இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவராகிய கடவுள் தீர் நகரின் மன்னனைச் சாடுகின்றார். ‘உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது’ எனக் கடிந்துகொள்கின்றார். செல்வம் ஒருவரைத் தன்னிறைவுக்கு இட்டுச்சென்று, இறைசார்ந்த நிலையிலிருந்து தள்ளி வைப்பதால் அது ஆபத்தாகிறது.
நிற்க.
என் இதயம் எங்கே இருக்கிறதோ அதுவே என் செல்வம். இறைவன் மேல் இருந்தால் அது விண்ணகம். மற்றதன் மேல் இருந்தால் அதை நான் இழக்க வேண்டும். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 177).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: