• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 30 ஜூன் 2024. நம்பிக்கையை மட்டும் விடாதீர்!

Sunday, June 30, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 30 ஜூன் 2024
ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு
சாலமோனின் ஞானம் 1:13-15, 2:23-24. 2 கொரிந்தியர் 8:7, 9, 13-15. மாற்கு 5:21-43

 

நம்பிக்கையை மட்டும் விடாதீர்!

 

சிறிய கிராமம் ஒன்றில் எலியாஸ் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் மிரியம் திடீரென நோய்வாய்ப்பட்டாள். அவளுக்கு மருத்துவம் பார்க்க வந்த கிராமத்து மருத்துவர், ‘இவள் பிழைக்கமாட்டாள்! இந்த நோய்க்கு மருந்து கிடையாது!’ எனச் சொல்லிவிடுகிறார். இதற்கிடையில் பக்கத்து ஊரில் உள்ள துறவி ஒருவரைப் பற்றி அவருக்குச் சொல்லப்படுகிறது. ‘அவர் தொட்டால் போதும்! எல்லாம் சரியாகிவிடும்!’ எனச் சொல்லக் கேட்ட எலியாஸ் அவரை அழைத்துவருமாறு புறப்படுகிறார். ‘உடனே வருகிறேன்!’ என்று சொன்ன துறவி எலியாஸூடன் புறப்படுகிறார். எலியாஸூக்கு மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு நலம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை கொஞ்சம் பிறக்கிறது. பாதி வழியில் கூட்டம். கூட்டத்தின் நடுவில் வந்த பெண் துறவியின் ஆடை தொட்டு அவளுடைய நீண்டகால நோய் நீங்கப் பெற்றாள். துறவியின் ஆற்றல் கண்டு வியந்தாலும், தாமதம் குறித்து எலியாஸ் உள்ளுக்குள் கலங்குகிறார். ‘மிரியம் இறந்துவிட்டால் என்ன செய்வது?’ என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே வருகிற இல்லத்துப் பணியாளர்கள், ‘மிரியம் இறந்துவிட்டாள். உடனே வாரும்!’ என அழைக்கிறார்கள். பணியாளர்களின் குரலைக் கேட்ட நொடி எலியாஸ் துறவியின் முகம் காண்கிறார். துறவியின் முகமும் எலியாஸை நோக்கித் திரும்புகிறது. ‘நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’ எனச் சொல்கிற துறவி எலியாஸூடன் நடக்கிறார். அவருடைய இல்லத்தில் நுழைந்து சிறுமியின் கரம் பிடித்துத் தூக்குகிறார். தூங்கி எழுபவள்போல கண்களைக் கசக்கிக் கொண்டே எழுகிறாள் இளவல் மிரியம்!

 

நிற்க.

 

‘அஞ்சாதே! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’ என்று இயேசு இன்று நம் ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறார்.

 

இரு நிலைகளில் ‘இறந்தவர்கள்’ எப்படி இயேசுவால் மீண்டும் உயிர் பெற்றார்கள் பெற்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இரத்தப் போக்குடைய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன் நலம் பெறுகின்றார். தொழுகைக் கூடத் தலைவரின் மகள் இயேசு தொட்டவுடன் உயிர் பெறுகின்றார். இரண்டு நிகழ்வுகள் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டது பற்றி நிறையக் கருத்துகள் உள்ளன. இரண்டு நிகழ்வுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. பெண் 12 ஆண்டுகள் நோயினால் வருந்துகிறார். இளவலுக்கு வயது 12. இரத்தம் உயிர் சார்ந்தது. இளவல் உயிர் துறக்கின்றார். இரண்டு இடங்களிலும் கூட்டம் தடையாக இருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும் நம்பிக்கை வலியுறுத்தப்படுகின்றது. இளவல் இறப்பதற்கான தளத்தை பெண் நிகழ்வு ஏற்படுத்திக்கொடுக்கிறது. தொழுகைக்கூடத் தலைவரின் அவசரத்தைக் குறைப்பதற்காக நிகழ்வு நடக்கிறது. கூட்டம், பெண், இயேசுவின் உரையாடல் என அனைத்தும் இளவல் உயிர் பெறுவாரா? என்ற கேள்வியை வாசகரில் எழுப்புகிறது.

 

பாடச் சூழலின் அடிப்படையில் பார்த்தால், மாற்கு நற்செய்தியில் இயேசுவின் வல்ல செயல்கள் பகுதியில் அமைந்துள்ளது இன்றைய பாடம். இயற்கையின்மீதுள்ள ஆற்றல் வெளிப்படுத்தும் வல்ல செயல்கள் இங்கே நிகழ்கின்றன. நீண்ட காலம் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஏறக்குறைய ‘இறந்த’ நிலையில் இருக்கிறார். 12 வயது இளவல் இறக்கிறார். இருவருமே உயிர் பெறுகிறார்கள். இவ்வாறாக, இயற்கைக்கு மீறிய இயேசுவின் ஆற்றல் வெளிப்படுத்தப்படுகிறது. மாற்கு நற்செய்தியில் பெரும்பாலும் ‘கூட்டம்’ என்பது சீடத்துவத்துக்கு தடையாக இருக்கும். இங்கேயும் கூட்டம் இயேசுவின் நடையைத் தாமதப்படுத்துகிறது. இயேசுவின் சொற்களை முன்மொழிந்து கேலி பேசுகிறது. ஒரு பக்கம் மனிதரின் அவசரம். இன்னொரு பக்கம் கடவுளின் தாமதம்.

 

இந்தப் பகுதி மாற்கு நற்செய்தியாளரின் குழுமத்திற்கு என்ன செய்தியைச் சொல்லியிருக்கும்? இயேசுவைத் தொட முடியாது. அவர் மறைந்துவிட்டார். அவருடைய ஆடையின் நுணியை – திருத்தூதர்களை – நம்மால் தொட முடியும். ஆடை நுணியின் வழியாகவும் அவர் செயலாற்றுகிறார். நோய், இறப்பு போன்ற எதிர்மறையான நேரங்களில் நாம் நம்பிக்கையோடு இருந்தாலும் இயேசுவிடமிருந்து நலம் பெற்றுக்கொள்ள முடியும். நாம் ஆன்மிகத் தளத்தில் அவசரம் காட்டினாலும், அவர் தனக்கான நேரத்திலேயே வருகிறார். ஆனால், அவருடைய வருகையும் உடனிருப்பும் நமக்கு நலமும் உயிரும் தருகின்றன.

 

நிகழ்வில் வரும் இந்தப் பெண் மூன்று நிலைகளில் துன்பம் அனுபவிக்கின்றார்: உடல்சார் துன்பம். உயிர் இரத்தத்தில் (மற்றும் உயிர்மூச்சில்) குடியிருப்பதாக நம்பினார்கள் இஸ்ரயேல் மக்கள். இரத்தம் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருக்க, இந்தப் பெண் வெளிறிப் போயிருப்பாள். இரண்டாவது, பொருள்சார் துன்பம். மருத்துவரிடம் தன் பணத்தை எல்லாம் செலவிட்டதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். ஆன்மிகம்சார் துன்பம். உடலில் ஒழுக்கு இருப்பது தீட்டு எனக் கருதப்பட்ட நிலையில் இந்தப் பெண் கடவுளிடமிருந்து தான் அந்நியப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்திருப்பார். உடல் வலி பொறுக்காமல், கையில் காசு இல்லாமல், கடவுளால் கைவிடப்பட்ட உணர்வில், தனக்கிருந்த இறுதி வாய்ப்பாக இயேசுவின் மேலாடையைப் பார்த்தார். தன் இயலாமையில், தன் இல்லாமையில் இயேசுவால் எல்லாம் இயலும் என்றும், அவர் வழியாகவே தன் இருத்தல் சாத்தியம் என்றும் உணர்ந்த அவர் கூட்டத்தை ஊடுருவுகின்றார். கூட்டம் இங்கே ஒரே நேரத்தில் தடையாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. கூட்ட மிகுதியால் இயேசுவை நெருங்க முடியவில்லை. அதே வேளையில் கூட்டம் இருந்ததால் தன் முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்துக்கொள்ளவும் இவரால் முடிந்தது. இயேசுவின் மேலாடையைத் தொட்ட அந்த நொடியில் தன் உடலில் மாற்றத்தை உணர்கின்றார் பெண். என்னே ஒரு ஞானம்! தன் உடலின் இயக்கத்தைத் தெளிவாக உணர்ந்தவராக இருக்கிறார். உடல் நலம் பெற்ற மகிழ்ச்சி சற்று நேரத்தில் களைகிறது. ‘யார் என்னைத் தொட்டது?’ என்ற இயேசுவின் கேள்வி இவளுடைய காதுகளில் விழுகிறது. இவ்வளவு நேரம் தன் உடல் போராட்டத்தை மட்டுமே எதிர்கொண்ட அவள், இப்போது, ‘மக்கள் என்ன நினைப்பார்கள்?’ என்ற உள்ளப் போராட்டம் அனுபவிக்கின்றாள். இருந்தாலும், இயேசுவிடம் சரணடைகின்றார். தனக்கு நடந்தது அனைத்தையும் சொல்கின்றார். ‘மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று’ என அனுப்புகிறார் இயேசு. இப்படிச் சொல்வதன் வழியாக இயேசு அவளை மீண்டும் சமூகத்தின் உறுப்பினர் ஆக்குகின்றார். தூய்மை-தீட்டு என்ற பேதத்தைக் களைகின்றார்.

 

இந்த நிகழ்வின் வழியாக மாற்கு நற்செய்தியாளர் கதையாடலைத் தாமதப்படுத்துகிறார். சிறுமிக்கு என்ன ஆயிற்று என்னும் கேள்வி வாசகருக்கு எழுகிறது. சிறுமி இறந்துவிட்ட செய்தி இப்போது அவளுடைய தந்தைக்கு அறிவிக்கப்படுகிறது. பாதியில் வந்து நலம் பெற்ற பெண் தடையாக இருக்கிறார். ஆனாலும், அந்த நிகழ்வைக் கண்டவுடன் தலைவரின் நம்பிக்கை உறுதியாகியிருக்கும். ஆனால், சற்று நேரத்தில் வந்த மகளின் இறப்புச் செய்தி அவருக்குப் பயம் தருகிறது. ‘அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’ என அவருக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.

 

இந்த நிகழ்வில், நம்பிக்கையில் இவர் நிலைத்து நிற்க கடவுளின் துணை தேவைப்படுகிறது. ஆனால், முதல் நிகழ்வில், நம்பிக்கையால் உந்தப்பட்டு அந்தப் பெண் வருகின்றார். அங்கே, நம்பிக்கை பாராட்டப்படுகிறது. தலைவர் நிகழ்வில் நம்பிக்கை அறிவுறுத்தப்படுகின்றது.

 

நம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் இறப்பையும் இறப்பின் காரணிகளையும் எதிர்கொள்ள முடியும்.

 

இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற சாலமோனின் ஞானநூல், இறப்பு எப்படி வந்தது என்பதற்கான விடையைச் சொல்லும் பகுதியே இன்றைய முதல் வாசகம். கிறிஸ்து பிறப்பதற்கு மிகவும் சில மாதங்களுக்கு முன்பு வடிவம் பெற்ற நூல் இது. கிரேக்கமயமாக்கலின் பின்புலத்தில் எழுதப்பட்ட நூல் மனித இறப்பு பற்றி பேசுகின்றது. நூலின் ஆசிரியர் இறப்பு எப்படி வந்தது என்பதை மிக எளிமையாகப் பதிவு செய்கின்றார்: ‘சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். அலகையின் பொறாமையால் சாவு உலகில் வந்தது.’ அதாவது, படைப்பின் தொடக்கத்தில் ஆதாம்-ஏவாள் பாம்பால் சோதிக்கப்பட்ட நிகழ்வை, அலகையின் பொறாமை என்று மொழிகின்றார் ஆசிரியர்.

 

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பிறரன்புச் செயல்களுக்காகவும் குழுமத்தின் வளர்ச்சிக்காகவும் பொருள் சேர்க்கும் பவுல், ‘அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்!’ இயேசுவின் மனுவுருவாதலை இப்படித்தான் புரிந்துகொள்கிறார் பவுல். நாம் வாழ்வு பெறுவதற்காக, வாழ்வின் கடவுள் இறப்பைத் தழுவிக்கொள்கிறார்.

 

இன்றைய நாள் தரும் பாடங்கள் எவை?

 

(அ) கடவுளை நோக்கிய தேடல்

 

கடவுளின் உடனிருப்பு நமக்கு நலத்தையும் வாழ்வையும் தருகிறது. சிறுமியின் தந்தை இயேசுவைத் தேடிச் செல்கிறார். இரத்தப் போக்குடைய பெண் கூட்டத்தை ஊடுருவி இயேசுவிடம் செல்கிறார். இறைவனை நோக்கிய நகர்வு வாழ்வை நோக்கிய நகர்வாக இருக்கிறது. இறைவனை விட்டு நீங்குகிற நகர்வு இறப்பை நோக்கியதாக இருக்கிறது. நம் வாழ்வில் இறைவனை நோக்கிய தேடல் முதன்மையாக இருத்தல் வேண்டும்.

 

(ஆ) மனித அவசரம் இறைத் தாமதம்

 

நம் அவசரத்திற்கு ஏற்றாற்போல கடவுள் செயலாற்றுவதில்லை. கடவுள் அவருக்கென்ற நேரத்தில் நன்முறையில் செயலாற்றுகிறார். கூட்டம், பணியாளர்களின் சொற்கள் என அனைத்தையும் கடந்து கடவுளால் செயலாற்ற முடியும். இதையே சபை உரையாளர், ‘கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்’ (காண். 3:11) எனப் பதிவு செய்கிறார்.

 

(இ) நம்பிக்கையை விட வேண்டாம்

 

நோய், முதுமை, இறப்பு, எதிர்மறை எண்ணங்கள், நிகழ்வுகள், மனிதர்கள் நடுவில் வாழும் வெகு எளிதாக நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். ‘கடவுளால்கூட ஒன்றும் செய்ய இயலாது!’ என்னும் விரக்திக்கும் சோர்வுக்கும் செல்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் செய்தி, ‘அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’ நம் வாழ்வில் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தரவும் முயற்சி செய்வோம்.

 

தீமை கண்டும், சாவு கண்டும், நோய் கண்டும் நாம் அஞ்சத் தேவையில்லை. இவை நம்மோடு இருந்தாலும், நமக்கு அருகில் இறைவன் இருக்கின்றார். கையை நீட்டி அவரைத் தொட்டாலோ, அவர் தன் கையை நீட்டி நம்மைத் தொட்டாலும் நாம் நலம் பெறுவோம்!

 

திருப்பாடல் ஆசிரியர் (காண். 30), ‘நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்!’ என்று பாடுகின்றார். நோய்கண்டு வருந்திய பெண் மகிழ்கிறார். மகளுக்கு மீண்டும் உயிர்பெற்ற தந்தை மகிழ்கிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: