இன்றைய இறைமொழி
செவ்வாய், 7 மே 2024
பாஸ்கா காலம் 6-ஆம் வாரம் – செவ்வாய்
திப 16:22-34. யோவா 16:5-11
புதிய உலகம்
இந்த உலகத்தை விட்டு தாம் செல்லவிருப்பதை இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னபோது அவர்கள் அதுகுறித்து துயரம் அடைகிறார்கள். இந்த உலகம்தான் இறுதி என எண்ணிய சீடர்களுக்கு மறுவுலகின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறார் இயேசு. இயேசு அந்த உலகிற்குச் செல்கிறார். அந்த உலகிலிருந்தே தூய ஆவியார் புறப்பட்டு வருகிறார். அவர் இயேசு விட்டுச் செல்கிற வெற்றிடத்தை நிரப்புவார். ஆக, சீடர்கள் இயேசுவின் புறப்பாடுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
தூய ஆவியார் பற்றிய புதிய புரிதலை இயேசு நமக்குத் தருகிறார்: ‘அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை.’
(அ) பாவம். யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் இயேசுவை இறைமகன் என்று நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே பாவம். பாவம் பற்றிய பழைய புரிதல் திருச்சட்டம் அல்லது பத்துக் கட்டளைகள் சார்ந்ததாக இருக்கிறது.
(ஆ) நீதி. இறைவாக்கினர் நூல்களில் நீதி என்பது நேரிய நடத்தையின் விளைவு எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால், உலகைப் பொருத்தவரையில் நீதி என்பது உலகின் போக்கில் நடப்பது, நேரத்திற்கேற்றாற்போல சமரசம் செய்துகொள்வது, தன்னலம் நாடுவது. இயேசு தந்தையிடம் திரும்புகிறார். அவருடைய உயிர்ப்பும் விண்ணேற்றமும் அவருக்கு நீதியாக அமைகின்றன.
(இ) தீர்ப்பு. இதற்கு முந்தைய பகுதியில் (காண். யோவா 12:31) சாத்தானை உலகின் தலைவன் என அழைக்கிறார் இயேசு. ஏனெனில், உலகின் நிறுவனங்கள், அமைப்புகள், கருத்தியல்கள் அவனுக்கு உரியதாக இருக்கின்றன. இயேசுவுக்குத் தீர்ப்பு வழங்குவதால் அவருக்குத் தண்டனை கொடுப்பதாக உலகம் நினைத்தது. ஆனால், இயேசுவின் உயிர்ப்பால் சாத்தான் தீர்ப்பிடப்பட்டுத் தண்டனை பெறுகின்றான்.
இரண்டு விடயங்கள் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:
(அ) இந்த உலகையும் கடந்த நம்பிக்கைப் பார்வை பெறுவது.
(ஆ) பாவம், நீதி, தீர்ப்பு பற்றிய இந்த உலகத்தின் புரிதல்கள் நம்மேல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிக் கவனமாக இருப்பது.
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் மற்றும் சீலாவின் பேராண்மை பற்றி வாசிக்கிறோம். சிறைக்கதவுகள் திறக்கப்பட்டாலும் தப்பிச் செல்லாமல் இருக்கிறார்கள் திருத்தூதர்கள். இது அவர்கள் பெற்றிருந்த அகவிடுதலையைக் காட்டுகிறது. அகவிடுதலை பெற்றிருப்பவர்கள் தாங்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதையோ, அவற்றிலிருந்து விடுபடுவதையோ பற்றி அக்கறை கொள்வதில்லை. பவுலின் பேராண்மையே சிறைக்காவலரின் மனமாற்றத்துக்குக் காரணமாகிறது.
பவுல் மற்றும் சீலா தங்களுடைய நம்பிக்கைப் பார்வையில், சிறையின் குளிரையும் தனிமையையும் தாண்டி இறைவனின் உடனிருப்பை உணர்ந்தார்கள். தங்களுக்கு மேலான ஒன்றோடு தங்களையே அவர்கள் இணைத்துக்கொண்டதால் தங்களுக்குக் கீழானவை பற்றி அவர்கள் கலக்கம் அடையவில்லை.
நிற்க.
இந்த உலகத்தையும் தாண்டி அந்த உலகத்தைக் காண்பது நம்பிக்கை என்றால், அந்த உலகத்துக்கான காத்திருத்தலே எதிர்நோக்கு. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 91)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: