இன்றைய இறைமொழி
செவ்வாய், 30 ஜூலை 2024
பொதுக்காலம் 17-ஆம் வாரம் – செவ்வாய்
எரேமியா 14:17-22. மத்தேயு 13:36-43
நாமே விதைகள்
‘வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்!’ என்று இயேசுவிடம் கேட்கிறார்கள் சீடர்கள். அவர்களுக்கு விடை அளிக்கிற இயேசுவின் கூற்றில் வரக்கூடிய ஒரு சொல்லாடல் நம் சிந்தனையைத் தூண்டுகிறது: ‘வயல் இவ்வுலகம். நல்ல விதைகள் கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்.’
மானிட மகனுக்கும் அலகைக்கும், கடவுளின் மக்களுக்கும் தீயோனைச் சார்ந்தவர்களுக்கும், நல்ல விதைகளுக்கும் களைகளுக்கும் உள்ள முரணை இந்நிகழ்வு முன்னுரைப்பதோடு, நாம் நல்ல விதையா அல்லது களையா என்பதை நாமே தேர்ந்துகொண்டு வாழ நம்மை அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
(அ) இவ்வுலகம் நாம் இயங்குகிற தளம். இந்த நிலத்தில் நாம் விதைக்கப்படுகிறோம். நாம் விதைக்கப்படுகிற இடத்தில் பலன் தர வேண்டும். ஏனெனில், நாம் மானிட மகனுடைய கைகளிலிருந்து வருபவர்கள்.
(ஆ) நல்ல பயிர்களுக்கும் களைகளுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். நாம் எந்த நிலையிலும் களைகளோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும்.
(இ) நாம் கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள் என்பதால் அதற்கேற்ற வாழ்க்கை நிலையை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘நல்ல விதைகள்போல’ கடவுளின் கைகளிலிருந்து வந்த இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய சிலைவழிபாட்டினால் ‘களைகள்போல’ மாறுகிறார்கள். ஆண்டவராகிய கடவுளின் தண்டனை அவர்களை நோக்கி வரும்போது அவரை நோக்கி முறையிட்டு அவருடைய இரக்கத்தை இறைஞ்சுகிறார்கள்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தங்களுடைய வாழ்வு இவ்வுலகையும் தாண்டிய இலக்கைக் கொண்டது என்பார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 160).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: