இன்றைய இறைமொழி
செவ்வாய், 21 மே 2024
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – செவ்வாய்
யாக்கோபு 4:1-10. மாற்கு 9:30-37
மூன்று வழிகள்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் சீடர்களிடம் இரண்டாம் முறையாக தம் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை முன்னறிவிக்கிறார். ஆனால், அவர்களோ அதைப் புரிந்துகொள்ளவில்லை, அவரிடம் விளக்கம் கேட்கவும் அஞ்சினார்கள்.
தங்களுக்குள் யார் பெரியவர் என்று வழியில் விவாதித்துக்கொண்டு வருகிறார்கள் சீடர்கள். சிறியவராக இருப்பவர் பெரியவர் என அறிவுறுத்துகிற இயேசு, சிறு பிள்ளையை அவர்கள் நடுவே நிறுத்தி, அக்குழந்தையை ஏற்றுக்கொள்பவர் தம்மை ஏற்றுக்கொள்பவராக முன்மொழிகிறார்.
மூன்று வழிகள் இங்கே முன்மொழியப்படுகின்றன:
(அ) கல்வாரி வழி – இந்த வழி பற்றி இயேசு தம் சீடர்களிடம் முன்னுரைக்கிறார். ஆனால், சீடர்களுக்கு இது புரியவில்லை.
(ஆ) கலிலேயா வழி – இந்த வழியில் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என விவாதம் செய்கிறார்கள்.
(இ) சிறிய வழி – குழந்தையின் உருவத்தில் ஆளுமையில் இறைமகனையும் இறைவனையும் காணுதல்.
கல்வாரி வழி தொடக்கத்தில் துன்பம் நிறைந்ததாக இருந்தாலும், இறுதியில் வெற்றியைச் சென்றடைகிறது. கலிலேயா வழியில் தன்முனைப்பும் ஒப்பீடும் சண்டை சச்சரவும் நிறைந்திருக்கின்றன. கலிலேயா வழியிலிருந்து நாம் கடந்து சென்று கல்வாரி வழியை அடைய வேண்டும் என்பதே இயேசுவின் நோக்கம். இதற்கான வழியே சிறிய வழி.
சிறியவற்றில் பெரியவற்றைக் காணக் கற்றுக்கொள்தல் முதல் பாடம்.
‘ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்’ என்கிறார் இயேசு.
தலைவராதல் அல்லது பெரியவராதல் என்பது தொண்டர் ஆவதில், சிறியவர் ஆவதில் இருக்கிறது என்கிறார் இயேசு. தலைமைத்துவம் என்பது தன்னை மறுத்தலில், அனைவருக்கும் பணி செய்வதில் அடங்கியிருக்கிறது என்பது இயேசுவின் பாடம். ஆனால், நம் அன்றாட வாழ்வில், பணிச்சூழலில் தன்னையே முன்நிறுத்துபவரும், அனைவரையும் அடக்கி ஆள்பவரும், அனைவரையும்விட சப்தமாகப் பேசுகிறவருமே தலைமைத்துவம் ஏற்கிறார் என்பதே எதார்த்தம். தம்மையை சிறியவர், கடையர், தொண்டர் ஆக்கிக்கொள்பவர் அவ்வாறே மறைந்து போகிறார்.
ஆகவே, தொண்டர் தலைவராக மாறுவார் என்பது எதிர்நோக்காக இருக்கிறதே தவிர, உத்திரவாதமாக இல்லை.
கடவுள் முன்னிலையில் நம்மையே தாழ்த்திக்கொள்தல் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு தன் குழுமத்துக்கு அறிவுறுத்துகிறார். ‘ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள், அவர் உங்களைத் உயர்த்துவார்!’ என்கிறார் யாக்கோபு.
ஆண்டவர்முன் நம்மையே தாழ்த்திக்கொள்வோம். அதுவே கல்வாரி வழி.
கலிலேயா வழியில் நாம் ஒருவர் மற்றவரோடு ஒப்பீடு செய்துகொண்டாலும், சிறிய வழியை மறந்துவிட வேண்டாம்.
நிற்க.
இன்று நாம் எதிர்கொள்கிற, கேள்விப்படுகிற போர், வன்முறை ஆகிய அனைத்துமே, ‘யார் பெரியவர்?’ என்று வழியில் நாம் விவாதித்துக்கொண்டிருக்கிற வாதமே தவிர வேறெதுவும் இல்லை. யாரும் தம்மைக் கடைசியாக ஆக்கிக்கொள்வதற்கு இன்று தயாராக இல்லை. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 103).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: