இன்றைய இறைமொழி
செவ்வாய், 24 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 25-ஆம் வாரம், செவ்வாய்
நீதிமொழிகள் 21:1-6, 10-13. லூக்கா 8:19-21
கடவுளின் குடும்பத்தார்
கடவுளின் குடும்பத்தார் பெற்றிருக்க வேண்டிய பண்புகளையும் கூறுகளையும் முன்மொழிகின்றன இன்றைய வாசகங்கள். வெளிப்புற அடையாளங்களும் செயல்பாடுகளும் அல்ல, மாறாக, கடவுளின் திருவுளத்திற்கு இயைந்த மனப்பாங்கே நம்மைக் கடவுளின் குடும்ப உறுப்பினர் நிலைக்கு உயர்த்துகிறது.
(அ) கடவுளுடைய திருவுளத்துக்கு உகந்த வாழ்க்கை
‘மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது. வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்’ எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். அதாவது, ஒருவர் பெரிய நாட்டுக்கே அரசராக இருந்தாலும் அவர் தன் விருப்பத்தோடு செயலாற்ற இயலாது. கடவுளின் விருப்பமே இறுதியில் நிறைவேறுகிறது. மேலும், ‘பலி செலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்’ என்கிறார் ஆசிரியர். கடவுளின் குடும்பத்தார் நேர்மையான வாழ்வை நாடித் தேடுகிறார்கள். பொய்மையை விலக்குகிறார்கள். கடவுளின் கட்டளைகளுக்குப் பயந்து வாழ்வதே மேலானது என்பதை உணர்கிறார்கள்.
(ஆ) இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடத்தல்
நற்செய்தி வாசகத்தில், தம்மைத் தேடி வந்த தாய் மற்றும் சகோதரர்களின் முன்னிலையில், தம் குடும்பப் பிணைப்பு பற்றிய புதிய புரிதலை வழங்குகிறார் இயேசு: ‘இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்.’ ஆக, இரத்தம் அல்லது திருமணப் பிணைப்பு அல்ல, மாறாக, இறைவார்;த்தைப் பிணைப்பே கடவுளுடை குடும்ப உறுப்பினரின் அடிப்படையான கூறாக இருக்கிறது. இறைவார்த்தையைக் கேட்பது முதலிலும், அதற்கேற்ற பதிலிறுப்பு இரண்டாவதாகவும் நடந்தேற வேண்டும். மேலும், வெறும் நம்பிக்கை அடிப்பைடயில் அல்ல, மாறாக, செயல்களின் அடிப்படையில்தான் நாம் கடவுளின் குடும்ப உறுப்பினர்நிலையைத் தக்கவைத்துக்கொள்கிறோம்.
(இ) வலுவற்றவர்கள்மேல் இரக்கம் கொள்தல்
தேவையிலிருப்பவர்கள்மேலும் வலுவற்றவர்கள்மேலும் நாம் காட்ட வேண்டிய இரக்கத்தைப் பற்றியும் பேசுகிறது முதல் வாசகம். கடவுளின் குடும்பத்தார் என்னும் நிலையில் இருக்கும் நாம், குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தேவையிலிருக்கும்போது அவற்றை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும். நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை இரக்கச் செயல்களாக வெளிப்பட வேண்டும்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளின் திருவுளத்துக்கு இயைந்த வாழ்வு வாழ்கிறார்கள், அவருடைய சொல்லுக்குச் செவிமடுக்கிறார்கள், வறியவர்கள்மேல் இரக்கம் காட்டுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 207)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: