• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 27 ஆகஸ்ட் ’24. தவறான குவியம்

Tuesday, August 27, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 21-ஆம் வாரம் – செவ்வாய்
2 தெசலோனிக்கர் 2:1-3, 14-17. மத்தேயு 23:23-26

 

தவறான குவியம்

 

மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் இயேசு சாடுகிற பகுதி இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. அவர்களுடைய வெளிவேடத்தைக் கடிந்துகொள்கிற இயேசு, அவர்களுயை குவியம் தவறானது (misplaced focus) என்பதைச் சுட்டிக்காட்டி, முதன்மையானவற்றின்மேல் கவனத்தையும் இதயத்தையும் குவிக்க அவர்களை அழைக்கிறார். இந்தப் பாடத்தின் பின்புலத்தில் நம் ஆன்மிக செயல்பாடுகளையும் முதன்மைகளையும் எண்ணிப் பார்ப்போம்.

 

இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்கள் பத்தில் ஒரு பாகத்தைக் கடவுளுக்குக் கொடுப்பது பற்றி மிகவும் கவனமாக இருந்தார்கள். சிறிய மூலிகைகள், தாவரங்களில்கூட கணக்குப் பார்த்துக் கொடுத்தனர். ஆனால், நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றை மறந்துவிட்டார்கள். குறிப்பாக, பிறரன்புக் கட்டளையையும் மற்றவர்கள்மேல் கொண்டிருக்க வேண்டிய அக்கறையையும் அறவே மறந்தனர்.

 

சமயம்சார் கடமைகளில் அவர்கள் கவனமாக இருந்தாலும் அவர்களுடைய கவனக் குவியம் தவறாக இருந்தது. சின்னஞ்சிறியவற்றில் அவர்கள் காட்டிய அக்கறையை பெரிய விடயங்களில் காட்டவில்லை. கொசுவை வடிகட்டி அவர்கள் ஒட்டகத்தை விழுங்குகிறார்கள் என்னும் சொல்லோவியத்தைப் பயன்படுத்துகிறார் இயேசு. சிறியவற்றில் கவனமாக இருந்துவிட்டு பெரியவற்றை விட்டுவிட்டனர்.

 

கடவுளின் முன்னிலையில் நேர்மையாகக் காட்டிக்கொள்ளும் நம் ஆர்வத்தில் சில நேரங்களில் நாம் நம்முடைய சமூகக் கடமைகளை மறந்துவிடுகிறோம். சமய நம்பிக்கை என்பது வெளிப்படையான செயல்பாடுகளையும்விட ஆழமானது எனக் காட்டுகிறார் இயேசு. நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைத் தழுவிக்கொள்வதே உண்மையான ஆன்மிகமும் சீடத்துவமும் ஆகும் என்பது இயேசுவின் பாடம்.

 

நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியில், உள்ளார்ந்த தூய்மை பற்றிப் பேசுகிறார் இயேசு. பாத்திரங்களின் வெளிப்புறத்தைக் கழுவிவிட்டு உள்புறத்தைக் கழுவாமல் அவர்கள் வைத்திருப்பதாக உருவகப்படுத்துகிறார். வெளிப்புறத்தில் நேர்மையாளர்களாகவும் அகத்தில் தூய்மையற்றவர்களாகவும் இருந்தார்கள் அவர்கள்.

 

நம் ஆன்மிக வாழ்க்கை இதயத்தில் தொடங்க வேண்டும். கடவுளின் திருவுளத்தோடு நம் இதயங்கள் இணைந்திருக்கும்போது செயல்பாடுகள் எளிதில் நகரத் தொடங்கும்.

 

நற்செய்தி வாசகத்தின் பின்புலத்தில் நம்மையே ஆய்ந்து பார்ப்போம்: மற்றவர்கள் முன்னும் கடவுள் முன்னும் ஏற்புடையவர்களாக மாற வேண்டும் என்னும் நம் ஆர்வத்தில் நம் குவியத்தைத் தவறானவற்றின்மேல் பதிக்கிறோமா? எளிதானவற்றைச் செய்துவிட்டு, சரியானவற்றைச் செய்வதை விட்டுவிடுகிறோமா? நம் உள்புறம் தூய்யைமாக இருப்பதையே கடவுள் விரும்புகிறார்.

 

இன்றைய முதல் வாசகத்தில், நம்பிக்கையில் வேரூன்றி, எதிர்நோக்கைத் தழுவிக்கொள்ளுமாறு தெசலோனிக்கத் திருஅவையை அழைக்கிறார் பவுல்.

 

நிற்க.

 

எதிர்நோக்கின் திருப்பயணிகள் உள்ளிருந்து வெளிநோக்கிய மாற்றத்தை விரும்புகிறார்கள், முன்னெடுக்கிறார்கள், செயல்படுத்துகிறார்கள். அவர்களுடைய வாழ்வு அன்பாலும் இரக்கத்தாலும் நிரம்பியிருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 183).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: