ன்றைய இறைமொழி
செவ்வாய், 23 ஜூலை 2024
பொதுக்காலம் 16-ஆம் வாரம், செவ்வாய்
மீக்கா 7:14-15, 18-20. மத்தேயு 12:46-50
உள்ளே வெளியே!
அவருடன் பேசுவதற்காக வந்த அவருடைய தாய் மற்றும் சகோதரர்களைப் பேச விடாமல், இயேசுவே பேசி விடுகின்றார்.
மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த இயேசுவின் தாய் மற்றும் சகோதரர்களைக் கவனிக்கின்ற ஒருவர் அதுபற்றி இயேசுவிடம் சொல்கின்றார் (நற்செய்தி வாசகம்). இயேசு அவருக்குப் பதிலளிப்பதாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.
இயேசு தன் பதிலை அவரை நோக்கி ஏன் கொடுக்க வேண்டும்?
நான் இந்நிகழ்வை இப்படிப் புரிந்துகொள்கின்றேன்:
இயேசுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நபர் இயேசுவுடன் இறையாட்சி உறவில் இருக்கின்றார். ஆனால், இயேசுவின் தாய் மற்றும் சகோதரர்களைக் கண்டவுடன் தன்னை அறியாமலேயே ஏதோ ஒரு வகையில் அந்நியப்படுத்தப்பட்டதாகவும் தாழ்ந்தவராகவும் உணர்ந்திருப்பார். அதாவது, தான் இயேசுவுடன் இறையாட்சி உறவில் இருந்தாலும், அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாலும், இன்னும் நெருக்கமான இரத்த உறவு இயேசுவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இருக்கிறது என்று உணர்ந்த அந்த நொடி தன் நிலை தாழ்ந்தது என உணர்கின்றார்.
ஆனால், இயேசு, இறைத் திருவுளம் நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதரர்களும் என்று சொல்வதன் வழியாக, ஒரு பக்கம் மரியா இறைத் திருவுளம் நிறைவேற்றியதை – இரத்த உறவையும் தாண்டிய ஒன்றை – மக்களுக்கு உணர்த்துகின்றார். இன்னொரு பக்கம், இரத்த உறவை விட இறையாட்சி உறவு மேலானது என உணர்த்துகின்றார்.
இரத்த உறவு பல நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது. நம் சாதிய மற்றும் குழும அடையாளங்கள் இரத்த மற்றும் திருமண உறவுகள் வழியாகவே உறுதி செய்யப்படுகின்றன. இறையாட்சி உறவு நம்மை மற்றவர்களோடு இணைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் மூன்று:
(அ) உள்ளே-வெளியே என்னும் திசையை மாற்றிப்போடுகிறார் இயேசு. இறையாட்சி உறவில் இணைந்திருந்த அவரை இரத்த உறவை நோக்கி வெளியே ஒருவர் இழுத்தபோது, வெளியே நிற்கிற குடும்பத்தாரை தனக்கு உள்ளே இழுக்கிறார் இயேசு. இல்லத்திற்கு உள்ளே செல்பவர் மட்டுமே இயேசுவுடன் இறையாட்சி உறவில் இணைய முடியும்.
(ஆ) இறையாட்சி உறவு இரத்தம், திருமணம், நட்பு, அறிமுகம் சார்ந்தது அல்ல. மாறாக, இறைத்திருவுளம் நிறைவேற்றுதல் சார்ந்தது. நான் ஒருவர் மற்றவருடன் சமநிலையில் இணைந்திருக்க வேண்டுமெனில், கடவுளுடன் நேர்நிலையில் இணைந்திருக்க வேண்டும்.
(இ) நாம் ஒருவரைச் சந்திக்கும்போது அவரையும் நம்மையும் பிரிப்பது எது எனப் பார்க்காமல் – அதாவது, பாலினம், நிறம், பின்புலம், சமயம், சாதி, சமூகநிலை, பொருளாதாரம் – அவரையும் என்னையும் இணைப்பது எது எனப் பார்க்க வேண்டும். ஏனெனில், இறைச்சாயலைத் தாங்கிய நிலையில் நாம் அனைவரும் உடன்பிறந்தவர்களே. நாம் அனைவரும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தவர்களே!
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் மீக்கா, ஆண்டவராகிய கடவுள் மக்களின் பாவங்களை ஆழ்கடலில் தூக்கி எறிந்துவிட்டதாக மொழிகின்றார். ஆண்டவரின் இரக்கப் பெருக்கத்தை இஸ்ரயேல் மக்கள் உணர்ந்தனர். ஆண்டவருக்கும் அவர்களுக்கும் இருந்தது இரத்த உறவோ, திருமண உறவோ அல்ல. மாறாக, இறையாட்சி உறவே. இந்த உறவின் வழியாகவே அவர்கள் ஆண்டவருடைய பேரன்பையும் இரக்கத்தையும் உணர்கிறார்கள்.
நிற்க.
இரத்த உறவையும் திருமண உறவையும் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் இயேசுவின் குழுமத்துக்கு வெளியேதான் நிற்க வேண்டும். அல்லது வெளியே நிற்கும் வரை நாம் இரத்த மற்றும் திருமண உறவுகளையே பிடித்துக்கொண்டிருக்கின்றோம். உள்ளே நுழையும்போது இயேசுவுடன் இறையாட்சி உறவுக்குள் நுழைகின்றோம். அங்கே கூட்டியக்கத்தின் ஒன்றிப்பையும் தோழமையையும் கொண்டாடுகிறோம். எதிர்நோக்கின் திருப்பயணி தோழமையை விரும்புபவராக இருக்கிறார்! (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 154).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: