இன்றைய இறைமொழி
ஞாயிறு, 18 பிப்ரவரி 2024
தவக்காலம் முதல் ஞாயிறு
தொடக்கநூல் 9:8-15. 1 பேதுரு 3:18-22. மாற்கு 1:12-15
புதிய தொடக்கங்கள்
‘ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது’ என்கிறார் சபை உரையாளர் (காண். 7:8). தொடக்கங்களே முடிவுகளை நிர்ணயிக்கின்றன எனச் சொல்கின்ற இன்றைய வாசகங்கள் புதிய தொடக்கங்கள் நோக்கி நம்மை அழைக்கின்றன.
நாற்பது நாள்கள் பெருவெள்ளத்திற்குப் பின்னர் நோவா மற்றும் அவரோடு உடனிருந்த குடும்பத்தாரோடு ஆண்டவராகிய கடவுள் பேசுகிற சொற்களே இன்றைய முதல் வாசகம். ஒரு வாக்குறுதியும், ஓர் அடையாளமும் இங்கே முன்மொழியப்படுகின்றன. ‘என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வராது!’ என்னும் வாக்குறுதியையும், ‘என் உடன்படிக்கையின் அடையாளமாக என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்’ என்னும் அடையாளமும் இங்கே தரப்படுகின்றன.
பண்டைக்கால மேற்கு ஆசியாவில் வானவில் என்பது கடவுளின் ஆயுதமாகக் கருதப்பட்டது (காண். திபா 7:12-13). உடைந்த வில் அல்லது தொங்கவிடப்பட்ட வில் போர் நிறுத்தம் அல்லது அமைதியைக் குறித்தது (காண். திபா 46:9). ஆண்டவராகிய கடவுள் மனுக்குலத்தை அழிப்பதற்காக அவர்கள்மேல் தொடுத்த போரை நிறுத்திக் கொள்வதோடு, அவர் என்றும் அவர்களைத் தேடி வருவதாக வாக்குறுதி கொடுக்கிறார்.
மனிதர்களின் தீச்செயல்களையும் தீய இயல்பையும் எண்ணங்களையும்விட ஆண்டவராகிய கடவுளின் இரக்கம் மேன்மையானதாக இருக்கிறது. அவரே முயற்சி எடுத்து உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அவரே வாக்குறுதி கொடுக்கிறார். வாக்குறுதியில் நிலைத்திருப்பதற்கான அடையாளத்தையும் தனக்கென குறித்துக்கொள்கிறார்.
நோவாவும் அவருடன் இருந்தவர்களும் செய்ய வேண்டியது எனக் கடவுள் அவர்களுக்கு எதையும் வரையறுக்கவில்லை. அவர்கள் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். வெள்ளப்பெருக்கு என்பது அழிவின் அடையாளமாக அல்ல, புதிய தொடக்கமாக அவர்களுக்கு இருக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், துன்புறும் தன் திருஅவைக்கு எதிர்நோக்கு தருகிற பேதுரு, ஆண்டவராகிய இயேசு துன்பங்களின் வழியாக அடைந்த வெற்றியைக் குறித்துக்காட்டி, திருமுழுக்குத் தண்ணீர் வழியாக நாம் பெறுகிற மீட்பை எடுத்துரைக்கிறார். ‘மனித இயல்பு’, ‘ஆவிக்குரிய இயல்பு’ என்று இரு இயல்புகள் இயேசுவிடம் இருந்தன என எழுதுகிறார் பேதுரு. ‘மனித இயல்பு’ என்பது இயேசுவின் மனுவுருவாதலையும், ‘ஆவிக்குரிய இயல்பு’ என்பது அவருடைய உயிர்ப்பையும் குறிக்கின்றன. ஆண்டவராகிய கடவுள் உயிர்ப்பில் பெற்ற புதிய தொடக்கத்தை, நம்பிக்கையாளர்களும் பெற்றுக்கொள்வார்கள் என்பது பேதுருவின் எதிர்நோக்காக இருக்கிறது.
இயேசு சோதிக்கப்படும் நிகழ்வையும் அவருடைய பணித்தொடக்கத்தையும் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். லூக்கா, மத்தேயு போல இயேசுவின் சோதனைகளின் வரிசையையும் அமைப்பையும் பற்றி மாற்கு எழுதவில்லை. மாறாக, சோதனைகள் நிகழ்வை இயேசுவின் பணித்தொடக்கத்துக்கான அமைப்புத்தளமாகப் பதிவு செய்கிறார்.
‘பாலை நிலம்,’ ‘நாற்பது நாள்கள்,’ ‘அலகை,’ ‘சோதனை,’ ‘காட்டு விலங்குகள்,’ ‘வானதூதர்’ என ஆறு அடையாளங்களைக் குறிப்பிடுகிறார். நம் தமிழ்மரபின் ஐந்து நிலங்கள் பிரிவின்படி பார்த்தால் ‘பாலை நிலம்’ மற்றவற்றின் இல்லாத நிலை. அதாவது, மலை, காடு, வயல், கடல் இவை எதுவும் இல்லாத இடமே பாலை. உயிர்கள் வாழ இயலாத, வளமை இல்லாத இடமே பாலை. யோர்தான் ஆற்றங்கரையில் இயேசுவோடு நின்ற தூய ஆவியார், நீரின் மறுபக்கமான பாலை நிலத்துக்கு அவரை அனுப்பி வைக்கிறார். பாலை என்பது வாழ்வின் மறுபக்கம். ‘நாற்பது’ என்னும் எண், இஸ்ரயேல் மக்களின் ‘நாற்பது ஆண்டுகால’ பாலைநிலப் பயணத்தைக் குறித்துக்காட்டுகிறது. நோவா பெருவெள்ள நிகழ்வின் பின்புலத்தில், ‘நாற்பது நாள்கள்’ என்னும் சொல்லாடல் வெள்ளம் வடிந்த புதிய தொடக்கத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ‘அலகை’ என்பதை எதிரி என்றும், சோதிப்பவர் என்றும் பொருள்கொள்ளலாம். ‘சோதனை’ என்றால் ‘துன்பம்’ அல்லது ‘சோதித்துப் பார்த்தல்’ என்று பொருள். படைப்பின் தொடக்கத்தில் ஆதாம் காட்டு விலங்குகளோடு வாழ்கிறார். புதிய ஆதாமாகிய கிறிஸ்துவும் காட்டு விலங்குகளின் நடுவில் வாழ்கிறார். ‘வானதூதரின் பணிவிடை’ என்பதை கடவுளின் பராமரிப்பு என எடுத்துக்கொள்ளலாம்.
இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வுக்கும் அவருடைய பணித்தொடக்கத்துக்குமான இணைப்புக் கோடாக இருக்கிறது சோதனைகள் நிகழ்வு.
இயேசுவின் முதல் அறிவிக்கை, இரண்டு நேர்முகமான வாக்கியங்களாகவும் இரண்டு கட்டளைகளாகவும் அமைந்துள்ளது: ‘காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கிவிட்டது,’ ‘மனம் மாறுங்கள். நற்செய்தியை நம்புங்கள்.’ நம்பிக்கை என்பது மக்கள் கொடுக்க வேண்டிய பதிலிறுப்பாக உள்ளது.
இயேசுவுக்கான தொடக்கம் மட்டுமல்ல, இயேசுவின் நற்செய்தியைக் கேட்பவர்களுக்குமான தொடக்கமாகவும் இது அமைகிறது.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் செய்தி என்ன?
(அ) புதிய தொடக்கம் கடவுளிடமிருந்தே வருகிறது
முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள்தாமே மழையை நிறுத்துகிறார். அவரே தம் வில்லை வானில் வைக்கிறார். அவரே உடன்படிக்கை செய்கிறார். மனுக்குலத்துக்குப் புதிய தொடக்கத்தை அவரே தருகிறார். நாம் தவக்காலத்தில் மேற்கொள்கிற அனைத்துத் தவ முயற்சிகளும் கடவுளை நோக்கிய பயணத்துக்கான வழிகள்தாம் என்பதை உணரக் கற்றுக்கொள்வோம். ஏனெனில், நம் முயற்சிகளால் அல்ல, மாறாக, அவருடைய இரக்கத்தாலேயே நாம் புதிய தொடக்கத்தைப் பெறுகிறோம்.
(ஆ) கடவுளுக்குத் தரும் வாக்குறுதி
ஆண்டவராகிய கடவுள் நம்மை அழிப்பது இல்லை என நமக்கு வாக்குறுதி கொடுத்தாலும், இரண்டாம் வாசகத்தின்படி, திருமுழுக்குத் தண்ணீர் என்பது கடவுளுக்கு நாம் தரும் வாக்குறுதி எனப் பேதுரு சொல்வது நம் கவனத்தை ஈர்க்கிறது. திருமுழுக்கின் அருளை நாம் இந்த நாள்களில் மீட்டெடுக்க முயற்சி செய்ய வேண்டும். திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்து வாழ வேண்டும்.
(இ) பாலைநிலம் என்னும் தொடக்கம்
நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பாலைநில அனுபவங்களை இயேசுவும் பெற்றிருக்கிறார். அலகையும் வானதூதரும் ஒருங்கே வாழும் இந்த இடம் புதிய தொடக்கத்துக்கான பாதையை வரையறுக்கிறது.
இறுதியாக, பெருவெள்ளம், தண்ணீர், பாலைநிலம் என்னும் உருவகங்கள் வழியாக மனுக்குலத்தின் புதிய தொடக்கம் முன்மொழியப்படுகிறது. இந்தப் புதிய தொடக்கம் கடவுள் என்னும் புள்ளியில் தொடங்குகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Source: இன்றைய இறைமொழி. ஞாயிறு, 18 பிப்ரவரி 2024. புதிய தொடக்கங்கள் – Yesu Karunanidhi
Share: