இன்றைய இறைமொழி
ஞாயிறு, 24 மார்ச் 2024
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
மாற்கு 11:1-10 (பவனியில்).
எசாயா 50:4-7. பிலிப்பியர் 2:6-11. மாற்கு 14:1-15:47 (திருப்பலியில்)
மூன்று பயணங்கள்!
இன்று பவனியில் நாம் வாசிக்கும் நற்செய்தி வாசகம், ‘எருசலேமை நெருங்கியபோது’ என்று தொடங்குகிறது. ஆண்டவர் இயேசுவுடன் இணைந்து நாமும் இன்று எருசலேமை நெருங்கி நிற்கிறோம். எருசலேம் என்பது இயேசுவைப் பொருத்தவரையில் இறுதி அல்ல, மாறாக, புதிய தொடக்கம். இங்கிருந்துதான் இயேசு மாட்சியுடன் உயிர்த்தெழுந்தார், இங்கிருந்தே தம் சீடர்களைப் பணிக்கு அனுப்பினார், இங்கேதான் புதிய இஸ்ரயேல் என்னும் திருஅவை தொடங்கியது.
இன்று நாம் வாசிக்கக் கேட்ட வாசகங்களை இணைத்துப் பார்க்கும்போது, இயேசு மேற்கொண்ட மூன்று பயணங்களை அவை முன்மொழிகின்றன:
(அ) எருசலேம் நோக்கிய பயணம்
(ஆ) கொல்கொதா (கல்வாரி) நோக்கிய பயணம்
(இ) விண்ணகம் நோக்கிய பயணம்
இயேசுவின் மேற்காணும் மூன்று பயணங்களோடு நம் வாழ்க்கைப் பயணத்தையும் இணைத்து சிந்திப்போம்.
(அ) எருசலேம் நோக்கிய பயணம் – ‘ஓசன்னா!’
இந்தப் பயணத்தை இயேசுவே தொடங்குகிறார். தாம் பயணம் செய்ய வேண்டிய வாகனத்தை – கழுதைக்குட்டியை – தாமே தேர்ந்தெடுக்கிறார். ‘இது ஆண்டவருக்குத் தேவை’ என்று சொல்லப்பட்டு, கழுதை கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து, சீடர்கள் தங்கள் மேலாடைகளை கழுதையின்மேல் விரிக்கிறார்கள், மற்றவர்கள் இலைதழைகளை வெட்டி வழியில் பரப்புகிறார்கள். இயேசு-சீடர்கள்-மக்கள் என அடுத்தடுத்து செயல்களில் ஈடுபடுகிறார்கள். கழுதையில் பவனி என்பது இங்கே கவனிக்க வேண்டியது. இயேசுவின் சீடர்கள் தங்களுடைய ஆண்டவர் ஓர் அரச மெசியாகவாக வந்து உரோமை வெற்றிகொள்வார் என்று அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தாம் தேர்ந்துகொள்ளும் கழுதைக்குட்டி அடையாளம் வழியாக அவர்களுக்குக் கற்பிக்க விரும்புகிற இயேசு, தம் ஆட்சி ஆன்மிகம் சார்ந்தது என்றும், அமைதியை விரும்புவது என்றும் கூறுகிறார்.
மக்கள், ‘ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!’ என்று அக்களிக்கிறார்கள். ‘ஓசன்னா’ என்றால் ‘எங்களை மீட்டருளும்! எங்களைக் காப்பாற்றியருள்க!’ என்று பொருள். உரோமையின் அடிமைத்தளையிலிருந்த இயேசுவின் சமகாலத்து மக்கள், இயேசுவே தங்களைக் காப்பாற்ற வந்த அரசர் என நினைத்து, ‘ஓசன்னா’ முழக்கம் எழுப்புகிறார்கள். வாடகைக் கழுதையில் வந்த இறுதி நம்பிக்கையாக இயேசுவை அவர்கள் வரவேற்றார்கள். உரோமை அரசை வீழ்த்துகிற இயேசு தாவீதின் அரசை நிலைநாட்டுவார் என்பது அவர்களுடைய எதிர்நோக்கு.
இந்தப் பவனியில் நாமும் ஒருவராக அன்று நின்றிருந்தால் நாமும் இதே நம்பிக்கையையும், எதிர்நோக்கையுமே கொண்டிருப்போம்.
எளிமை, அமைதி, நம்பிக்கை, எதிர்நோக்கு ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது இயேசுவின் முதல் பயணம். இந்தப் பவனியில் இயேசுவை எருசலேமுக்குள் அழைத்து வருபவர்கள் மக்கள். அவர்கள் எழுப்புகிற வாழ்த்தொலி, ‘ஓசன்னா!’
(ஆ) கொல்கொதா (கல்வாரி) நோக்கிய பயணம் – ‘சிலுவையில் அறையும்!’
மாற்கு நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் பாடுகள் வரலாற்றை வாசிக்கக் கேட்டோம். இந்தப் பயணத்தையும் இயேசுவே தொடங்குகிறார். கழுதைக்குட்டியை அவிழ்க்குமாறு தம் சீடர்களை முன்னர் அனுப்பிய இயேசு, பாஸ்கா உணவை உண்ணுவதற்கான இடத்தை ஏற்பாடு செய்வதற்காக அவர்களை அனுப்புகிறார். கழுதைக்குட்டி, இல்லம், அவற்றின் உரிமையாளர்கள் என அனைவர்மேலும் இயேசு ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். கொல்கொதா நோக்கிய பயணம் பல பயணங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது: கெத்சமனி நோக்கி, தலைமைச்சங்கம் நோக்கி, பிலாத்து நோக்கி.
பவனியில் கழுதைக்குட்டியின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்ட சீடர்கள் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறார்கள், மறுதலிக்கிறார்கள், அவரை விட்டுத் தப்பி ஓடுகிறார்கள். ‘ஓசன்னா!’ என்று தங்களுடைய எதிர்நோக்கைத் தெரிவித்த மக்கள், அவநம்பிக்கை மற்றும் வெறுப்பின் உச்சத்தில், ‘சிலுவையில் அறையும்’ எனக் கத்துகிறார்கள். இவர்களுடைய செயல்கள் மாற்றத்துக்குக் காரணம் இவர்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டதே. இயேசுவை ஓர் அரசியல் மெசியாவாகக் கருதினார்கள். அவருடைய தளம் ஆன்மிகம் சார்ந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவைக் கொன்றாகிவிட்டது என மகிழ்ச்சி அடைகிறார்கள். பிலாத்துவோ இந்தக் கலவரத்தை அடக்கியாயிற்று என்று நினைத்து பெருமிதம் கொள்கிறார். தலைமைக்குருக்கள் பொறாமையால்தான் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார்கள் என நினைத்தாலும், விழாக்காலத்தில் எருசலேமின் அமைதியே அவருடைய முதன்மையான தேவையாக இருந்தது. இறுதியில், சிலுவைக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், ‘இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்!’ எனச் சான்று பகர்கிறார்.
தனிமை, பகைமை, வெறுப்பு, பொறாமை, பிடிவாதம் ஆகிய எதிர்மறை உணர்வுகள் நிறைந்ததாக இந்தப் பயணம் இருந்தாலும், பயணத்தின் தொடக்கத்தில் இளவல் ஒருவர் இயேசுவின் தலைமேல் எண்ணெய்பூசி வெளிப்படுத்தும் அன்பும், நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கையும் நேர்முகமான உணர்வுகளை எழுப்புகின்றன. இந்தப் பயணத்தில் மக்கள் எழுப்புகிற வாழ்த்தொலி, ‘ஓசன்னா!’
(இ) விண்ணகம் நோக்கிய பயணம் – ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’
எருசலேம் நோக்கிய பவனி, கொல்கொதா நோக்கிய பயணம் என்னும் நம் பார்வையைச் சற்றே அகலமாக்கி, இப்பயணங்கள் இயேசுவின் நீண்ட பயணத்தின் சில பகுதிகளே என மொழிகிறது இன்றைய இரண்டாம் வாசகம். மனத்தாழ்மை, ஒற்றுமை, துன்பத்தின் வழியாகவே வெற்றி என்னும் அறிவுரையை பிலிப்பி நகரத் திருஅவைக்கு வழங்குகிற பவுல், ஒரு கிறிஸ்தியல் பாடல் வழியாக இயேசுவை அவற்றின் முன்மாதிரியாக மொழிகிறார். கடவுள் வடிவை விடுத்து, தம்மையே வெறுமையாக்கி, மனித உரு ஏற்கிற இயேசு, சாவை ஏற்கும் அளவுக்கு, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குத் தம்மையே தாழ்த்துகிறார். கடவுளோ அவரை உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அளிக்கிறார். பவுல் இங்கே மொழிகிற முதன்மையான அடையாளம் சிலுவை.
மண்ணகம் நோக்கி வந்த இயேசு விண்ணகம் ஏறிச் செல்கிறார். சிலுவையில் இறந்த அவர் உயிர்த்தெழுகிறார். இந்தப் பயணத்தை வழிநடத்துபவர் கடவுளே. இந்தப் பயணத்தின் இறுதியில் மக்கள் எழுப்புகிற வாழ்த்தொலி அல்லது அறிக்கை, ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என்பதாகும்.
திருப்பாடுகளின் வாரத்திற்குள் நுழைகிற நாம் மேற்காணும் மூன்று பயணங்களையும் மனத்தில் இருத்துவோம். கழுதைக்குட்டியில் அரசர்போலப் பயணம் செய்கிற இயேசு, சிலுவை என்ற அரியணையில் அமர்கிறார். இது முரண் அல்ல, மாறாக, இரு பக்கங்கள்.
தவக்காலத்தின் முத்தாய்ப்பாக இருக்கிற இந்த வாரத்தில், இயேசுவின் பயணங்களோடு நம் வாழ்க்கைப் பயணத்தையும் இணைத்துக்கொள்வோம். நம்பிக்கை, எதிர்நோக்கு என நேர்முகமாக பயணம் அமைந்தாலும், சில நேரங்களில் தனிமை, பகைமை, காட்டிக்கொடுக்கப்படுதல், மறுதலிக்கப்படுதல், இறப்பு, சோகம், இழப்பு ஆகியவை நம் வாழ்க்கை அனுபவங்களாகவும் இருக்கின்றன. இறுதியில், வெற்றி என்பது உறுதியாக உள்ளது.
(அ) ‘ஆண்டவர் என் துணையாக உள்ளார்’
முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கு நூலிலிருந்து, துன்புறும் ஊழியனின் மூன்றாவது பாடலை வாசிக்கக் கேட்டோம். இஸ்ரயேல் மக்களை உருவகிக்கிற இந்தப் பணியாளர் நிராகரிப்பையும் வன்முறையையும் துன்பத்தையும் அவமானத்தையும் எதிர்கொண்டாலும் இறுதியில், ‘ஆண்டவர் என் துணையாக உள்ளார்’ எனக் கண்டுகொள்கிறார். தம் தனிமையிலும் தந்தையின் உடனிருப்பை உணர்ந்தார் இயேசு. இறைவனின் உடனிருப்பை நாம் கண்டுணர்வதற்கான வாரமாக இந்த வாரம் அமையட்டும்.
(ஆ) சிலுவை
இன்று நாம் ஏந்துகிற குருத்து சிலுவை மரமாக மாறுகிறது. குருத்தின் மென்மை மறைந்து சிலுவையின் வன்மை இயேசுவைத் தழுவிக்கொள்கிறது. மென்மையும் வன்மையும் மாறி மாறி வரும் நம் வாழ்வில் சிலுவையைப் பற்றிக்கொள்வோம். சிலுவையின் அவமானத்தை தம் உயிர்ப்பின் வழியாக மாட்சியாக உயர்த்துகிறார் இயேசு. துன்பங்களின் வழியாக மீட்பு அல்லது வெற்றி என்பதை உணர்ந்தவர்களாக, சின்னஞ்சிறு துன்பங்கள் வழியாகவே நம் வாழ்க்கை நகர்கிறது என்பதை ஏற்றுக்கொள்வோம்.
(இ) மனமாற்றம்
உயிர்ப்புக்கான தயாரிப்பாக, நம் தாய்த் திருஅவை ஒப்புரவு அருளடையாளம் செய்ய நம்மை அழைக்கிறது. நம் பாவங்களுக்காக ஒட்டுமொத்தமாக இயேசு இறந்தார் எனில், தனிப்பட்ட பாவங்கள் நம்மில் இறக்க வேண்டுமெனில், நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும். நாம் தொடர்ந்து செய்கிற பாவங்கள் நாம் மேற்கொள்கிற தெரிவுகள் என்பதை மனத்தில் இருத்துவோம். இறைவனின் மன்னிப்பை உணர்ந்தவர்களாக ஒருவர் மற்றவருடன் ஒப்புரவாகுவோம்.
புனித வாரத்திற்குள் நுழைவோம் சிலுவையோடு!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: