இன்றைய இறைமொழி
செவ்வாய், 3 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 22-ஆம் வாரம், செவ்வாய்
திருத்தந்தை புனித பெரிய கிரகோரி, நினைவு
1 கொரிந்தியர் 2:10-16. லூக்கா 4:31-37
கடவுள் நம்மை அறிபவர்
கடவுள் நம்மை அறிகிறார் – நம் இதயங்களை, எண்ணங்களை, தேவைகளை – என மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. கடவுளின் இந்த அறிவு அன்பு நிறைந்ததாக இருக்கிறது. அவருடைய அறிவால் வழிநடத்தப்படும்போது நாம் நிறைவாழ்வு நோக்கி நகர்கிறோம். நம்மைப் பற்றிய அவருடைய அறிவு நமக்கு விடுதலை அளிக்கிறது.
(அ) தூய ஆவியார் அனைத்தையும் அறிகிறார்
‘தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்’ என மொழிகிற பவுல், கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் மனித உள்ளங்களின் கிடக்கைகளையும் அவர் அறிகிறார் என எழுதுகிறார். கடவுளின் அறிதல் அல்லது அறிவு மேலோட்டமானது அல்ல, மாறாக, ஆழமானது. நம் போராட்டங்கள், அச்சங்கள், எதிர்நோக்குகள், கனவுகள் என அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார் கடவுள்.
கடவுளின் அறிதல் நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. கடவுளிடமிருந்தும் அவருடைய அன்பிலிருந்தும் நாம் நம்மையே மறைத்துக்கொள்ள இயலாது. தம் ஞானத்தால் அவர் நம்மை வழிநடத்துகிறார். நம் இறைவேண்டலிலும் தேர்ந்து தெளிதலிலும் கடவுளின் ஞானத்திற்கு உள்ளம் திறப்பது நலம். கடவுள் என்றும் நம் நலத்தை மட்டுமே விரும்புகிறார்.
(ஆ) இயேசுவின் அதிகாரமும் செயல்பாடும்
தொழுகைக்கூடத்தில் அமர்ந்திருந்த பேய் பிடித்தவருக்கு நலம் தருகிறார் இயேசு. தீய ஆவிகள்மேல் அவர் கொண்டிருந்த அதிகாரம் கண்டு மக்கள் வியப்படைகிறார்கள். இயேசுவின் சொற்கள் கொண்டிருக்கிற ஆற்றல் அவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது. தாம் அதிகாரம் கொண்டிருந்ததோடல்லாமல், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நோயுற்றவருக்கு நலம் தருகிறார் இயேசு. இறையறிவிலும், மானுட நலத்திலும் வேரூன்றி இருக்கிறது இயேசுவின் அதிகாரம். நம்மை ஆட்டுவிப்பது எது என்பதை அறிந்து அதிலிருந்து நம்மை விடுவிக்கிறார் இயேசு.
ஆண்டவராகிய இயேசு நம் வாழ்வில் செயல்படும் நேரங்களையும் சூழல்களையும் நாம் அறிந்துகொள்ள இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு விடுகிறது. நம் போராட்டங்களை அறிகிற இயேசு, நாம் அவற்றிலிருந்து விடுபட வேண்டும் என விரும்புகிறார். தொழுகைக்கூடத்தில் கூடியிருந்தவர்கள் கொண்டிருந்தது போல நாமும் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
(இ) கடவுளுடைய அறிவின் ஒளியில் வாழ்தல்
கடவுளைப் பற்றிய அறிதல் நமக்கு அச்சத்தை அல்ல, மாறாக, ஆறுதலையே தருகிறது. கடவுளுடைய வழிகாட்டுதலை நாம் அனைத்திலும் தேடுவதற்கு உதவுகிறது. நாம் நம்மைப் பற்றி அறிந்திருப்பதை விட கடவுள் நம்மை அறிந்திருக்கிறார். கடவுளின் திட்டத்திற்கு நாம் சரணாகதி அடையும்போது நன்மைத்தனத்தின் நிறைவை நோக்கி அவர் நம்மை அழைத்துச் செல்கிறார்.
திருத்தந்தை புனித பெரிய கிரகோரி நினைவு
இன்று நாம் திருத்தந்தை புனித பெரிய கிரகோரி அவர்களை நினைவுகூர்கிறோம். திருஅவையின் மறைவல்லுநர் எனக் கருதப்படுகிற இவர் வழிபாட்டிலும், மேய்ப்புப் பணியிலும், விவிலியல் பொருள்கோலியலிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தவர். திருஅவையின் நெருக்கடி காலத்தில் அதை வழிநடத்திய இவர் வலுவற்றவர்கள்மேல் அக்கறை கொண்டிருந்தவர். இறைஞானத்தின் துணைகொண்டு வழிநடந்தவர்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தூய ஆவியாரின் வழிகாட்டுதலுக்கு திறந்த மனம் கொண்டவர்களாக, இறைஅறிவால் வழிநடத்தப்படுமாறு தங்களையே இறைத்திட்டத்திற்குக் கையளிக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 189).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: