• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி ஞாயிறு, 17 மார்ச் 2024 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

Sunday, March 17, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel Lenten Season Daily Catholic Lectio Jesus Christ இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 17 மார்ச் 2024
தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு
எரேமியா 31:31-34. எபிரேயர் 5:7-9. யோவான் 12:20-33

 

மிகுந்த விளைச்சலை அளிக்கும்!

 

இயேசுவின் பாடுகள் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் நம் எண்ணங்களைச் சற்றே உயர்த்தி, பாடுகளுக்கு அப்பால், சிலுவைக்கு அப்பால் உள்ள உயிர்ப்பின் மாற்றத்தையும், பெருக்கத்தையும், நிறைவையும் காணத் தூண்டுகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

 

வாழ்வில் துன்பங்களை, இழப்புகளை, தனிமையை எதிர்கொள்ளும்போதெல்லாம் வாழ்க்கை முடிந்துவிட்டது போல நாம் உணர்கிறோம். ஆனால், துன்பங்களும், இழப்புகளும், தனிமையும் மறைந்துவிடுகின்றன என்ற ஆறுதலை நமக்குத் தருகின்றது இன்றைய ஞாயிறு.

 

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாக புதிய உடன்படிக்கையை முன்மொழிகிறார். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்து வருகிறார். வழியில், சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். ‘நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் என் மக்களாக இருப்பீர்கள்’ என்று அவர்களைத் தம் சொந்த இனமாகத் தெரிவு செய்கிறார்;. பத்துக் கட்டளைகள் கொடுத்து அவர்களோடு நெருக்கமாகிறார். தொடர்ந்து, தாவீது வழியாக மற்றொரு உடன்படிக்கை செய்து அவர்கள் என்றென்றும் தங்களுடைய நாட்டில் நிலைத்திருப்பார்கள் என்று வாக்குறுதி கொடுக்கிறார். ஆனால், சிலைவழிபாட்டில் ஈடுபட்டு ஆண்டவரை மறந்தபோது, பாபிலோனிய நாடுகடத்தலுக்குக் கையளிக்கிறார் ஆண்டவர். சீனாய் மலை உடன்படிக்கையும், தாவீதுடன் செய்துகொண்ட உடன்படிக்கையும் பொய்த்துப்போய்விட்டது என்று மக்கள் உணர்ந்தபோது, ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாக புதிய உடன்படிக்கையை முன்மொழிகிறார்.

 

புதிய உடன்படிக்கையின் கூறுகளாக ஆண்டவர் முன்மொழிபவை மூன்று: (அ) கற்பலகைகளில் அல்ல, மாறாக, இச்சட்டம் இஸ்ரயேல் மக்களின் இதயங்களில் எழுதப்பட்டும், (ஆ) ஒவ்வொருவரும் தம் உள்ளத்திலேயே கடவுளை அறிந்துகொள்வர், (இ) ஆண்டவருடைய மன்னிப்பு மற்றும் இரக்கம் மட்டுமே இனி நினைவுகூரப்படும்.

 

ஆக, பழைய உடன்படிக்கை புதிய உடன்படிக்கையாக மாற்றம் பெறுகிறது. இஸ்ரயேல் மக்களுடைய அடிமை வாழ்வு விடுதலை வாழ்வாக மாறுகிறது. பாவத்தாலும் கீழ்ப்படியாமையாலும் தூரத்தில் நின்ற இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளிடம் நெருங்கி வருகிறார்கள்.

 

நற்செய்தி வாசகம் (காண். யோவா 12:20-33) மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) இயேசுவைக் காண கிரேக்கர்கள் சிலர் ஆர்வம் தெரிவிக்கின்றனர்ளூ (ஆ) இயேசு தன் இறப்பு பற்றியும், சீடத்துவம் பற்றியும் போதிக்கின்றார்ளூ மற்றும் (இ) வானிலிருந்து ஒரு குரல் இயேசுவின் செய்தியை ஆமோதிக்கிறது. இந்த வாசகத்தின் மையப்பொருளாக இயேசு பயன்படுத்தும் சொல்லோவியம் ‘கோதுமை மணி.’ இது ஒரு விவசாய உருவகம். இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் அடிப்படையாக இருந்த உணவு கோதுமையும் பார்லியும். விதைத்தலும் உழுதலும் இணைந்து நடைபெற்றன. அதாவது, நிலத்தில் உள்ள களைகளைத் தீயிட்டு அழிப்பர். பின்னர் விதைகளை நிலத்தில் தெளித்து, நிலத்தை உழுவர். நிலத்தில் விழுந்த விதைகள் அப்படியே புரண்டு மண்ணுக்குள் சென்றுவிடும்.

 

விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது.

 

கோதுமை மணி தன்னை மறைத்துக்கொண்டவுடன், மடிந்தவுடன், வெளியே வந்தவுடன் என்ன நடக்கிறது? ஒரு மணியாக உள்ளே சென்ற விதை, பல மணிகளாகப் பெருகுகிறது. யாரும் பார்க்காமல் கிடந்த விதை முளைத்துப் பெருகியவுடன் அனைவரும் அதை நோக்கி வருகிறார்கள். அனைவருக்கும் உணவாகவும் ஊட்டமாகவும் மாறுகிறது.

 

விதை போல இயேசு பாடுகள் படுகின்றார். விதை நிலத்தில் ஊன்றப்படுவது போல இயேசு அடக்கம் செய்யப்படுகின்றார். விதை புத்துயிர் பெற்று வெளியே வருவது போல இயேசு கல்லறையிலிருந்து வெளியே வருகின்றார். இதுவே மாட்சிப்படுத்தப்படுதல். இந்த நிலையை அடைந்தவுடன் இயேசு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கின்றார். கிரேக்கர்கள் மட்டும் இயேசுவைத் தேடி வருகிறார்கள். ஆனால், அவர் இறந்து உயிர்த்து விண்ணேற்றம் அடைந்தவுடன் அனைவரையும் தன்பால் ஈர்த்துக்கொள்கிறார்.

இயேசுவின் இறப்பு என்பது மடிதல் அல்ல, மாறாக, மடிந்து உயிர்த்தெழுதல்.

 

இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 5:7-9), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்றார். ஆண்டவராகிய இயேசு கெத்சமெனியில் பாடுகள் பட்டதை இறையியலாக்கம் செய்யும் ஆசிரியர், ‘மன்றாடி வேண்டினார்’ மற்றும் ‘நிறைவுள்ளவரானார்’ என்னும் இரு சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றார். ‘மன்றாடி வேண்டுதல்’ என்பது பலி ஒப்புக்கொடுத்தலையும், ‘நிறைவுள்ளவராதல்’ என்பது பலி ஏற்றுக்கொள்ளப்படுதலையும் குறிக்கிறது. இங்கே, ‘கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்’ என்னும் சொல்லாடல் இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.

 

தம்மைச் சாவிலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் வடித்த இயேசு, துன்பங்கள் ஏற்றவுடன் அவர் நிறைவுள்ளவராகிறார். துன்பம் அவரை நிறைவுள்ளவராக ஆக்குகிறது. ஏனெனில், துன்பத்தின் வழியாக உயிர்ப்பு நடந்தேறுகிறது.

 

இவ்வாறாக,

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அனுபவிக்கிற துன்பம், புதிய உடன்படிக்கையின் நெருக்கமாக மாற்றம் அடைகிறது.

கோதுமை மணிபோல இயேசு மடிதல், சீடர்களையும் கிரேக்கர்களையும் மட்டுமல்ல, அனைவரையும் அவரைப் பின்பற்றுபவர்களாகப் பெருக்குகிறது.

கெத்சமேனியில் உள்ளத்திலும், கல்வாரியில் உடலிலும் இயேசு ஏற்ற துன்பங்கள் உயிர்ப்புக்கு அழைத்துச் சென்று, அவரை நிறைவுள்ளவர் ஆக்குகின்றன.

‘மிகுந்த விளைச்சலை அளிக்கும்!’ என்பது நாம் பெற்றிருக்க வேண்டிய மனப்பாங்காக இன்று மாறட்டும்.

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சிறிய துன்பங்களும் இழப்புகளும் தனிமையும் மிகுந்த விளைச்சலை நமக்கு அளிக்கின்றன என்ற எதிர்நோக்கை நாம் பெற்றுக்கொள்வோம்.

 

இந்த எதிர்நோக்கை நாம் தக்கவைத்துக்கொள்வது எப்படி?

 

(அ) ஆண்டவரின் நெருக்கம்

 

ஒரு கயிறு அறுந்து மீண்டும் கட்டப்படும்போது அதன் இரு முனைகளும் நெருங்கி வருகின்றன. நம் பாவத்தால் நாம் ஆண்டவரை விட்டுத் தூரமாகச் சென்றாலும் அவர் நமக்கு நெருக்கமாக வருகிறார். அவரை நம் இதயத்தில் நாம் அறிந்துகொள்கிறோம். அவருடைய உடனிருத்தல் நமக்கு மாற்றத்தைத் தருகிறது.

 

(ஆ) போராட்டம் அல்ல, வெற்றி

 

கோதுமை மணியின் போராட்டத்தை யாரும் நினைப்பதில்லை. ஏனெனில், ஒரு மணி பல நூறு மணிகளாகப் பெருகி மகிழ்ச்சி தருகிறது. ஒன்றின் தொடக்கத்தை அல்ல, மாறாக, அதன் முடிவையே நாம் மனத்தில் இருத்துவோம். போராட்டம் மட்டுமே நம் கண்களை மறைத்துவிட வேண்டாம். போராட்டத்தின் இறுதியில் நாம் பெறுகிற வெற்றியின் மகிழ்ச்சியை எப்போதும் மனத்தில் நிறுத்துவோம்.

 

(இ) கண்ணீர் சிந்தி

 

கண்ணீர் சிந்துதலை இயேசுவின் வலுவின்மையாக அல்ல, மாறாக, அவருடைய இயற்கை இயல்பாக நாம் பார்க்கிறோம். கண்ணீர் சிந்துதல் என்பது நாம் அனுபவிக்கிற உடல் மற்றும் உள்ளத்தின் வலியைக் குறிக்கிறது. நாம் செய்யும் செயல்கள், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வலி இருக்கவே செய்கிறது. வலியை ஏற்று வழிநடத்தல் அவசியம்.

 

இன்றைய பதிலுரைப்பாடலில், ‘உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்!’ (காண். திபா 51) எனப் பாடுகிறார் தாவீது. மீட்பின் மகிழ்ச்சியே நாம் பெறுகிற மாற்றம், பெருக்கம், நிறைவு.

 

பிரெஞ்சு ஓவியர் ரெனோ குறிப்பிடுவதுபோல, ‘துன்பம் மறைந்துவிடும். அழகு நிலைத்து நிற்கும்’ எனத் தொடர்ந்து பயணிப்போம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: