இன்றைய இறைமொழி
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு
எசாயா 50:5-9. யாக்கோபு 2:14-18. மாற்கு 8:27-35
நீர் மெசியா!
இன்றைய நற்செய்தி வாசகத்தில், திருத்தூதர்கள் சார்பாக நம்பிக்கை அறிக்கை செய்கிற பேதுரு இயேசுவிடம், ‘நீரே மெசியா!’ என்று மொழிகிறார். இயேசு யார் என அறிக்கையுடவும், அவரைப் புரிந்துகொள்ளவும், அவருடைய வழியில் அவரைப் பின்பற்றவும் அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
(அ) கிறிஸ்துவை அறிக்கையிடுதல்: நம்பிக்கைப் பயணம்
நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று தம் திருத்தூதர்களைக் கேட்கிறார் இயேசு. இந்தக் கேள்வியும் பேதுருவின் விடையும் மாற்கு நற்செய்தியைத் திறக்கிற சாவிகளாக இருக்கின்றன. இதற்கு முந்தைய பகுதியில், ‘இயேசு யார்? அவர் எப்படிப்பட்டவர்?’ என்ற கேள்வி வாசகர்கள் உள்ளத்தில் எழுந்தது. இக்கேள்விகளுக்கான விடையே பேதுருவின் அறிக்கை: ‘இயேசு மெசியா.’
‘மெசியா’ (‘அருள்பொழிவு பெற்றவர்’) என்னும் சொல், ‘மஸியாக்’ என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து வருகிறது. அருள்பணியாளர்கள் (விப 30:30), அரசர்கள் (1 சாமு 16:13), இறைவாக்கினர்கள் (1 அர 19:16) எண்ணெய் கொண்டு அருள்பொழிவு செய்யப்பட்டார்கள். எசாயா, எரேமியா, தானியேல் இறைவாக்கினர்கள், தாவீதின் வழி வரக்கூடிய மெசியாவை முன்னுரைக்கிறார்கள் (காண். எசா 11:1-5). அவரே இஸ்ரயேல் மக்களுக்கு நீதியும் அமைதியும் மறுவாழ்வும் கொண்டுவருவார். இவர் துன்புறும் ஊழியன் என உருவகப்படுத்துகிறார் எசாயா (காண். எசா 53). நிலையான ஆட்சியை ஏற்படுத்துவார் என மொழிகிறார் தானியேல் (காண். 7:13-14). இயேசுவின் சமகாலத்தில் மெசியா எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்தது.
பேதுருவின் அறிக்கை அனைவருக்கும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. இந்த இடத்தில்தான் இயேசு தம்மை யார் என மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து, தம் மெசியா நிலை என்பது துன்பத்தின் வழியாக வரக்கூடியது என உரைக்கிறார் இயேசு. இன்றைய முதல் வாசகத்தில், நாம் காண்கிற துன்புறும் ஊழியன் கடவுளுக்காகத் துன்பம் ஏற்பதுடன், கடவுளின் உடனிருப்பையும் உணர்ந்துகொள்கிறார்.
இன்று நாம் இயேசு யார் என அறிக்கையிடுகிறோம்? அவரைப் பற்றிய புரிதலே நம்மைப் பற்றிய, உலகைப் பற்றிய புரிதல்களை வரையறுக்கிறது. அவரைப் பற்றிய அறிதலே அர்ப்பணத்தோடு அவரைப் பின்பற்றுவதற்குத் தொடக்கமாக இருக்கிறது.
(ஆ) மெசியா பற்றிய புரிதல்: சிலுவையைப் புரிந்துகொள்தல்
நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியில், தம் பணியின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துகிறார் இயேசு. மெசியா புறக்கணிக்கப்பட்டு, துன்பம் ஏற்பார், கொல்லப்படுவார். உயிர்த்தெழுவார். இயேசுவின் இந்த விளக்கம் பேதுருவுக்கு ஏற்புடையதாக இல்லை. அவருடைய எதிர்பார்ப்புகள் வேறு மாதிரியாக இருந்தன. மெசியாவும் துன்புறும் ஊழியனும் ஒன்றே என்பதை பேதுருவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பேதுருவைக் கடிந்துகொள்கிறார் இயேசு. துன்பத்தையும் சிலுவையையும் ஏற்கிறவராக இருக்கிறார் மெசியா. சீடத்துவத்தின் விலை இதுதான் என்பதை நாம் உணர்தல் வேண்டு;ம். இயேசுவைப் பற்றிய புரிதல் நமக்கு எப்படி வருகிறது?
(இ) மெசியாவைப் பின்பற்றுதல்: செயலாற்றுகிற நம்பிக்கை
நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதியில், சீடத்துவத்துக்கான நிபந்தனைகளை முன்மொழிகிறார் இயேசு: தன் மறுப்பு, சிலுவை ஏற்றல், பின்பற்றுதல். நம்பிக்கை என்பது செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கிறோம்.
இயேசுவைப் பற்றிய அறிக்கை வாயால் அறிக்கையிடும் நம் நம்பிக்கை அறிக்கையைத் தாண்டிச் செல்கிறது. நம்பிக்கையும் செயல்களும் இணைந்தே செல்ல வேண்டும்.
இன்றைய வாசகங்கள் விடுக்கும் சவால்கள் எவை?
(அ) தனிப்பட்ட அறிக்கை: நம் ஆன்மாவின் இதயத்தில் நாம் ஒவ்வொருவரும் இயேசு யார் என அறிக்கையிட வேண்டும். ‘நீரே மெசியா’ என்று அவரைப் பற்றிய அறிக்கை செய்தவுடன் நம் வாழ்வு மாற்றம் பெறுகிறது. நம் இதயத்தின் அமைதியில் அவர் தம்மையே நம்ககு வெளிப்படுத்துகிறார்.
(ஆ) சிலுவையைத் தழுவிக்கொள்தல்: நாம் அனுபவிக்கிற துன்பங்கள் அனைத்துமே நாம் தழுவிக்கொள்கிற சிலுவைகள். பற்றுறுதி, சரணாகதி ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.
(இ) செயல்படுகிற நம்பிக்கை: அன்பிலும் பணியிலும் கனிகிற நம்பிக்கை நம் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும்.
செப்டம்பர் 15-ஆம் நாளில் அன்னை கன்னி மரியாவை, ‘வியாகுல அன்னை‘ அல்லது ‘துன்பங்களின் அன்னை’ எனக் கொண்டாடுகிறோம். நம் துன்பங்களில் அவர் நமக்குப் பரிந்துபேசுவாராக! துன்பங்களில் அவர் கொண்டிருந்த அமைதியும் சரணாகதியும் நம்மைத் தூண்டி எழுப்புவனவாக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: