• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 21 ஜூலை 2024. பரிவுநிறை தலைமை.

Sunday, July 21, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 21 ஜூலை 2024
ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு
எரேமியா 23:1-6. எபேசியர் 2:13-28. மாற்கு 6:30-34

 

பரிவுநிறை தலைமை

 

நம் தமிழில், ‘வேலியே பயிரை மேய்ந்ததுபோல‘ என்னும் சொலவடை உண்டு. இன்று பயிர்களுக்கும் வயல்களுக்கும் வேலிகள் கம்பிக்கட்டு, ஹாலோ ஃப்ளாக், பூப்போட்ட சிமெண்ட தகடுகள் கொண்டு இடப்படுகின்றன. உயிரற்ற இந்த வேலிகள் பயிர்களை மேய்வதில்லை. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் வயல்வெளிகளைப் பார்த்தால், ‘வேலிப்பயிர்கள்’ நமக்கு நினைவுக்கு வரும் – அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலிகளே கிடையாது, அடையாளக் கம்புகள் மட்டுமே நடப்பட்டிருக்கும்!

 

அகத்தி, ஆமணக்கு, சூரியகாந்தி, முட்செடிகள் போன்றவை வேலிப்பயிர்களாக இடப்பட்டன. இவை பயிர்களை மேய்வதுண்டு. எப்படி? செடிகளுக்கு வர வேண்டிய தண்ணீர், உரம் போன்ற ஊட்டத்தை இவை அதிகமாக எடுத்துக்கொண்டு, அல்லது செடிகளுக்கு வேண்டிய சூரிய வெயிலைக் கொடுக்காமல் இவை மறைத்துக்கொண்டால், அல்லது திருடர்கள் வரும்போது ஒளிந்துகொள்வதற்கு உகந்த பாதுகாப்பு இடமாக மாறிக்கொண்டால் வேலிகள் பயிர்களை மேய வாய்ப்புண்டு.

 

சில இடங்களில் வேலிகளாக மனிதர்கள் நிறுத்தப்பட்டார்கள். ‘மனித வேலிகள்‘ பகலிலும் இரவிலும் காவல் காப்பார்கள். மனித வேலிகள் உரிமையாளர்களின் நீட்சிகள். அதாவது, உரிமையாளர் தான் அங்கே நிற்பதற்குப் பதிலாக கூலி கொடுத்து மற்றவர்களை நிற்கச் செய்கிறார். மனித வேலிகள் சில நேரங்களில் விலைபோவதுண்டு. திருடர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவர்கள் துணைநின்றால் கனிகள் பறிக்கப்படுவதும், பயிர்கள் அழிக்கப்படுவதும் நேரிடும். இத்தகைய வேலிகளால் உரிமையாளருக்கு இழப்பு ஏற்படுகிறது. மனித வேலிகள் பயிர்களைக் காப்பதற்குப் பதிலாக அழிக்கின்றன எனக் கண்டறிகிற உரிமையாளர் மனித வேலிகளை அகற்றிவிட்டு, தானே பயிர்களைப் பாதுகாக்கவோ, அல்லது கம்பி வேலிகளை அமைத்து, கண்காணிப்பு கேமரா பொருத்தி அவற்றைப் பாதுகாக்கவோ தொடங்குகிறார்.

 

மனித வேலிகள் வெறும் கூலிகளே! கூலி அல்லது பணம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வேலை செய்வார்கள். ஆனால், உரிமையாளரோ பயிர்களை அன்பு செய்பவர், அவற்றின் வளர்ச்சி கண்டு மகிழ்பவர், தளர்ச்சி கண்டு வருந்துபவர். பரிவுகொண்டு அவற்றை மீண்டும் நன்னிலைக்கு உயர்த்துபவர்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு பரிவுநிறைந்த தலைவராக நிற்கிறார். பரிவுநிறை தலைமைகொண்டு நம் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நம்மை அழைக்கிறார்.

 

நற்செய்தி வாசகத்தின் சூழல், ‘பணியிலிருந்து திரும்புதல்.’ இயேசு தம் சீடர்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களைத் திருத்தூதுப் பணிக்கு அனுப்புகிறார். பணி முடிந்து அவர்கள் திரும்பி வருகிறார்கள்.

 

இந்த வாசகப் பகுதி மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) மேய்ப்புப் பணி அறிவிக்கை. (ஆ) மேய்ப்புப் பணி ஓய்வு. (இ) மேய்ப்புப் பணி பரிவு.

 

(அ) மேய்ப்புப் பணி அறிவிக்கை (Pastoral reporting)

 

பணிக்குச் சென்ற திருத்தூதர்கள் திரும்பி வந்து ‘தாங்கள் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும்’ இயேசுவிடம் அறிவிக்கிறார்கள். குழுவேலையில் இது முதன்மையான ஒன்று. யார் நம்மை அனுப்புகிறாரோ, அவரிடம் திரும்பிச் சென்று பணி முடிந்துவிட்டது அல்லது பணி பற்றிய செயல்நிலையை அறிவிப்பது. பணி முடிந்துவிட்டது என அனுப்பியவர் உணர்ந்துகொள்வதற்கும், அதைத் திறனாய்வு செய்து மேம்படுத்துவதற்கும், அனுப்பியவருக்கும் அனுப்பப்படுபவருக்கும் உள்ள உறவை மேம்படுத்திக்கொள்வதற்கும் இந்த அறிவிக்கை பயன்படுகிறது. மேலும், புறப்படுகிற அனைவருமே வீடு திரும்ப வேண்டும் என்னும் வாழ்க்கைப் பாடத்தையும் இது கற்பிக்கிறது.

 

நம் முதல் கேள்வி, ஒவ்வொரு நாள் விடியலின்போதும் கடவுள் நம்மைப் பணிக்கு அனுப்புகிறார். நம் குடும்பத்தில், சமூகத்தில், குழுமத்தில், பணித்தளத்தில் நாம் இயங்குமாறு நம்மை அனுப்புகிறார். நாம் ஒவ்வொரு மாலையிலும் அவரிடம் திரும்பிச் சென்று அறிவிக்கை செய்கிறோமா? அவரின் காலடிகளில் அமர்ந்து, ‘ஆண்டவரே, இதுதான் நான் செய்தேன்! இதைத்தான் நான் பேசினேன்! இவர்களையெல்லாம் நான் சந்தித்தேன்!’ என அவரிடம் பேசுகிறோமா? அப்படிப் பேசும்போது நாமும் அமைதி பெறுகிறோம். நம் பணியையும் உறவையும் கடவுளின் திருமுன்னிலையில் திறனாய்வு செய்து நம் ஆற்றலை கூர்மைப்படுத்திக்கொள்கிறோம்.

 

(ஆ) மேய்ப்ப்புப் பணி ஓய்வு (Pastoral rest)

 

பணியின் நிறைவால் மகிழ்ந்திருக்கிற இயேசு, அவர்களின் பாதையைச் சற்றே திருப்பி ஓய்வுக்கு அனுப்புகிறார்: ‘நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்!’ தொடர்ந்து மாற்கு எழுதுகிறார்: ‘பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.’ அருள்பணி நிலையில் நான் இச்சொற்களைப் பார்க்கும்போது, சில நேரங்களில் ‘உண்பதற்குக் கூட நேரம் இல்லாத நிலை’ இருக்கிறது. பொதுநிலை வாழ்வில் இருப்பவர்களும் இதே அனுபவம் பெற்றிருப்பார்கள். இயேசு ஓய்வுக்குச் சீடர்களை அனுப்புகிறார்.

 

ஓய்வு என்றால் என்ன? ‘ஓய்வு’ என்றால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நேர அளவு எனச் சொல்லலாம். ஆனால், அதையும் தாண்டி, ‘ஓய்வு’ என்பது ‘நான் இல்லாமலும் இந்த உலகம் இயங்கும். நான் இன்றியமையாதவன் அல்ல’ என்ற தாழ்ச்சி உணர்வு பெறுவதற்கும் உதவுகிறது. சீடர்கள் பணிவாழ்வில் பல நபர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் வருவதும் போவதுமாக இருக்க இவர்களுக்கு மகிழ்ச்சி. ‘என்னைத் தேடி நிறையப் பேர் வருகிறார்கள்! என்னை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள்! நான் அவர்களுக்காக இருக்கிறேன்!’ என்னும் ‘புகழ் சோதனை’ அவர்களைச் சூழ்கிறது.

 

இந்தச் சோதனைக்குள் விழுந்தால் என்ன ஆகும்? மற்றவர்களுக்கு நாம் நேரத்தைக் கொடுத்துக்கொண்டே நம் முதன்மைகளை மறந்துவிடுவோம். அவர்கள் தங்களுக்குரியதைப் பெற்றுச் சென்றுவிடுவார்கள். ஆனால், நமக்கென உள்ள ஆற்றலும் நேரமும் உடல்நலமும் பறிபோய்விடும். இச்சோதனையில் நாம் விழவே கூடாது! ‘நான் இல்லாமலும் இந்த உலகம் இயங்கும்!’ என்ற கற்றலை நான் பெற வேண்டுமெனில், என்னையே கட்டாயப்படுத்தி நான் ஓய்ந்திருக்க வேண்டும்.

 

இரண்டாவது கேள்வி: நாம் பணிக்கும் பயணத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போல நம் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? பணிகளுக்காக நாம் முதலில் தியாகம் செய்வது நம் ஓய்வையே. ஓய்வுதான் முதன்மையான உடற்பயிற்சி என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். இன்றைய பரபரப்பான உலகம் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், வளங்களைப் பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டும், நிறைய நபர்களைத் தெரிந்திருக்க வேண்டும் என நம்மை விரட்டிக்கொண்டே இருக்கிறது. நாமும் தொடர்ந்து ஓடுகிறோம்! இன்ஸ்டாகிராமில் காணொலி பார்க்கும்போது கூட, ‘இன்னொன்று! இன்னொன்று!’ எனப் பார்த்துப் பார்த்து நம் உணர்வுகளுக்கு விருந்தளிக்க விரும்புகிறோம். ஆனால் விளைவு என்ன? சோர்ந்து போகிறோம், பசித்திருக்கிறோம், தனித்திருக்கிறோம்! ‘ஓய்வு’ கடவுளின் மேலான கொடை. ஆகையால்தான், ‘நான் அளிக்கும் அமைதியின் (ஓய்வின்) நாட்டிற்குள் நுழையவே மாட்டீர்கள்’ (காண். எபி 3:11) எனக் கடிந்துகொள்கிறார் கடவுள். ஓய்வின் மேன்மையை நமக்கு உணர்த்தவே அவர் படைப்பின் இறுதியில் ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார். ‘அமைதிக்காகவே (ஓய்வுக்காகவே) படைக்கப்பட்ட எம் இதயங்கள் உம்மில் அமைதி (ஓய்வு) காணும்வரை அமைதியின்றி (ஓய்வின்றி) இருக்கின்றன’ என அறிக்கையிடுகிறார் புனித அகுஸ்தினார். ஓய்வின் வழியாக நாம் நம்மையே புதுப்பிக்கிறோம்.

 

(இ) மேய்ப்புப்பணி முதன்மை (Pastoral priority)

 

இயேசுவும் அவருடைய சீடர்களும் படகேறித் தனிமையான ஓரிடத்திற்குச் செல்கிறார்கள். அவர்கள் செல்வதை மக்கள் கண்டு அவர்களுக்கு முன்னால் நடந்து சென்று இடத்தை அடைகிறார்கள். அவர்களுடைய ‘திக்கற்ற’ நிலை கண்டு அவர்கள்மேல் பரிவுகொள்கிறார் இயேசு. ‘அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மேல் பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்’ எனப் பதிவு செய்கிறார் மாற்கு. ஓய்வுக்கென இயேசு சென்றாலும், சூழல் கண்டு தன் மேய்ப்புப்பணி முதன்மையை மாற்றுகிறார். மக்கள்மேல் பரிவுகொள்வதே இயேசுவின் முதன்மையாக இருக்கிறது. நாம் அல்ல, நம் சூழலே நம் பணியின் போக்கை நிர்ணயிக்கிறது எனக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.

 

மூன்றாவது கேள்வி: நம் வாழ்வின் முதன்மையாக அக்கறையும் பரிவும் இருத்தல் வேண்டும். ‘நான் இவர்களுக்கு இதைச் செய்யாவிட்டால் இவர்களுக்கு என்ன ஆகும்?’ எனக் கேட்பதே பரிவு. அந்தப் பரிவு உடனடியான செயல்பாட்டுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. நல்ல சமாரியன் (காண். லூக் 10) பரிவு என்னும் உணர்வால் உந்தப்பட்டே செயல்படுகிறார். தந்தை இளைய மகன்மேல் கொண்ட பரிவினால் ஓடிச் செல்கிறார் (காண். லூக் 15). நம் குடும்ப உறவிலும் பணி வாழ்விலும் ‘பரிவு’ மிகவும் அடிப்படையானது. நீதியின் அடிப்படையில் அல்ல, மாறாக, பரிவின் அடிப்படையில் நாம் செயல்படும்போதே உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள நம்மால் இயலும்.

 

மேய்ப்புப் பணி முதன்மையில் தலைவர்கள் தவறுவதை – ‘வேலியே பயிரை மேய்ந்ததுபோல‘ – இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ‘என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!’ என்னும் எச்சரிக்கையோடு தொடங்குகிறது எரேமியாவின் இறைவாக்கு. யூதா நாட்டினர் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்படுமாறு அவர்களைச் சிலைவழிபாட்டுக்குத் தூண்டியவர்கள் அரசர்களே. ஆயர்நிலையில் இருந்த அரசர்களும், போலி இறைவாக்கினர்களும், குருக்களும் மக்களைக் கடவுளின் உடன்படிக்கையிலிருந்து திருப்புகிறார்கள். அவர்களைக் கடிந்துகொள்கிற கடவுள், ‘தாவீதுக்கு ஒரு நீதியுள்ள தளிர் தோன்றச் செய்வேன் … ஆண்டவரே நமது நீதி!’ என வாக்குறுதி தருகிறார். தாவீது அரசரின் வழிமரபில் வருகிற இயேசுவே நீதியுள்ள தளிர் என்பது நம்முடைய கிறிஸ்தவப் புரிதலாக இருக்கிறது.

 

இன்றைய இரண்டாம் வாசகத்தின் இரண்டு கருத்துகள் நற்செய்தி வாசகத்தோடு நன்றாகப் பொருந்துகிறது: (அ) ‘பகைமை என்னும் சுவரை இயேசு உடைத்தார்’ – மக்களுக்கும் தமக்கும் உள்ள இடைவெளி என்னும் சுவரை பரிவு வழியாகத் தகர்த்தெறிகிறார். (ஆ) ‘ஓய்வை’ (அமைதியை) நற்செய்தியாக அறிவிக்கிறார்.

 

பதிலுரைப்பாடலில், ஆண்டவரைத் தன் ஆயர் என அழைத்து மகிழ்கிற தாவீது, ‘உம் அருள்நலமும் (நன்மைத்தனமும்) பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்’ எனப் பாடுகிறார் (காண். திபா 23). ஆண்டவராகிய கடவுளை நம் தலைவர் (ஆயர்) எனக் கொண்டாடும் நாம், அவரிடம் அறிவிக்கை செய்வோம். அவர் தருகிற ஓய்வைக் கண்டடைவோம். பரிவு என்பதை நம் முதன்மையாகவும் கொள்வோம். இவ்வாறாக, பரிவுநிறை தலைமையை அவரிடம் கற்றுக்கொண்டு, அதையே நம் குடும்பத்திலும் குழுமத்திலும் வாழ்வாக்க முயற்சி செய்வோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: