இன்றைய இறைமொழி
செவ்வாய், 30 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 5-ஆம் வாரம் – செவ்வாய்
திப 14:19-28. யோவா 14:27-31
அமைதியை உங்களுக்கு!
ஒவ்வொரு முறை நாம் கொண்டாடும் திருப்பலியிலும் நற்கருணையை உட்கொள்வதற்கு முன் நாம் செபிக்கும் இறைவேண்டல் அமைதி. ‘அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்’ என்று இயேசு மொழிந்த சொற்களையே மேற்கோள்காட்டி அருள்பணியாளர் இறைவேண்டல் செய்கிறார்.
இயேசுவை அமைதியின் அரசர் என நாம் அழைத்து மகிழ்கிறோம். ஆனால், நற்செய்தி நூல்களில் நாம் வாசிக்கும்போதெல்லாம் அமைதியை இழந்த ஒரு நபராகவே இயேசு இருக்கிறார். அவருடைய பிறப்பில் அவருக்கு அமைதி இல்லை – விடுதியில் இடம் கிடைக்கவில்லை, ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகிறார், எகிப்துக்கும் நாசரேத்துக்குமான ஓட்டம். பணிவாழ்விலும் அமைதி இல்லை – சீடர்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை, தவறாகப் புரிந்துகொண்டார்கள், வெறும் உணவுக்காக மட்டுமே மக்கள் அவரைத் தேடினார்கள், அவருடைய எதிரிகள் அவருக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இறப்பிலும் அமைதி இல்லை – அவருடைய சீடர்கள் அவரைக் காட்டிக்கொடுக்கிறார்கள், மறுதலிக்கிறார்கள், விட்டுவிட்டு ஓடுகிறார்கள், மக்கள் அவருக்கு எதிராகத் திரும்புகிறார்கள், மக்களின் தலைவர்கள் அவரை ஒழித்துவிட விரும்புகிறார்.
நம் பார்வையில் அவர் அமைதி இல்லாதவர்போலத் தெரிந்தாலும், அவர் தம் உள்ளத்தின் அமைதியை எப்போதும் கொண்டிருந்தார்.
இந்த அமைதியையே அவர் நமக்கு அளிக்கிறார். தாம் கொடுக்கிற அமைதியை வரையறுக்கிற இயேசு, அது ‘உலகம் தருகிற அமைதி போன்றது அல்ல’ என்கிறார். உலகம் அமைதியைத் தருகிறது என்பதையும் இயேசு மறுக்கவில்லை. ஆனால், அந்த அமைதியில் இரண்டு குறைகள் உள்ளன. அதையே இயேசு, ‘உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்’ எனத் தொடர்கிறார். இந்த உலகம் தருகிற அமைதியில் கலக்கமும் அச்சமும் கலந்து இருக்கின்றன. அமைதியை உணரும்போதும் மனத்தில் ஓடும் எண்ண ஓட்டம் நமக்கு கலக்கம் தருகிறது, இந்த அமைதி போய்விடுமோ என்னும் அச்சம் அதில் ஒட்டிக்கொண்டே இருக்கிறது.
கலக்கமும் அச்சமும் இல்லாத அமைதியை இயேசு நமக்குக் கொடுப்பதாக முன்மொழிகிறார்.
இயேசு தருகிற அமைதியை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது?
(1) கடவுளோடு உறவு கொண்டாடுவது – அவருக்காக ஒரு நாளில் 10 நிமிடங்களையாவது வழங்குவது.
(2) அவருடைய திருவுளம் அறிந்து செயல்படுவது.
(3) நிறைய மன்னிப்பது.
(4) நன்றி மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது.
(5) ஒவ்வொரு பொழுதையும் தன்னறிவுடன் வாழ்வது.
(6) நம் வரையறைகளைத் தெளிவாக அறிந்துகொள்வது.
(7) நம்மேல் இரக்கம் கொள்வது.
நமக்குக் கலக்கமும் அச்சமும் தருபவை பற்றிக் கவனமாக இருந்து அவற்றைக் களைய முயற்சி செய்ய வேண்டும். வாழ்வின் உறுதியற்ற தன்மையைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர்கள் பவுலும் பர்னபாவும் எதிர்கொள்கிற போராட்டத்தைப் பார்க்கிறோம். ‘கடவுளர்களே மனிதர்கள் உருவில் வந்துள்ளார்கள்’ என்று பவுலையும் பர்னபாவையும் கொண்டாடுகிற லீஸ்திரா மக்கள், சில நிமிடங்களில் அவர்கள்மேல் கற்களை எறிந்து நகருக்கு வெளியே தள்ளுகிறார்கள். திருத்தூதர்கள் இறந்துவிட்டதாகக் கருதி அவர்கள் திரும்பியவுடன், திருத்தூதர்கள் புறப்பட்டு வேறு ஊர் செல்கிறார்கள். அவர்களுடைய இந்த எதிர்மறை அனுபவம் அவர்கள்மேல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரு நிகழ்வும் நபரும் நம்மைப் பாதிக்குமாறு நாம் அனுமதிக்காதவரை அவர் நம்மைப் பாதிப்பதே இல்லை. மனப்பாங்கில் மாற்றம் வரும்போது நிகழ்வுகளையும் நபர்களையும் நம் கட்டுக்குள் கொண்டுவர இயலும்.
மனப்பாங்கு மாற்றம் இருந்தால் நம் கலக்கத்தையும் அச்சத்தையும் விரட்டிவிடலாம். இறைவன் தருகிற அமைதியை உணரத் தொடங்கலாம்.
நிற்க.
‘நம் கண்கள் பார்க்காதவற்றை அறிய நமக்கு உதவுவது நம்பிக்கை. நம் கைகளுக்கு அருகில் இல்லாதவற்றைத் தழுவிக்கொள்ள உதவுவது எதிர்நோக்கு,’ என்கிறார் அக்வினா நகர் புனித தோமா. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 85)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம், இரக்கத்தின் தூதுவர்
Share: