இன்றைய இறைமொழி
ஞாயிறு, 23 ஜூன் 2024
ஆண்டின் பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறு
யோபு 38:1, 8-11. 2 கொரிந்தியர் 5:14-17. மாற்கு 4:35-41
அலைகளும் ஆண்டவரும்!
அன்று மாலை ஆல்பர்ட் தனியாகக் கடலுக்குச் சென்றான். இவனுடைய படகிலிருந்து வெகு தூரத்தில் சில படகுகள் நிற்பதைக் கண்டான். தூரத்தில் ஆள்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் இன்னும் கொஞ்ச தூரம் சென்றான். சற்று நேரத்தில் இருட்டத் தொடங்கியது. தூரத்தில் தெரிந்த படகுகள் கண்களிலிருந்து மறைந்தன. கரையும் எட்டாமல் தெரிந்தது. திடீரென்று காற்று வீசத் தொடங்கி அலைகள் பொங்கி எழுந்தன. மழைச்சாரலும் விழுந்தது. உள்ளுக்குள் சற்றே பயம் தொற்றிக்கொண்டது. தன் வீட்டில் சண்டை போட்டுவிட்டு கடலுக்குள் வந்துவிட்டான். தன் கோபத்தை தானே கடிந்துகொண்டான். எப்படியாவது வீடு திரும்ப வேண்டும் என்னும் ஆசை அவனுள் இருந்தது. சிறிய வயதில் தன் பாட்டி சொன்ன கதை அவனுக்கு நினைவில் வந்தது. இயேசு கலிலேயக் கடலில் ஏற்பட்ட புயலை அடக்கிய கதையைச் சொன்ன பாட்டி, ‘ஆண்டவர் நம் படகில் இருந்தால் அலைகள் ஓய்ந்துபோகும்!’ என்று பாடம் சொன்னாள். கண்களை மூடி ஒரு நிமிடம் செபித்தான் ஆல்பர்ட். ‘ஆண்டவரே! என் படகுக்குள் வாரும்!’ என்றான். கண்களைத் திறந்த சற்று நிமிடங்களில் தூரத்தில் ‘லைட் ஹவுஸ்’ தெரிந்தது. திசை தெரிந்துவிட்ட மகிழ்ச்சியில் கரை நோக்கிக் கடந்தான். அலைகள் மெதுவாக ஓயத் தொடங்கின. அவனுடைய இதயத்தின் கோப அலைகளும் ஓய்ந்தன.
நிற்க.
இயேசு காற்றையும் கடலையும் கடிந்துகொள்ளும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். மாற்கு நற்செய்தியின் பாடச் சூழலில் நற்செய்தி வாசகத்தைப் பார்க்கும்போது, உவமைகள் பகுதி முடிந்து இங்கே வல்ல செயல்கள் (அறிகுறிகள் அல்லது புதுமைகள்) பகுதி தொடங்குகிறது. வல்ல செயல் அடிப்படையில் இது ‘இயற்கை வல்லசெயல்’ வகையைச் சார்ந்தது (மற்ற வகைகள், பேய் ஓட்டுதல், நோய் நீக்குதல் ஆகும்). இயேசு இயற்கையின்மேல் ஆற்றல் கொண்டவராக இருந்தார் என்பதை இந்த வல்ல செயல் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இப்பகுதியை உவமை என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, இந்நிகழ்வில் இயேசு தலையணை வைத்துத் தூங்குகிறார். ‘தூக்கம்’ என்பது ‘இறப்பு’ அல்லது ‘இல்லாமையை’ குறிக்கிறது. இயேசுவின் இறப்பு அல்லது விண்ணேற்றத்துக்குப் பின்னர் மாற்குவின் குழுமத்தார் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைபைப் பயணம் (படகுப் பயணம்) இனிதாக இல்லை. ஒரு பக்கம் அலைகள்போல வெளியிலிருந்து துன்பங்கள் வந்தாலும், இன்னொரு பக்கம் ‘கடவுளின் இல்லாமையை’ அவர்கள் உணர்கிறார்கள். கடவுள் தங்களைவிட்டு நீங்கிவிட்டார் என்னும் சோர்வில் இருந்த மக்களுக்கு இந்நிகழ்வு வழியாக, ஊக்கம் தருகிறார் மாற்கு. அதாவது, இயேசு நம்மைவிட்டு நீங்கிவிட்டாலும் (தூங்கிவிட்டாலும்) நம்மேல் அக்கறை கொண்டவராக இருக்கிறார். அவருடைய உடனிருப்பில் நாம் எவ்வித துன்பத்தையும் எதிர்கொள்ள முடியும்.
நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில், ‘அக்கரைக்குச் செல்கிறோம்’ என்கிறார் இயேசு. அக்கறையோடு அவர் அக்கரைக்கு அவர்களை நடத்திச் செல்கிறார். வாழ்வின் நிகழ்வுகளில் நாம் உறைந்துபோகும்போது நம்மை ‘அக்கரைக்குச் செல்கிறோம்’ என அழைக்கிறார் இயேசு. நாம் அடிக்கடி எழுந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும்.
அந்த நேரத்தில் புயல் அடிக்கின்றது. கெனசரேத்து ஏரி என அழைக்கப்படும் கலிலேயக் கடல் உண்மையில் ஓர் ஏரி. சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதாலும், கடல்மட்டத்திற்குக் கீழே இருப்பதாலும் பெருங்காற்று வீசும்போது இந்நீர்த்தேக்கத்தில் ஏறக்குறைய 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதுண்டு. இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தொழில் செய்தவர்கள், அல்லது இக்கடலைச் சுற்றி வாழ்ந்தவர்கள். ஆக, அவர்கள் அலைகளை அடிக்கடி எதிர்கொண்டதுண்டு. இந்த நிகழ்வில், பெரும் புயல் அடித்தது எனச் சொல்கின்ற மாற்கு, அங்கு நிலவிய இரண்டு சூழல்களை நம்முன் கொண்டு வருகின்றார்: ஒன்று, அமைதியான சூழல். அந்தச் சூழலில் இயேசு படகில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அதற்கு எதிர்மாறான சூழல் இரண்டாவது. பரபரப்பான சூழல். அங்கே சீடர்கள் பரபரப்பாக, பயந்து போய் இருக்கின்றனர். ‘போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?’ எனக் கேட்கின்றனர். இவர்கள் இயேசுவை வெறும் போதகராக (ரபி) பார்க்கின்றனர். மேலும், தங்கள் கவலையில் இயேசுவையும் இணைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர். இயேசுவையும் பரபரப்புக்கு உள்ளாக்குகிறார்கள்.
இயேசு எழுந்து கடலைக் கடிந்துகொள்கின்றார். ‘இரையாதே! அமைதியாயிரு!’ என்பது பேயோட்டுவதற்கான வாய்ப்பாடு. அதே வார்த்தைகளைச் சொல்லி இயேசு கடலை அமைதியாக்குகின்றார். ஏனெனில், யூத மக்களைப் பொருத்தவரையில் கடல் என்பது பேய்கள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. தொடர்ந்து தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு: ‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’ இவ்வார்த்தைகள் வழியாக அவர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. அதாவது, இயேசு தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு இறப்பு இல்லை என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர். இதுதான் அவர்களின் நம்பிக்கைக் குறைவான நிலை. இந்தக் கேள்விகள் சீடர்களைப் பார்த்து மட்டும் கேட்கப்படவில்லை. இந்நிகழ்வை வாசிக்கும் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கப்படுகின்றன. இவ்விரண்டு வினாக்களுக்கும் நானும் நீங்களும் தனித்தனியாக விடை அளிக்க வேண்டும். நாம் அளிக்கும் விடையைப் பொருத்தே, ‘படகில் தூங்குபவரும் காற்றைக் கடிந்துகொள்பவரும் யார்?’ என்ற வினாவுக்கான விடை அமையும்.
இங்கே இயேசுவின் அக்கறையைக் காண்கிறோம். முதலில் அமைதி ஏற்படுத்துகிறார். பின் சீடர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். முதலில் துன்பம் களைகிறார்.
முதல் வாசகத்தில், யோபுவுக்கு ஆண்டவராகிய கடவுள் சூறாவளியினின்று அருளிய பதிலின் ஒரு பகுதியை வாசிக்கின்றோம். ‘நேர்மையாளர் துன்புறுவது ஏன்?’ என்ற கேள்வியைக் கேட்டு விடையைத் தேடுகிறது யோபு நூல். நேர்மையாளர் துன்புறுதலுக்கான விடையை யோபுவின் மூன்று நண்பர்கள் பாரம்பரிய இறையியலைக் கொண்டு தர முயற்சி செய்கின்றனர். அவர்களின் விடை யோபுவுக்கு ஏற்புடையதாக இல்லை. சூறாவளியில் தோன்றுகின்ற ஆண்டவர் யோபுவின் கேள்விக்கு விடையளிக்காமல் சுற்றி வளைத்து நிறையக் கேள்விகளைத் தொடுக்கின்றார். தாமே அனைத்துக்கும் ஆண்டவர் என்றும், வாழ்வின் மறைபொருள் அனைத்தவர் தாம் மட்டுமே என்றும் யோபுவை உணரச் செய்கின்றார். விளைவு, யோபு சரணடைகின்றார். கடல்மேல் ஆண்டவராகிய கடவுள் கொண்டிருக்கின்ற ஆற்றலை இவ்வாசகப் பகுதியில் காண்கின்றோம்.
யோபுவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. அவர் தனக்குரியது அனைத்தையும் அனைவரையும் இழந்து இறந்தவர் போல, அல்லது இறப்புக்குத் துயரப்படுவது போல சாம்பலில் அமர்ந்திருக்கின்றார். பிரபஞ்சத்திற்கும் தனக்குமான நெருக்கம் உடைக்கப்பட்டது போல உணர்ந்த அந்த நேரத்திலும் இறைவனின் உடனிருப்பைக் காண்கின்றார் யோபு.
ஆண்டவராகிய கடவுள்தாமே அலைகளை, ‘இதற்குமேல் வராதே!’ என்று வரையறுத்தவர். அப்படி எனில், இயற்கை கடவுளுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், தன் திருத்தூதுப் பணியின் உண்மைத் தன்மை பற்றி கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், ‘கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது’ என்கிறார். படகில் அலைகளால் அச்சுறுத்தப்பட்ட சீடர்களை கிறிஸ்துவின் பேரன்பே ஆட்கொள்கிறது. இவ்வாறாக, ‘பழையன கழிந்து புதியன வருகிறது’ – அலைகள் ஓய்ந்து அமைதி பிறக்கிறது.
வாழ்க்கைப் பாடங்கள் எவை?
(அ) அலைகளும் ஆண்டவரும் நம் வாழ்வின் எதார்த்தங்கள். நமக்கு முன்னால் அலைகளும் நமக்குப் பின்னால் ஆண்டவரும் என்றுதான் வாழ்வின் நிகழ்வுகள் நகர்கின்றன. பல நேரங்களில் நம் பார்வை நமக்கு முன்னால் இருக்கிற அலைகள்மேல்தாம் இருக்கிறதே தவிர, நமக்குப் பின்னால் தூங்குகிற ஆண்டவர்மேல் இல்லை. சற்றே நம் உள்ளங்களைத் திருப்பினால் போதும்! அவர் நம் படகின் தலைவராகிவிடுவார். ‘உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!’ என அவரே அலைகளுக்கும் நம் துன்பங்களுக்கும் கட்டளையிடுகிறார்.
(ஆ) சீடர்கள் தங்களுடைய அச்சத்தால், ‘போதகரே, நாங்கள் சாகப்போகிறோமே!’ எனக் கூக்குரல் எழுப்புகிறார்கள். நம் குரல் சற்றே வித்தியாசமாக இருக்கட்டும்: ‘ஆண்டவரே, நாங்கள் வாழப்போகிறோமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ கடவுளின் உடனிருப்பில் இறப்புக்கு இடமில்லை.
(இ) கிறிஸ்துவின் பேரன்பு நம்மை எப்போதும் ஆட்கொள்ளட்டும். நம் உறவுநிலைகளில் நாம் எவ்விதமான எதிர்மறையான அனுபவம் பெற்றாலும் – தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், தனித்துவிடப்பட்டாலும், தனிமையில் இருந்தாலும் – அவருடைய அன்பின்கீழ் நம்மையே தாழ்த்திக்கொள்வோம். அவர் நம்மை உயர்த்துவார்.
திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, ‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு … புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார். கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன’ (திபா 107) என்று பாடுவோம்.
அக்கரையை நோக்கிய நம் பயணத்தில் ஆண்டவர் நம்மோடு!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: