இன்றைய இறைமொழி
ஞாயிறு, 2 ஜூன் 2024
கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் – பெருவிழா
விடுதலைப் பயணம் 24:3-8. எபிரேயர் 9:11-15. மாற்கு 14:12-16, 22-26
இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
ஓர் அழகான கிராமத்தில் வயது முதிர்ந்த சமையல்காரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சாமுவேல். அவர் சுடுகிற அப்பம் அந்த ஊருக்கே இனிப்பாக இருந்தது. அப்பம் சுடுவதில் சிறந்தவராக இருந்ததோடு, அன்பு காட்டுவதிலும் எளியவர்மேல் அக்கறை கொள்வதிலும் அவர் ஆர்வமாக இருந்ததால் மக்கள் அவரை மிகவும் விரும்பினார்கள். ஒரு நாள் மாலை, பயணத்தால் சோர்வுற்ற வழிப்போக்கர் ஒருவர் சாமுவேலின் கதவுகளைத் தட்டினார். அவரைத் தன் இல்லத்திற்குள் அழைத்த சாமுவேல் அவருக்கு அப்பம் பரிமாறினார்.
‘எடுத்துக்கொள்!’ என்று சொன்னார் சாமுவேல்.
கண்ணீர் மல்க சாமுவேலை உற்று நோக்கிய வழிப்போக்கர், ‘உமக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்றார். அதற்கு சாமுவேல், ‘இந்த அப்பம் வெறும் உணவு அல்ல. இது நான் உமக்குக் காட்டுகிற அக்கறை. எடுத்துக்கொள்! சாப்பிடு! ஊட்டம் பெறு’ என்றார்.
உண்ணத் தொடங்கிய வழிப்போக்கர் ஆற்றல் பெற்றார். ஒரு விதமான அமைதி அவருடைய மனத்தில் குடிகொண்டது. சற்று நேரம் சென்றவுடன், வழிப்போக்கர் தான் ஒரு கத்தோலிக்க குரு என்றும், நற்கருணையின் பொருள் தெரியாமல் தான் குழப்பத்தில் இருந்ததாகவும், சாமுவேலின் சொற்கள் இயேசுவின் சொற்களுக்கே உருவகமாக இருப்பதுபோல தான் உணர்வதாகவும் தெரிவித்தார்: ‘இதை பெற்றுக்கொள்ளுங்கள். இது எனது உடல்.’
‘நற்கருணை அன்பின் கொடை. இது கடவுளை நம் அருகில் கொண்டுவருவதுடன், நம்மையும் ஒருவருக்கொருவர் அருகில் கொண்டுவருகிறது’ என்று சொல்லி புன்னகைத்தார் சாமுவேல்.
அப்பம் சுடுபவரின் அச்சொற்கள் நற்கருணையின் பொருளை அருள்பணியாளருக்கு ஆழமாக உணர்த்தின. கிறிஸ்துவின் அன்பு நற்கருணையில் எப்போதும் உள்ளது. அவர் அவருடைய விருந்தில் பங்கேற்கவும், அந்த விருந்தால் மாற்றம் பெறவும் நம்மை அவர் தொடர்ந்து அழைக்கிறார்.
நிற்க.
இன்று நாம் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். கடந்த ஞாயிறு நாம் கொண்டாடிய மூவொரு கடவுள் பெருவிழா நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக, தொட்டு உணர முடியாததாக, மறைபொருளாக இருந்தது. இன்று நாம் கொண்டாடும் நற்கருணை நாம் தொட்டு உண்ணக் கூடிய அளவுக்கு நெருக்கமாக, நமக்கு நிறைவு தருவதாக இருக்கிறது.
திருப்பலியில் நாம் பங்கேற்கும்போதெல்லாம் நற்கருணையை நாம் தொடுகிறோம், ‘பெற்று உண்கிறோம்.’
‘பெற்றுக்கொள்ளுங்கள்!’ (அ) ‘எடுத்துக்கொள்ளுங்கள்!’ – இதுவே இயேசுவின் எளிய, ஆனால், ஆழமான அழைப்பு.
தம் திருத்தூதர்களோடு மேலறையில் பாஸ்கா உணவை இறுதி இராவுணவாக உண்கிற இயேசு, இவ்வார்த்தைகளைச் சொல்லி அழைக்கிறார். உணவின் எளிய பொருள்களை எடுத்து அரிய பொருளைத் தருகிறார் இயேசு. அப்பத்தைத் தம் உடலாகவும், இரசத்தை உடன்படிக்கையின் இரத்தமாகவும் வழங்குகிறார்.
இயேசுவின் இச்சொற்களை படைப்பின் தொடக்க நிகழ்வோடு பொருத்திப்பார்ப்போதம். ஆண்டவராகிய கடவுள் ஆண் மற்றும் பெண்ணிடம், ‘இதை எடுக்க வேண்டாம்!’ எனச் சொன்னார். விலக்கப்பட்ட கனியை அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது அவருடைய கட்டளையாக இருந்தது. ஆனால், அவர்கள் அதை எடுத்து உண்டார்கள். கடவுளின் கட்டளையை மீறினார்கள். விளைவாக, ஆண்டவரின் திருமுன்னிலையிலிருந்தும் தோட்டத்திலிருந்தும் விரட்டப்பட்டார்கள்.
ஆனால், ‘எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்னும் இயேசுவின் சொல் அவருடைய அழைப்பாக நம்மிடம் வருகிறது. தாங்களாகவே (கனியை) எடுத்துக்கொண்டதால் அவர்கள் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் அந்நியப்படுத்தப்பட்டார்கள். நாம் ‘எடுத்துக்கொள்ளும்’ நற்கருணை நம்மை கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் ஒன்றிணைக்கிறது. முதற்பெற்றோரின் கீழ்ப்படிதலின்மை அவர்களுக்கு சாபத்தை வருவித்தது. இயேசுவின் கீழ்ப்படிதல் நமக்கு மீட்பைக் கொண்டு வந்தது.
‘பெற்றுக்கொள்ளுங்கள்!’ – இச்சொல் கிறிஸ்துவின் தற்கையளிப்பை உருவகப்படுத்துகிறது. அதில் அவருடைய அன்பும் தியாகமும் நிறைந்துள்ளது. நற்கருணை என்பது முதலில் கிறிஸ்து நமக்கு வழங்குகிற கொடை. நாம் கிறிஸ்துவுக்கு எதையும் கொடுக்கத் தேவையில்லை. அவரே தம்மை நமக்குக் கொடுக்கிறார். அவருடைய ஆசையே நம்மை அவரை நோக்கி அழைக்கிறது. தம்மையே முழுமையாக நமக்குக் கொடுக்க அவர் காத்திருக்கிறார். ஏற்கெனவே நமக்காகத் தயாரித்து வைக்கப்பட்டுள்ள அறையைக் கண்டுபிடிப்பது மட்டுமே நம் வேலை. கிறிஸ்துவின் அளவுகடந்த அன்பை நமக்கு நினைவூட்டுகிற நற்கருணை அவரோடும் ஒருவர் மற்றவரோடும் தோழமை கொண்டிருக்க நம்மை அழைக்கிறது.
இரண்டாவதாக, ‘உடன்படிக்கை.’ இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில் உடன்படிக்கை என்பது வெறும் சொல் அல்ல. மாறாக, அது ஓர் உணர்வு. கடவுளால் முன்னெடுக்கப்பட்ட உறவு அது. அங்கே கடவுள் தந்தையாகவும் மக்கள் அவருடைய மகன்களாகவும் மகள்களாகவும் மாறினார்கள். அவர் அவர்களுக்கு பாதுகாப்பையும், ஊட்டத்தையும், வளர்ச்சியையும் வாக்களித்தார். உடன்படிக்கை நிறைவேற்றப்படுவதையும் உறுதிசெய்யப்படுவதையும் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் சொற்களை மோசே வாசிக்கிறார், எழுதிப் பதிவு செய்கிறார். ஆண்டவருடைய சொற்களுக்குச் செவிசாய்க்கிற மக்கள் அதற்கு பதிலிறுப்பு செய்கிறார்கள்: ‘ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்’ என்றார்கள். மக்களின் பதிலிறுப்பில் உடன்படிக்கை நிறைவேறுகிறது. இதை உறுதிசெய்யும் பொருட்டு வாளியில் உள்ள இரத்தத்தை எடுத்து மக்கள் மேலும் உடன்படிக்கைப் பேழை மேலும் தெளிக்கிறார் மோசே. ஒரே இரத்தம் மக்களையும் கடவுளையும் இணைக்கிறது. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரே இரத்தம் பாய்கிறது. இவ்வாறாக, உடன்படிக்கை உடனிருப்பையும், கீழ்ப்படிதலையும், பிணைப்பையும் உறுதி செய்கிறது.
ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றி உறுதி செய்கிறோம். முதல் பகுதியான இறைவார்த்தை வழிபாட்டில் ஆண்டவருடைய சொற்களை விவிலியத்திலிருந்து வாசிக்கக் கேட்டுப் புரிந்துகொள்கிறோம். பதிலிறுப்பு செய்கிறோம். இரண்டாம் பகுதியான நற்கருணை வழிபாட்டில், நாம் கிறிஸ்துவின் உடலை உண்டு இரத்தத்தைப் பருகுகின்றோம். ஒரே கிண்ணத்தில் பங்கேற்கிறோம். சமையல்காரர் சாமுவேலின் (கதை) அப்பம் போல நற்கருணை நமக்கு ஊட்டமும் மாற்றமும் வலிமையும் தருகிறது.
இந்த உடன்படிக்கை முந்தைய உடன்படிக்கையைவிட இரண்டு நிலைகளில் மேன்மையாக இருக்கிறது: (அ) முந்தைய உடன்படிக்கைகள் விலங்குகளின் இரத்தத்தால் உறுதிசெய்யப்பட்டன. ஆனால், இந்த உடன்படிக்கை மாபெரும் தலைமைக் குருவான கிறிஸ்துவின் இரத்தத்தால் உறுதிசெய்யப்படுகிறது. இதையே, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் (இரண்டாம் வாசகம்), ‘கிறிஸ்துவின் இரத்தம் வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது!’ (ஆ) முந்தைய உடன்படிக்கை இஸ்ரயேல் மக்களோடு மட்டும் செய்யப்பட்டது. இந்த உடன்படிக்கை அனைத்து மாந்தருக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் உரியதாக இருக்கிறது – ‘பலருக்காகச் சிந்திப்படும் இரத்தம்’ (காண். மாற் 14:24).
மூன்றாவதாக, ‘முன்நோக்கிப் பார்த்தல்.’ பாஸ்கா உணவை நிறைவு செய்கிற இயேசு, ‘இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன். அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் உன உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்கிறார். எதிர்காலத்தையும் எதிர்நோக்கையும் எண்ணியவராக இறையாட்சியில் பகிரப்படும் இரசம் பற்றிப் பேசுகிறார் இயேசு. திருப்பலியில் நாம் அருந்தும் உணவுடன் நற்கருணை முடிந்துவிடுவதில்லை. வரவிருக்கும் இறையாட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். நிரந்தரமான, நீடித்த சுவையான இறையாட்சிக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்கிறோம்.
இறுதியாக, ‘ஒலிவ மலைக்குச் செல்தல்.’ பாஸ்கா விருந்து – இறுதி இராவுணவு – முடிந்தவுடன் தம் சீடர்களோடு ஒலிவ மலைக்குச் செல்கிறார் இயேசு. அங்கிருந்து அவர் கல்வாரி மலைக்குச் செல்வார். இயேசு கடந்து செல்கிறார் – மேலறையிலிருந்து ஒலிவ மலைக்கு, ஒலிவ மலையிலிருந்து கல்வாரிக்கு, கல்வாரியிலிருந்து உயிர்ப்புக்கு! பாஸ்கா ஆடு போல பலியிடப்படுவதற்காகத் தயாராகிறார் இயேசு. மேலறைக்கும் கல்வாரிக்கும் இடையே உள்ள பாலம்தான் ஒலிவ மலை. இங்கே இயேசு தம் நொறுங்குநிலையை முழுவதுமாக அனுபவிக்கிறார். துன்பக்கிண்ணம் தூக்க இயலாததாக இருக்கிறது. இருந்தாலும், தந்தையின் விருப்பத்துக்குத் தம்மையே சரணாகதி ஆக்குகிறார். நாம் கொண்டாடும் திருப்பலி நம் நொறுங்குநிலையையும் மற்றவர்களின் வலுவின்மைகளை ஏற்றுக்கொள்ளவும், இறைத்திருவுளத்துக்கு சரணாகதி அடையவும் நம்மைத் தூண்டுகிறது.
சவால்களும் பாடங்களும்:
(அ) இன்று, பல நேரங்களில், திருப்பலி – அதை நிறைவேற்றுபவருக்கும், அதில் பங்கேற்பவருக்கும் – சுமையாக (burden), சோர்வாக (boredom), விருப்பமில்லாததாக, தொடர்செயலாக (routine) – மாறிவிட்டது. காரணம், திருப்பலி என்பது நம் செயல்பாடு எனக் கருதுகிறோம். இல்லை, இது நம் செயல்பாடு அல்ல, மாறாக, கடவுளின் செயல்பாடு. இயேசுவின் கொடை. நம் வேலை அவரிடமிருந்து கொடையைப் பெற்றுக்கொள்தல் மட்டுமே. நற்கருணையில் நாம் கடவுளுக்கு எதையும் கொடுப்பதில்லை. அவரே தம்மை நம்மிடம் கொடுக்கிறார். நம் கைகளைத் திறந்து நின்றால் போதும். மற்றவற்றை அவரே பார்த்துக்கொள்வார்.
(ஆ) ‘எடுத்துக்கொள்ளுங்கள். இது என் உடல்!’ என இயேசு நம்மிடம் சொல்கிறார். இதே சொற்களை நாமும் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். நம் குடும்பத்தில், சமூகத்தில் ஒருவர் மற்றவரிடம், ‘எடுத்துக்கொள்ளுங்கள்! இது நான்!’ என்று சொல்ல வேண்டும். அன்புக்கும் தற்கையளிப்புக்கும் தயாராக இருக்க வேண்டும். இரத்த உறவு, திருமண உறவு, நட்பு உறவு, மானுடத் தோழமை உறவு அனைத்தையும் உடன்படிக்கை உறவாக நான் மாற்ற வேண்டும். நான் என்னையே அளித்தாலன்றி, மற்றவர்கள் என்னைப் பெற்றுக்கொள்ள இயலாது.
(இ) கண்களைக் கடந்த பார்வையை எதிர்நோக்கியிருக்க நற்கருணை நம்மைத் தூண்டுவதால், நம் வாழ்வின் ஒலிவ மலைக்கு நாம் மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும். நற்கருணை தருகிற எதிர்நோக்கை நாம் ஒருவர் மற்றவருக்கு வழங்க வேண்டும். உலகம் என்னும் கெத்சமனியில் சிந்தப்படும் கண்ணீரை நாம் துடைக்க முன்வர வேண்டும்.
அன்பு, தற்கையளிப்பு, எதிர்நோக்கின் திருவிழா இது! வாழ்த்துகளும் செபங்களும்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: