இன்றைய இறைமொழி
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 18-ஆம் வாரம் – செவ்வாய்
ஆண்டவரின் உருமாற்றம், விழா
தானியேல் 7:9-10, 13-14 அல்லது 2 பேதுரு 1:16-19. மாற்கு 9:2-9.
அவர் தோற்றம் மாறினார்!
இன்று ஆண்டவரின் தோற்றமாற்றம் அல்லது உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 15-ஆம் நூற்றாண்டு வரை உரோமை திருவழிபாட்டில் வௌ;வேறு நாள்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாளை, பெல்க்ரேட் முற்றுகை உடைக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் போரில் அடைந்த வெற்றி இன்றைய நாளில் உரோம் நகரை அடைந்ததால், இன்றைய நாளில் (6 ஆகஸ்ட்) கொண்டாடுமாறு 1456-இல் அறிவிக்கிறார் திருத்தந்தை மூன்றாம் கலிக்ஸ்துஸ். 2002-ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல், ஒளியின் மறைபொருளில் ஒன்றாக ‘ஆண்டவரின் தோற்றமாற்ற நிகழ்வை’ அறிவிக்கிறார். தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு இறைவார்த்தை வழிபாட்டிலும் ஆண்டவரின் தோற்றமாற்ற நிகழ்வை நாம் சிந்திக்கிறோம்.
இந்நிகழ்வு மூன்று கூறுகளை உள்ளடக்கியுள்ளது:
(அ) கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படுத்தப்படுகிறது
உயர்ந்த மலை, ஒளிரும் ஆடைகள், வெளிச்சம், எலியா, மோசே, மேகம், மேகத்தினின்று குரல் போன்ற அனைத்தின் வழியாக கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படுத்தப்படுகிறது. ‘ரபி’ என அவர்கள் நினைப்பவரும் அழைப்பவரும் ஆண்டவர் என்னும் செய்தி மூன்று திருத்தூதர்களுக்குத் தரப்படுகிறது.
(ஆ) மாற்றத்துக்கான அழைப்பு
இயேசுவுக்கு நெருக்கமான மூன்று திருத்தூதர்கள் – பேதுரு, யாக்கோபு, யோவான் – நிகழ்வில் பங்கேற்கிறார்கள். மலையின் மாட்சி கண்டு திருத்தூதர் பேதுரு அங்கேயே தங்கிவிட நினைக்கிறார். ‘இவருக்குச் செவிசாயுங்கள்!’ என்னும் கட்டளை அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
(இ) பயணத்துக்கான திடம்
மலைமேல் ஏறிச் சென்றவர்கள் மலையைவிட்டு கீழே இறங்குகிறார்கள். இரகசியம் காக்குமாறு அறிவுறுத்துகிறார் இயேசு. தோற்றமாற்ற மலையும் (தாபோர்) தோற்றம் சிதைகிற மலையும் (கல்வாரி) இணைத்தே பார்க்கப்படவேண்டும் என்பது இயேசுவின் பார்வை.
தோற்றமாற்றத் திருநாள் நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?
(அ) கிறிஸ்துவின் ஒளி நம்மை ஒளிர்விக்கிறது
கிறிஸ்துவின் ஒளிக்கு அருகில் நிற்கிற திருத்தூதர்கள் தங்களையும் அந்த ஒளியில் காண்கிறார்கள். கடவுள் ஒளிமயமாக இருக்கிறார் எனில், கடவுளின் ஒளி நம்மை ஒளிர்விக்கிறது. நம்மைப் பற்றிய அறிதலைத் தருகிறது.
(ஆ) கிறிஸ்துவுக்குச் செவிகொடுத்தல்
‘செவிகொடுத்தல்’ அல்லது ‘கேட்டல்’ என்பதற்குக் ‘கீழ்ப்படிதல்’ என்னும் பொருள் எபிரேயத்திலும் மற்ற பல மொழிகளிலும் உண்டு. செவிகொடுத்தல் நம் இதயத்தில் தொடங்குகிறது. கிறிஸ்துவை நோக்கி இதயத்தைத் திருப்பும் நாம் அவருக்குச் செவிகொடுக்கத் தொடங்குகிறோம்.
(இ) அமைதி காத்தல்
அமைதி காத்தல் என்பது ஆன்மிகப் பயணத்தில் மிகவும் இன்றியமையாதது. அமைதி காத்தல் புரிந்துகொள்வதற்கான, நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான நேரமாக இருக்கிறது.
நிற்க.
உருமாற்றம் என்பது உளமாற்றம் என்றும், நமக்கு வெளியில் தெரியும் கடவுளின் ஒளி நம் உள்ளொளிப் பயணத்தை எளிதாக்குகிறது என்றும் அறிந்திருக்கிறார் ‘எதிர்நோக்கின் திருப்பயணி.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 166).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: