• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 10 மார்ச் 2024. இல்லம் திரும்பும் மகிழ்ச்சி

Sunday, March 10, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 10 மார்ச் 2024
தவக்காலம் நான்காம் ஞாயிறு (மகிழ்ச்சி ஞாயிறு)
2 குறிப்பேடு 36:14-16,19-23. எபேசியர் 2:4-10. யோவான் 3:14-21

 

இல்லம் திரும்பும் மகிழ்ச்சி

 

தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றை மகிழ்ச்சி ஞாயிறு எனக் கொண்டாடுகிறோம். உயிர்ப்பு பெருவிழா மகிழ்ச்சியின் முன்னடையாளமாக இருக்கிறது இந்நாள். இந்நாளில் அருள்பணியாளர் ரோஸ் நிற திருவுடை அணிந்து திருப்பலி நிறைவேற்றுவார். பாஸ்கா பெருவிழா அன்று திருமுழுக்கு பெறுகிற பெரியவர்களுக்கான இரண்டாவது ஆய்வு இன்று நடைபெறும். ஒளி என்னும் முதன்மையான திருமுழுக்கு அடையாளம் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மையப்பொருளாக இருக்கிறது.

 

இன்றைய முதல் வாசகம் 2 குறிப்பேடுகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாரசீக அரசர் சைரசு பாபிலோனியர்கள்மேல் வெற்றிகொள்கிறார். பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை விடுவித்து அவர்கள் எருசலேம் திரும்புமாறும், ஆண்டவருக்கான கோவிலைக் கட்டி எழுப்புமாறும் அனுமதிக்கிறார். ஆண்டவராகிய கடவுளே சைரசு அரசர் வழியாகச் செயலாற்றுகிறார். நெபுகத்னேசர் வழியாக இஸ்ரயேல் மக்களைத் தண்டித்த ஆண்டவராகிய கடவுள் சைரசு வழியாக அவர்களை விடுவிக்கிறார். இவ்வாறாக, ஆண்டவர்தாமே அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பதும், அவரே அனைத்தையும் வழிநடத்துகிறார் என்பதும் தெளிவாகிறது.

 

பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம், ஆண்டவராகிய கிறிஸ்துவின் உயிர்ப்பு வழியாக மனுக்குலம் பெற்றுக்கொண்ட ஒப்பற்ற அருளை எடுத்துரைத்து, நாம் பெற்றிருக்கிற மீட்பு கடவுளின் அருட்கொடை என்பதை எடுத்துரைக்கிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 3:14-21), இயேசு-நிக்கதேம் உரையாடலின் பிற்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உரையாடல் போன்று தொடங்குகின்ற வாசகப்பகுதி இறுதியில் உரைவீச்சாக முடிகின்றது. இந்த உரைவீச்சில் முரண்சொற்களை மிகுதியாகக் கையாளுகின்றார் யோவான்: ‘அழிவு – நிலைவாழ்வு,’ ‘உலகு – கடவுள்,’ ‘தண்டனைத் தீர்ப்பு – மீட்பு,’ ‘நம்பிக்கை கொள்ளாதோர் – நம்பிக்கை கொள்வோர்,’ ‘தீச்செயல்கள் செய்வோர் – உண்மைக்கேற்ப வாழ்வோர்’, ‘இருள்-ஒளி.’ இம்முரண் சொற்களில் முதன்மையாக வரும் சொற்கள் அனைத்தும் தூரத்தைக் குறிப்பனவாக உள்ளன. ஒவ்வொரு பகுதியாக இந்த வாசகத்தைப் புரிந்துகொள்வோம். ‘மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்’ என்கிறார் இயேசு. இங்கே உயர்த்தப்படுதல் என்பது, நேரிடையாக, ‘இயேசுவின் சிலுவைச் சாவையும்,’ மறைமுகமாக, ‘அவரின் உயிர்ப்பையும்’ குறிக்கின்றது. ‘நிலைவாழ்வு’ என்பது மறுவாழ்வு அல்லது இறப்புக்குப் பின் வாழ்வு என்றும் புரிந்துகொள்ளப்படலாம். இவ்வுலகிலேயே ஒருவர் பெறுகின்ற ‘நிறைவாழ்வு’ என்றும் எடுத்துக்கொள்ளலாம். பிந்தைய பொருளே மிகவும் பொருத்தமானது. ‘உலகு’ என்பது யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், ‘கடவுளின் இயங்குதளம்,’ ‘மனிதர்களின் வாழ்விடம்,’ மற்றும் ‘கடவுளுக்கு எதிரான மனநிலை.’ இங்கே ‘உலகு’ என்பது கடவுளின் இயங்குதளமாக இருக்கிறது. ஆனால், கடவுளை விட்டுத் தூரமாக இருக்கிறது.

 

‘உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்’ என மொழிகிறார் இயேசு. நிகழ்வின்படி நிக்கதேம் இயேசுவைச் சந்திக்க இரவில் வருகிறார். இரவில் ஒளியைத் தேடி வருகிறார் நிக்கதேம்.

 

மகிழ்ச்சியை நோக்கிய மூன்று பயணங்களை இன்றைய வாசகங்களில் காண்கிறோம்:

(அ) எருசலேமை நோக்கிய இஸ்ரயேல் மக்களின் பயணம்

பாபிலோனிய அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றவர்களாக எருசலேமை நோக்கிப் பயணம் செய்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். அவர்கள் பெற்றிருக்கிற விடுதலை அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஆண்டவராகிய கடவுளின் நகரத்தையும் கோவிலையும் நோக்கிய அவர்களுடைய பயணம் இறைவனுடன் அவர்கள் மீண்டும் இணைவதையும் குறித்துக் காட்டுகிறது.

 

(ஆ) கிறிஸ்துவின் உயிர்ப்பால் வந்த மீட்புப் பயணம்

பாவத்தின் பிடியிலிருந்த அனைவரும் கிறிஸ்துவின் உயிர்ப்பால் பெற்ற மீட்புப் பயணம் நமக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்த மீட்பு நம் செயல்களால் அல்ல, மாறாக, கடவுளின் இரக்கப் பெருக்கத்தால் நடந்தேறியது. கடவுளின் இரக்கத்தைப் பெற்றுள்ள நாம் நற்செயல்கள் வழியாக மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

 

(இ) ஒளியை நோக்கிய பயணம்

தீமை செய்பவர்கள் ஒளியை விட இருளையே நாடுகிறார்கள் என மொழிகிற இயேசு, ஒளியை நோக்கிப் பயணம் செய்ய நம்மை அழைக்கிறார். இருளை விட்டுச் செல்வதற்குத் தடையாக இருக்கிற காரணிகளை ஆய்ந்தறிந்து அவற்றைக் களைய வேண்டும்.

இன்று நம் கண்கள் ஒளியைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றன. டிவி, கணினி, திறன்பேசியின் திரைகளை நோக்கியே நம் கண்கள் இருக்கின்றன. ஒளியை நோக்கி நம் கண்கள் இருந்தாலும், கடவுளின் ஒளியை நோக்கி நம் இதயங்கள் இருக்கின்றனவா என ஆய்ந்தறிந்து பார்ப்போம். தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்கு நம்மேல் அன்புகூர்ந்த கடவுளைப் போல நாமும் ஒருவர் மற்றவர்மேல் அன்புகூர வேண்டும்.

 

ஆண்டவரின் உயிர்ப்பு தருகிற மகிழ்ச்சியை நோக்கி விரைந்து செல்வோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: